இலங்கையில் அரசியல் போர் நிறுத்தம் சாத்தியமா?
Share
வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
- நெப்பொலியனையோ ,துட்டகமுனுவையோ காணவில்லை.
- பொருளாதார மீட்சிக்குள் இனக் கலவரத்திற்கும் தூபம்.
- வடக்கு கிழக்கிலும் ,மலையகத்திலும் ஏக காலத்தில் காணி அபகரிப்பு.
சிங்கள ஆளும் வர்க்கம் தமிழ்த் தலைமைகளையும் தமிழ் மக்களையும் மிக ஆழமாகவேத் தெரிந்து வைத்துள்ளது. அதேபோல் தென்னிலங்கையில் சிதறுண்டு கிடக்கும் சிங்களத் தலைமைகளையும் சிங்கள மக்களையும் மிகச் சரியாகவே கணித்து வைத்துள்ளது.
தமிழ் மக்களைப் பொருத்து சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு சவால் நிறைந்ததாக இருந்தபோதும் இந்தியா உற்பட சர்வதேசத்தின் நேசக் கரம் தாராளமாகக் கிடைத்ததினால் வெற்றி கொள்ள முடிந்தது. தமிழ் மக்களுக்கு எதிராக தென்னிலங்கையும் கட்சி பேதங்களுக்கப்பால் சிங்கள ஆளும் வர்க்கத்துடன் கைகோர்த்துப் பயணித்தது.
சிங்கள ஆளும் வர்க்கம் இலங்கை அரசியலில் தமக்கு எதிரான சக்திகளை துவம்சம் செய்து கடந்த 75 வருடங்களாக இலங்கை அரசியலில் கோலோச்சி வருகின்றது.
ஆனால் கடந்த வருடம் தென்னிலங்கையில் எழுச்சி பெற்ற ‘அரகலய‘ போராட்டம் சிங்கள ஆளும் வர்க்கத்தின் அத்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்த போராட்டமாக அமைந்தது.மொத்தத்தில் இது தென்னிலங்கையின் மாபெரும் எழுச்சிப் போராட்டமாக அமைந்தது.
பிரான்சியப் புரட்சியின்போது புரட்சிக் குழந்தையை தத்தெடுத்து புரட்சியாளருக்குத் தலைமை தாங்க நெப்போலியன் பொனபாட் என்ற மாவீரன் களத்தில் இறங்கினார்.புரட்சி வெற்றி பெற்றது.
- நெப்பொலியன் தோன்றவில்லை
ஆனால் ‘அரகலய‘ எழுச்சிக்கு தலைமைறே;று வழிநடத்த நெப்பொலியன் போன்றதொரு தலைவனைக் காண முடியவில்லை. தமிழர்களுக்கு எதிரான போராட்டமாக இருந்தால் பல துட்டகமுனுக்கள் களம் இறங்கி இருப்பர். துரதிஷ;டவசமாக அரகலய தென்னிலங்கை சிங்கள ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்டமாக இருந்ததினால் ஒரு துட்டகமுனுவைக்கூடக் காணவில்லை.அரகலய எழுச்சியும் வந்த வேகத்தில் மறைந்துவிட்டது.
ஆரகலய எழுச்சி ஏற்பட்டபோது சிங்கள ஆளும் வர்க்கம் ஆட்டம் கண்டது என்பது உண்மையே. ஆனால் ஒரு சில வாரங்களுக்குள்ளேயே சிங்கள ஆளும் வர்க்கம் தன்னைச் சுதாகரித்துக் கொண்டதுடன் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையை ஏற்று தம்மை இலங்கை அரசியலில் நிலைநிறுத்திக் கொண்டது.
ரணில் – ராஜபக்ஷ அரசாங்கம் பல முனைகளில் களத்தைத் திறந்து தமது செயற்பாடுகளை வடிவமைத்துக் கொண்டு முன்னோக்கிப் பயணிக்க முயல்கின்றது.
மக்களின் ‘வயிற்றை இறுக்கியுள்ள‘ ரணில் – ராஜபக்ஷ ஆளும் அணியினர் மறுபுறம் மக்களின் ‘பொக்கட்டுக்களில்‘; இருந்து ஈவிரக்கம் இன்றி வரி அறவீட்டை மேற் கொண்டு வருகின்றது.
- தேர்தல் இல்லை
இதற்குச் சமாந்தரமாக மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு சமாதி கட்டும் அதே வேளையில் மக்களின் வாக்குரிமையிலும் கைவைத்துள்ளது. நாட்டில் நடைபெற உள்ள எந்தத் தேர்தலும் ரணில் – ராஜபக்ஷ அணியினருக்கு சாதகமாக அமையாது என்ற யதார்த்த நிலையை உள்வாங்கிக் கொண்டு இப்போதைக்கு தேர்தல் இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளனர்.
- பயங்கரவாத தடுப்புச் சட்டம்
இவைகளுக்குச் சமாந்தரமாக ஆட்சியாளர்களுக்கு எதிரான நியாயமான அனைத்து குரல்களையும் நசுக்கும் பயங்கரவாதத்திற்கெதிரான சட்ட மூலத்தைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். தற்காலிக ஏற்பாடாக கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் கடந்த 40 வருடங்களுக்கு மேல் காலத்துக்குக் காலம் நீடிக்கப்பட்டு அரை நூற்றாண்டை எட்டி நிற்கின்றது. இந்தச் சட்டமூலத்தின் கொடூரத்தை தமிழ் மக்கள் இன்றுவரை அனுபவித்து வருகின்றனர். இதுவரை தமிழ் மக்களுக்கெதிராக கூடுதலாகப் பிரயோகிக்கப்பட்ட இந்தச் சட்டம் தற்போது தென்னிலங்கை நோக்கி முழுமையாகப் பாய்ந்துள்ளது.
- பயங்கரவாதத் தடைச்சட்டம் போதாது
சுதந்திர இலங்கையின் 75 வருடகால சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் போதாது என்ற நிலைப்பாட்டுக்கு சிங்கள ஆளும் வர்க்கம் வந்துள்ளது.. எனவே தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு அப்பால் இறுக்கமான சட்ட ஏற்பாடுகள் குறித்து அவசரஅவசரமாக கவனம் செலுத்தி வருகின்றது.இதன் எதிரொலியே புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம்குறித்த முன்மொழிவை அரசாங்கம் வர்த்தமானியில் பிரசுரித்துள்ளது.
- ஜனாதிபதியின் பெரு விரலுக்குள் அதிகாரம்?
இந்தப் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் தென்னிலங்கையில் மாத்திரமல்ல வடக்குக் கிழக்கு உற்பட முழு இலங்கையையும் மிக இலகுவில் ஜனாதிபதியின் பெரு விரலின் அழுத்த விசைக்குள் அடக்கிவிடும் வல்லமை பொருந்தியது. மொத்தத்தில் பாதுகாப்பு படைத்தறையின் இரும்புக் கவசத்திற்குள் முழு இலங்கையும் சிறை வைக்கப்படப் போகின்றது. அதாவது இந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்பது ‘அரச பயங்கரவாதத்தினை‘ முன்னெடுத்துச் செல்வதற்கான முழமையான சட்ட கவசத்தை வழங்கப் போகின்றது.
- சட்டரீதியாக புனிதர்களாக பிரகடனப்படுத்த ஏற்பாடு?
அதே வேளையில் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டுவந்த சக்திகள்குறித்தும் நாட்டை சூறையாடியவர்கள்குறித்தம் ரணில் – ராஜபக்ஷ அணியினர் பேச மறுக்கின்றனர்.
மறுபறம் அரசியல்வாதிகள் மீதும் தலைவர்கள் மீதும் ஊழல்கள் கொள்ளைகள்குறித்து குற்றம் சுமத்துபவர்கள் மீதுநடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஆளும் தரப்பினர் அதிகமாகவே இப்பொழுது பேசத் தொடங்கியுள்ளனர்.
மொத்தத்தில் ரணில் – ராஜபக்ஷ அணியினர் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்திற்கூடான சட்ட விதிகளின் மூலம் தாம் “புனிதர்கள் “என தம்மைத்தாமே சட்டரீதியாக பிரகடனப்படுத்திக் கொள்ள காய்களை நகர்த்துகின்றனர்.
ஊழலுக்கெதிராக சட்டம் கொண்டுவரப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகின்றபோதும் இந்த சட்ட எல்லைக்குள் இதுவரை இடம்பெற்ற ஊழல்கள் கொள்ளைகள் சூறையாடல்கள்குறித்த விடயங்கள் உள்வாங்கப்படுமா என்பதுகுறித்த விடயங்கள் பேசப்படவில்லை.
மக்களை வருத்தியும் ஆபத்தான வரிவிதிப்புக்குள் மக்களை தள்ளியும் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுத்தும் கொள்ளையர்களையும் நாட்டையும் சூறையாடியவர்களையும் காப்பாற்றிக் கொண்டு மக்களை தம்பக்கம் வென்றெடுக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் காய்களை ரணில் – ராஜபக்ஷ அணியினர் நகர்த்தி வருகின்றனர். மறுபுறம் தாமே மீட்பர் எனறபாணியில் செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.
- தாமே மீட்பர்?
இன்றைய போராட்டங்கள் பொதுமக்களைஅசௌகரியத்திற்குட்படுத்துகின்றன.பொது மக்களுக்கு இடைஞ்சலாக உள்ளன. பொது மக்களின் அன்றாட வாழ்வுக்கு இடையூராக உள்ளது.அரசாங்கத்தின் தேசிய நலன் நோக்கிய நகர்வுக்கு எதிர்ப்பாளர்கள் தடைக்கல்லாக இருக்கின்றனர் என்ற கருத்தியலை அரசதரப்பு மிக வேகமாக பரப்புரை செய்து வருகின்றது. ரணில் – ராஜபக்ஷ அணியினர் ஓரணியில் நின்று ஒரே குரலில் இந்தப் பரப்புரையில் ஈடுபடுகின்றனர்.
இதற்கு ஏற்றாற்போல் பொலிசார் எதிர்ப்பாளர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிராக நீதி மன்றத் தடைகளை தொடர்ச்சியாகப் பெற்றும் அதனை பகிரங்கமாக அறிவித்தும் போராட்டங்களை அடக்கியும் வருகின்றனர்.
அண்மைக் காலமாக எந்த ஒரு போராட்டமும் முழுமையாக வெற்றி பெற்றதாக இல்லை. பொலிசாரின் கண்ணீர்ப் புகைக் குண்டுகளுக்குள்ளும் நீர்த்தாரைப் பிரயோகங்களுக்குள்ளும் போராட்டங்கள் சிதறுண்டு பாதியிலேயே முடிவடைகின்றன.
ஆனால் போராட்டங்கள் தொடர்கின்றன.
உண்மையில் இவை அணைத்தும் அன்றாடம் நடைபெறும் வெற்றிபெறா நிகழ்வுகளாகப் போய்விட்டன. மக்களும் சலிப்பையும் ஏமாற்றத்தையும் நாளாந்தம் சுமந்தவர்களாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
இவைகளுக்கு மத்தியில் விலைக் குறைப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
சமீப வாரங்களில் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது
சுற்றுலாத் துறை உயர்ந்து வருகிறது, பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு குறைந்து வருகிறது. ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு என்பன தொடர்ந்து இடம்பெறுமாயின் வரும் மாதங்களில் பணவீக்கம் கணிசமாகக் குறையும் என கூறப்படுகின்றுது.
ஆனால் இந்தப் பொருளாதார மீட்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்று ஆளும்தரப்பில் குற்றம் சுமத்தப்படுகின்றது. ஏனெனில்
சமீபத்தியதொழிற்சங்கநடவடிக்கைகள்சக்திவாய்ந்ததாகவும் அழிவுகரமானதாகவும் இருக்கின்றன.ஆனால் அரசாங்கம் பின்வாங்காது பொருளாதார மீட்சி நோக்கி முன்னோக்கிச் செல்கின்றது என்றும் கூறப்படுகின்றது.
இந்த ஒரு பின்னணியில் இலங்கையின் அரசியல் களத்தில் மோதிக் கொண்டிருக்கும் கட்சிகள் பொருளாதார மீட்சிக்கென ஒன்றிணைந்தால் என்ன என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
சீர்திருத்தத்திற்கான அரசியல் ஆணை என்பது ஒரு மாயை.
சுதந்திரவரலாற்றில்ஏற்பட்டுள்ளமோசமான பொருளாதார நெருக்கடியானது
இலங்கை ஒன்றுபட வேண்டும் அல்லது அழிய வேண்டும். வேறு வழியில்லை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதற்கு இன்று இலங்கைக்கு தேவைப்படுவது அரசியல் போர் நிறுத்தம் என்ற தீர்வும் முன் வைக்கப்படுகின்றது.
இது சாத்தியமாகுமா என்பதே இன்றைய கேள்வியாகும்.
ஏனெனில் இலங்கையில் அரசியல் சக்திகள் ரணில் – ராஜபக்ஷ அணி ,சஜித் அணி ,ஜேவிபி அணி மற்றும் பெதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்த அணி ,’அரகலயா‘ என சிதறுண்டு கிடக்கின்றன. இந்த அணியினர் ஒவ்வொருவரும் தமக்கான அரசியல் நிகழ்ச்சி நிரல்களை சுமந்து கொண்டு நாடாளுமன்ற ஆசனங்களுக்கான கனவுகளில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.
அதாவது ரணில் – ராஜபக்ஷ ஆளும்தரப்புக்கெதிராக நேச சக்திகளாக ஒன்றுபட வேண்டிய தென்னிலங்கையின் எதிர்த் தரப்பு அரசியல் சக்திகள் தாம் பிரிந்து நின்று கொண்டு மக்களை ஒன்றிணைந்து போராட வருமாறு அழைப்புவிடுத்து நிற்கின்றன.
- Do Or Die பாணியில் ஆளும்தரப்பு பயணம்.
மக்களையும் எதிர்தரப்பு அரசியல் சக்திகளையும் வேருடன் பிடுங்கிச் சாய்த்து அரசியலில் தம்மை தக்கவைத்துக் கொள்ள வியூகங்களை வகுத்து எதேச்சதிகாரபாணியில் ரணில் – ராஜபக்ஷ அணியினர் Do Or Die பாணியில் அரசியல் செய்கின்றனர்.
இந்த ஒரு பின்னணியில் அரசியல் போர் நிறுத்தம் சாத்தியமாகும் நிலை இல்லை.
- இனமுரண்பாட்டுக்குத் தூபம்
மறுபுறம் இனமுரண்பாட்டுக்குத் தூபம்போட்டு அரசியலில் குளிர்காய ஒருதரப்பு முனைப்புடன் செயற்படுகின்றது. தமிழர் பிரதேசங்களில் காணி அபகரிப்பு பௌத்தமயமாக்கல் என்பன கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுக்கு கைகோர்த்துப் பயணிக்க அழைப்பு விடுத்து நிற்கும் ரணில் – ராஜபக்ஷ ஆளும் தரப்பு நாடு திவாலாகிப்போன நிலையிலும் தமிழர் பிரதேசங்களில் கோவில் சிலை உடைப்புக்களையும் புத்தர் சிலைகளை பிரதிஷ;டை செய்வதிலும் காணி அபகரிப்புகளை மேற் கொள்வதையும் தங்குதடையின்றி மேற் கொள்கின்றமை விசித்திரமாக உள்ளது. இந்த விவகாரத்தில் ரணில் – ராஜபக்ஷ அணியினருடன் கைகோர்த்து இணக்க அரசியல் நடத்தும் வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் மக்களுக்குக் கூறப்போகும் பதில் என்ன?
- மலையகத்தில் காணி பகிர்வு
இதற்குச் சமாந்தரமாக மலையகத்திலும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான காணிகளை தனியாருக்கு வழங்கும் திட்டத்தையும் அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது. இந்தத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாள குடும்பங்களின் எதிர் காலம் மற்றும் அவர்களது வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கி காணி பகிர்ந்தளிப்பு நடைபெறுகின்றது. ரணில் – ராஜபக்ஷ ஆளும் தரப்புடன் இணைந்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதன் அமைச்சர் மக்களுக்குக் கூறப்போகும் பதில் என்ன?.
- ஜனாதிபதியின் இரட்டை வேடம்
மறுபுறம் நாட்டின் முன்னேற்றம் பொருளாதார மீட்சியில் மாத்திரமல்ல இன விவகாரத்துக்குத் தீர்வு காண்பதிலுமே தங்கியுள்ளது என ஜனாதிபதி மீண்டும் மீண்டும் கூறுகின்றார்.
மொத்தத்தில் பொருளாதார மீட்சி இனவிவகாரத்துக்கான தீர்வு என்ற போர்வையில் ரணில் – ராஜபக்ஷ அரசாங்கம் இலங்கை அரசியலில் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கான பாதையை அமைப்பதிலேயே முனைப்பாக இருக்கின்றனர்.
உண்மையில் இவர்கள் எவருமே நாட்டின் மீட்பர்களாக மக்களுக்குத் தெரியவில்லை.