LOADING

Type to search

கனடா அரசியல்

மசோதா 104: தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டம் 2021ஐ பாதுகாப்போம்!

Share

தமிழின அழிப்பு மறுத்தலையும்; திரிபுபடுத்தலையும் எதிர்ப்போம்!

கனடியத் தமிழர் தேசிய அவை , கனடியத் தமிழ் இளையோர் அமைப்பு
கனடாத் தமிழ்க் கல்லூரி ஆகிய அமைப்புக்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிப்பு

 

மசோதா 104: தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டம் 2021ஐ பாதுகாப்போம்!

தமிழின அழிப்பு மறுத்தலையும்; திரிபுபடுத்தலையும் எதிர்ப்போம்!

கனடியத் தமிழர் தேசிய அவை , கனடியத் தமிழ் இளையோர் அமைப்பு
கனடாத் தமிழ்க் கல்லூரி ஆகிய அமைப்புக்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிப்பு

ஒன்ராறியோ சட்டப் பேரவையால் மே 2021இல் நிறைவேற்றப்பட்ட மசோதா 104: தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டம் 2021, அரசியலமைப்பிற்கு முரணானதெனத் தமிழின அழிப்பு மறுப்பாளர்களால் மீண்டும் ஒரு முறை சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ஆம் நாளன்று முடிவடையும் ஏழு நாட்களும் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் என இச்சட்டம் பிரகடனப் படுத்துகின்றது. இந்த வாரத்தில் ஒன்ராறியோ வாழ் மக்கள் தமிழின அழிப்பு பற்றியும் உலக வரலாற்றில நிகழ்ந்தேறியுள்ள மற்றைய இன அழிப்புக்கள் பற்றியும் கற்பதோடு அவை பற்றிய விழிப்புணர்வையும் ஊக்குவிப்பர்.

ஸ்காபுரோ-றூஜ் பார்க் தொகுதியின் ஓன்ராறியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான விஜய் தணிகாசலம் அவர்களால் மசோதா 104 ஏப்பிரல் 30, 2019இல் முன்மொழியப்பட்டது. அன்று தொட்டு இம் மசோதாவானது பல இடையூறுகளை எதிர்கொண்டுள்ளது. தமிழின அழிப்பை நடத்திய சிறீலங்கா அரசு பல வழிகளிலும் இதை தடுப்பதற்கு இடையூறுகளை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்த இடையூறுகளுக்கு மத்தியிலும் இன அழிப்பிலிருந்து மீண்டவர்கள், மாணவர்கள், இன அழிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உட்படத் தமிழ் மக்கள் அனைவரும் பொறுமையுடன் மூன்று ஆண்டுகளாக இம்மசோதாவிற்கு ஆதரவாக போராடி வந்துள்ளனர். இம்மசோதாவானது மூன்றாம் வாசிப்பை அடுத்து அனைத்துக் கட்சிகளின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டு, மே 12, 2022இல் ஒன்ராறியோ மாகணத்தின் சட்டமாக ஆக்கப்பட்டது.

தமிழின அழிப்பையும், அதனால் வரலாற்று ரீதியாக ஏற்பட்ட மன உழைச்சல் மற்றும் தலைமுறைகளுக்கு இடையேயான தாக்கம் ஆகியவற்றை மசோதா 104 ஒப்புக்கொள்வதால், அது நிறைவேற்றப்பட்ட போது அனைவரினதும் பேராதரவைப் பெற்றது. மேலும், சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கெதிராகத் தொடர்ந்தும் நடந்தேறிவரும் இன அழிப்பு விடயத்தில் கொள்கையளவிலும் நியாயத்தின்பாலும் இச்சட்டம் அமைந்ததோடு வருங்காலங்களில் இதுபோன்ற கொடுமைகளைத் தடுப்பதுபற்றி அறிவூட்டுவதாகவும் அமைந்துள்ளது. இவ்வாறாக தமக்கு நடந்தவற்றை மற்றவர்களும் உணர்ந்து கொள்ளுதல் மற்றும் ஒப்புக் கொள்ளுதல் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு மன ஆறுதலை ஏற்படுத்தும். தமிழின அழிப்பாலும் பிற இன அழிப்புக்களாலும் ஏற்பட்ட பேரதிர்ச்சியிலிருந்து மீழ்வதற்கு இன அழிப்பு பற்றிய கல்வியில் கவனம் செலுத்துவதற்கென வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் காலம் சட்டமாக்கப்பட்டமை தமிழின அழிப்பு மற்றும் பிற இன அழிப்புக்களாலும் மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்வர்கள் பரிகாரம் பெறும் பயணத்திற்கு உதவும்.

இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் சிறிது காலத்தின் பின்னர் தமிழின அழிப்பு மறுப்பாளர்கள், மசோதா 104க்கு எதிராகச் அரசியலமைப்புச் சவால் ஒன்றைத் தொடுத்தனர். அந்நியத் தலையீட்டோடு தமிழின அழிப்பை மறுப்பதற்கும் அதனைத் திரிபுபடுத்துவதற்குமான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மசோதா 104க்கு எதிர்பைத் தெரிவிக்கும் பொருட்டு சிறீலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் கனேடியத் தூது வரையும் சந்தித்தார்.

மசோதா 104ஐப் பாதுகாக்கவும் தமிழின அழிப்பை மறுப்பவர்களை எதிர்த்து நடவடிக்கை எடுக்கவும் 60க்கும் மேற்பட்ட அமைப்புக்களின் ஆதரவுடன் கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT), கனடியத் தமிழ் இளையோர் அமைப்பு (CTYA) மற்றும் கனடாத் தமிழ்க் கல்லூரி (CTA) கூட்டாக இடையீட்டாளர்களாகத் தமதுபக்க நியாயத்தை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க முன்வந்து செயல்பட்டனர். மசோதா 104இன் முக்கியத்துவத்தைச் சட்டரீதியில் இடையிட்டு வாதிடுவதற்கு Goldblatt Partners எனும் சட்ட நிறுவனத்தை தமிழ் கனேடிய சமூகம் அமர்த்தி உள்ளது.

மசோதா 104: தமிழின அழிப்பு கல்விவாரச் சட்டம் 2021, ஜூன் 28, 2022இல் ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. மதிப்புக்குரிய நீதிபதி ஜெ.ரி. அக்பர் அலி அவர்கள் மசோதா 104 ஆனது சட்டரீதியானது எனத் தீர்ப்பளித்து தமிழின அழிப்பு மறுப்பாளர்களால் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தார்.

எனினும், மசோதா 104 பற்றிய நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழின அழிப்பு மறுப்பாளர்கள் ஒன்ராறியோ மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இன அழிப்பு புரிவோர் அதனை எப்போதும் மறுப்பார்கள் என்பதனை வரலாறு எமக்கு மீண்டும் மீண்டும் புகட்டி வருகின்றது. தமிழின அழிப்பு மறுப்பாளர்கள், மசோதா 104ஐக் குறிவைத்து அதை இல்லாமல் செய்ய மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே முயற்ச்சிப்பது, அவர்கள் தமிழின அழிப்பால் பாதிக்கப்பட்டவர்களை மௌனமாக்குவதற்கு முனைப்போடு செயற்படுகின்றார்கள் என்பதனைக் எடுத்துக் காட்டுகின்றது.

மசோதா 104 நிறைவேற்றப்பட்டமை உலகெங்கணும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த மசோதா 104ஐ ஆதரித்து இடையீடர்களாக வாதாட நாம் எடுத்துள்ள முயற்சிக்கு வேண்டிய வழக்குச் செலவுக்கு நிதியுதவி வழங்குமாறு அனைவரிடமும் வேண்டி நிற்கின்றோம். நிதியுதவி வழங்க தயவுசெய்து https://www.gofundme.com/f/defend-bill-104 என்ற இணையத்தை அணுகவும். இந்த வருடம் மே 31ம் திகதிக்கு முதல் 100,000 டொலர்களைத் திரட்டுவதே எமது இலக்கு.

தமிழின அழிப்பு பற்றிய கல்வியைப் புகட்டுவதற்காக முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ள மசோதா 104 ஐ ஆதரித்து அதனைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.

இன அழிப்பில் இருக்கும் 10 படிநிலைகளில் அதனை மறுத்தலே கடைசி படிநிலையாகும். இந்த படி நிலையானது பொதுவாக இன அழிப்பு நடந்து கொண்டிருக்கும் போதும், அது நடந்து முடிந்த பின்பும் தொடர்வதை அவதானிக்கலாம். அத்தோடு எதிர்காலத்தில் கூட மீண்டும் ஒருமுறை இந்த குறிப்பிட்ட மக்களுக்கு எதிரான, ஒரு இன அழிப்பு நடைபெறலாம் என்பதை எடுத்துக் காட்ட வல்ல சிறந்த குறிகாட்டியாகவும் இந்த படிமுறை உள்ளது.

தமிழின அழிப்பு மறுத்தலையும்; திரிபுபடுத்தலையும் எதிர்ப்போம்!

இவ்வாறு கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT), கனடியத் தமிழ் இளையோர் அமைப்பு (CTYA)
கனடாத் தமிழ்க் கல்லூரி (CTA) ஆகிய அமைப்புக்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பெற்றுள்ளது