LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா-ஒன்ராறியோ மாகாண அரசின் 2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டமானது வலுவான ஒன்ராறியோவை நிச்சயம் உருவாக்கும்

Share

ஸ்காபரோ – றூஜ் பார்க் மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் நம்பிக்கை

மார்ச் 23 அன்று, ஒன்ராறியோ அரசாங்கம் ‘வலுவான ஒன்ராறியோவை உருவாக்குதல்’ எனும் அடிப்படையில் ஒன்ராறியோவின் 2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினை வெளியிட்டது. இத்திட்டமானது ஒன்ராறியோவில் உட்கட்டமைப்புகளை உருவாக்குதல், முக்கியமான முதலீடுகளை ஒன்ராறியோவை நோக்கி ஈர்த்தல், சேவைகளை மேம்படுத்துதல் போன்றவற்றின் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்கில் வெளியிட்டுள்ளது. இவ்வரவுசெலவுத் திட்டமானது ஒன்ராறியோ மக்களுக்கும் வணிகங்களுக்கும் முன்னுரிமைகளை வழங்கும் அதேவேளையில், ஒன்ராறியோவின் பற்றாக்குறையை நீக்குவதற்கு வழியமைக்கும்.

ஒன்ராறியோ அரசாங்கமானது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், வணிக செலவுகளைக் குறைக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், எதிர்கால தேவைக்கான உட்கட்டுமான திட்டங்களை விரைவுபடுத்தவும் இத்திட்டத்தினை சமர்ப்பித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தை விரும்பும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் முதலீட்டுச் செலவுகளைக் குறைக்கும் நோக்கோடு ஒன்ராறியோ அரசாங்கம் உற்பத்தி முதலீட்டு வரிச் சலுகையை கொண்டுவந்துள்ளது.

எமது மாநிலத்திலுள்ள குடும்பங்களினதும் வணிக நிறுவனங்களினதும் நலன்கருதி நாம் அடுத்த 10 ஆண்டுகளில் சாலைகள், நெடுஞ்சாலைகள், பொதுப்போக்குவரத்து, மருத்துவமனைகள், பள்ளிகள், நீண்ட கால பராமரிப்பு இல்லங்கள் போன்றவற்றை அமைப்பதற்கென 180 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளோம்.

எமது தொழிலாளர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை எமது அரசாங்கம் எடுத்து வருகின்ற வழிகளாவன:

2023ஆம் ஆண்டிலிருந்து 100 இளங்கலைப் பட்டப்படிப்புக்கான இடங்களை சேர்க்கவும், ஒன்ராறியோவில் அல்லது வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற ஒன்ராறியோவின் குடியிருப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 2024ஆம் ஆண்டிலிருந்து 154 முதுகலை மருத்துவப் பயிற்சி இடங்களையும் சேர்க்கவும் மேலதிகமாக 33 மில்லியன் டொலர்களை வழங்குகிறது. மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகளுக்கு ஒன்ராறியோவின் குடியிருப்பாளர்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும். இந்நிதி குறிப்பிடத்தக்க வகையில் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ வளாகத்தில் உள்ள ஸ்காபரோ ஒருங்கிணைந்த மருத்துவ சுகாதார கல்லூரிக்கு (Scarborough Academy of Medicine and Integrated Health – SAMIH) வழங்கப்படும்.

224 மில்லியன் டொலர்களை பயிற்சி மையங்களுக்கு ஒதுக்கியுள்ளதன் மூலம், தொழிற்பயிற்சிக்கூடங்களை விரிவுபடுத்தவும் அதிதிறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கான பயிற்சியை அளிக்க நிபுணத்துவம் வாய்ந்த தனியார்துறையை மேம்படுத்தவும் உதவியளிக்கப்படும்.

ஒன்ராறியோவில் குடியேற விண்ணப்பிப்போருக்கான திட்டத்துக்கு கூடுதலாக 25 மில்லியன் டொலர்களை ஒதுக்கும் திட்டம்: மாநிலம் முழுவதிலும் உள்ள முக்கிய உட்கட்டுமானத் திட்டங்களைக் கட்டியெழுப்ப உதவுவதற்காக திறமையான புதிய குடிவரவாளர்களை அடையாளங்கண்டு நாம் பெற்றுக்கொள்ளவுள்ளோம்.

எமது சமுகத்தில் வாழும் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவியை வழங்குவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். அந்த வகையில்:
உத்தரவாதமிக்க ஆண்டு வருமானத்தினை விரிவாக்கம் செய்வதன் மூலம், ஜூலை 2024 முதல், மேலும் 100,000 முதியவர்கள் சுட்டுகளில் அடிப்படையிலான மாதாந்த நிதியைப் பெறுவதற்குத் தகுதி பெறுவார்கள்.

வீடற்ற நிலையை இல்லாதொழித்தல் மற்றும் பழங்குடியினருக்கான வீட்டுத் திட்டங்களுக்கு 200 மில்லியன் டொலர்களை ஒதுக்குதல் மூலம் அதிக மக்களுக்கான பாதுகாப்பான வீடுகளை உருவாக்குவதை உறுதிசெய்யப்படும்.

அத்துடன், எமது அரசு வழங்கும் அத்தியாவசியமான சேவைகளை அனைவரும் பெற்றுக்கொள்வதற்கு மருந்தகங்களிலுள்ள மருந்தாளுநர்கள் பொதுவான நோய்களுக்கு பெரும்பாலான மருந்துகளை பரிந்துரைக்க அனுமதியளித்து, ஒன்ராறியோ சுகாதாரத்துறையை அனைவரும் இலகுவில் அணுகும் வழியை உறுதிசெய்யப்படும்.

நோயாளர்கள் அல்லது முதியவர் வீட்டுப் பராமரிப்பு, மனநலம், போதை அல்லது வேறு செயல்களுக்கு அடிமையானோர் நலன், குழந்தை மருத்துவம் போன்றவற்றிற்கு கூடுதல் நிதி வழங்குதல்.

குழந்தைகள் நல திட்டங்களிலிருந்து அடுத்த கட்டத்துக்கு நகரும் வயது வந்த இளையோர்களுக்கு அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான நிதி நிலையை அவர்கள் உருவாக்குவதற்கு உதவும் விதத்தில் மூன்று ஆண்டுகளில் 170 மில்லியன் டொலர்கள் ஒதுக்கல்.

ஸ்காபரோ நிலக்கீழ் தொடரிவழித்தட விரிவாக்கம், ஸ்காபரோ சுகாதார கட்டமைப்பின் மேம்பாடு, ஸ்காபரோவில் முதன்முதலாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவப் பள்ளி போன்ற திட்டங்களின் மூலம் மேற்படி நிதியானது எங்கள் சமுகத்தில் பெரும் மாற்றங்களை உண்டுபண்ணுவதையிட்டு நான் பெருமை கொள்கிறேன்.

இங்ஙனம்
விஜய் தணிகாசலம்,
மாநில சட்டமன்ற உறுப்பினர்
ஸ்காபரோ – றூஜ் பார்க்