‘குமரன் நூறு’- கவிதை நூல் வெளியீடு
Share
-நக்கீரன்
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 30:
மலேசிய இந்திய சமுதாயத்தின் மூத்த அரசியல் தலைவரும் சமுதாயப் பற்றாளரும் சுகாதரத் துறை மேநாள் துணை அமைச்சருமான டான்ஸ்ரீ க.குமரன் அவர்களின் ‘குமரன் நூறு’ என்னும் கவிதைத் தொகுப்பு நூல் மார்ச் 25, காரிக்கிழமை மாலையில் பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெற்றது.
2007-இல் டான்ஸ்ரீ குமரன் அவர்கள் எழுபது வயதை எட்டியபொழுது பதியம் செய்யப்பட்ட இந்த இலக்கியப் பயிர், மிகமிக மெல்லமாக வளர்ந்து, இடையிடையே வாடி நின்று, 15 ஆண்டுகளுக்குப் பின் இப்பொழுதுதான் முழுதாக வளர்ந்து, மலேசியத் தமிழிலக்கியப் பூங்காவில் மணம் பரப்பும் வகையில் முழுதாக வளர்ந்து பூத்து குலுங்குகிறது.
1960-80ஆம் ஆண்டுகளில், இலட்சக் கணக்கான இந்திய தோட்டப் பாட்டாளிகளின் அடையாளச் சின்னமாக விளங்கிய தோட்ட மாளிகை, தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கு சொந்தமாக இருந்தது; அந்தச் சங்கம் நலிவடைந்த நிலையில், இந்த பாரம்பரியக் கட்டடம் இந்திய சமுதாயத்திடம் இருந்து கைநழுவ இருந்தது;
டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம்-டத்தோ பா.சகாதேவன் ஆகியோர் சிறப்பாக வழிநடத்தும் இந்தக் கூட்டுறவு சங்கம், தோட்ட மாளிகையைக் கையகப்படுத்தி, துன் சம்பந்தன் மாளிகையுடன் இந்த மாளிகையையும் மலேசியத் தமிழர்களின் இன்னோர் அடையாளமாக நிலைநிறுத்தி உள்ளது.
மலேசிய இந்தியர் காங்கிரஸ் இயக்கத்தின் தேசிய உதவித் தலைவராகவும் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகவும் விளங்கிய டான்ஸ்ரீ க.குமரன் அவர்களைப் பற்றி 100 கவிப் பெருமக்கள் புனைந்த கவிதைகளின் தொகுப்பு நூல்தான், குமரன்-100 என்னும் பெயரில் வெளியீடு கண்டுள்ளது.
மார்ச் 25, சனிக்கிழமை மாலையில் தோட்ட மாளிகை உள்ளே இலக்கியப் பூங்காற்று வீசிய வேளையில், வெளியே மெல்லிய மழைச் சாறல் அடித்துக் கொண்டிருந்தது. நூற்றுக் கணக்கில் திரண்டிருந்த சான்றோர் பெருமக்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த இலக்கிய நிகழ்ச்சி, செம்மாந்த முறையில் நடைபெற்றது.
கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிருவாக இயக்குநரும் செயலாளருமான மதிப்பிற்குரிய டத்தோ பா.சகாதேவன் இந்த நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றினார்.
டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரிய அறங்காவாலர்களில் ஒருவருமான டான்ஸ்ரீ குமரன், இந்த அறவாரியம் உருவான தொடக்க காலத்தில் கவிச்சுடர் காரைக்கிழார், கவிஞர் சீனி நைனா முகம்மது ஆகியோருடன் இணைந்து அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கிய பாங்கு என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கது என்று குறிப்பிட்டார்.
டான்ஸ்ரீ குமரன் அவர்களை முதன்முதலில் 1976-ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட்டில் சந்தித்தேன். அதுமுதல் இதுவரை அவரின் அன்பு வட்டத்திலும் நட்புத் தொடர்பிலும் இருப்பதாக டத்தோ சகாதேவன் கூறினார்.
இரண்டாவது உலகப் போர் நடந்த காலம் தொட்டு, அன்றைய மலாயா முதல் இன்றைய நவீன மலேசியாவரை ஏராளமான வரலாற்று சம்பவங்களை கடந்து வந்துள்ள டான்ஸ்ரீ குமரன் அவர்கள், சமுதாயப் பற்றும் மொழிப்பற்றும் மிக்க ஆளுமை ஆவார்.
குமரன் 100 நூலில் இடம்பெற்றுள்ள 100 கவிதைகளைப் புனைந்த கவிஞர்களில் 32 பேர், இப்பொழுது நினைவில் வாழ்கின்றனர். உள்நாட்டுக் கவிஞர்களுடன் தஞ்சை ஔவைக் கோட்ட நிறுவனர் முனைவர் கலைவேந்தன் உள்ளிட்ட ஒருசில வெளிநாட்டு கவிஞர்களின் படைப்பும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசியல் தலைவர்கள் எவரும் கலந்துகொள்ளாத இந்த நிகழ்ச்சி, முழுமையான இலக்கியசாயலைக் கொண்டிருப்பதாகவும் டத்தோ சகாதேவன் பேசினார்.
கவிஞர் கு.தேவேந்திரனின் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை, பாஸ்கரன் வழிநடத்தினார். மஇகா மேநாள் தேசியத் தலைவரும் சுகாதாரத் துறை மேநாள் அமைச்சருமான டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் சிறப்புரை ஆற்றியபின், ஏற்புரை வழங்கிய டான்ஸ்ரீ குமரன், இந்த நூலைத் தொகுத்த ஆர். மாறனுக்கு நன்றி தெரிவித்தார். ‘பாப்பா கவிஞர்’ முரசு நெடுமாறன் உள்ளிட்ட கவிவாணர்களும் டத்தோ ஆ.சோதிநாதன் பா.கு.சண்முகம் போன்ற இலக்கிய ஆர்வலர்களும் இதில் கலந்து கொண்டனர்.
தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியம் இந்த நூல் வெளியீட்டுச் செலவை ஏற்றுக்கொண்ட நிலையில், அச்சீட்டு செலவை செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் ஏற்றுக்கொண்டார். தமிழவேள் கோ.சாரங்கபாணி அறிவாரியம், இந்நூலை வெளியிட்டது.