பொருளாதார ரீதியாகத் வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ள இலங்கை
Share
இலங்கையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மாறி மாறி ஆட்சியில் அமர்ந்திருந்த முதலாளித்துவ மற்றும் இனவாதக் கட்சிகள் நாட்டின் பொருளாதாரத்தையும் இனங்களுக்கிடையிலான நல்லுறவை எவ்வாறு சீரழித்தன என்பதையையும் இன்றைய பொருளாதார மற்றும் அரசியல் நிலையையும் இந்தக் கட்டுரை சுட்டிக் காட்.டுகின்றது.-நன்றி வானவில் சஞ்சிகை
பொருளாதார ரீதியாகத் வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ள இலங்கை பல மாதங்களாக பகீரதப் பிரயத்தனம் செய்து சர்வதேச செட்டியாரான சர்வதேச நாணய நிதியத்திடம் 2.9 பில்லியன்கள் கடன் பெற ஒப்புதல் பெற்றுள்ளது. (அமெரிக்கா உலகம் முழுவதும் நடத்தி வரும் ஆக்கிரமிப்புச் செயல்களுக்கு பில்லியன் கணக்காக நிதி வழங்கி வரும் இத்தகைய நிதி நிறுவனங்கள் இலங்கை போன்ற நாடுகளுக்கு உதவி செய்ய எத்தனை இழுத்தடிப்புகள் செய்கின்றன.
இந்தக் கடன் தொகை நான்கு வருடங்களில் பகுதி பகுதியாகப் பிரித்து வழங்கப்படும். இந்தக் கடனை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம் இந்தச் சின்னஞ்சிறிய இலங்கை மீது தாங்க முடியாத கடுமையான நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அவற்றில் சில:
கடன் மறுசீரமைப்பு திட்டம் ஏப்ரல் இறுதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் நியமங்களுக்கு அமைவாக ஊழலுக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்
அரச வருவாயை மிக விரைவில் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்
அதிக வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து அதிக பங்களிப்புடன் செல்வ வரி விதித்தல்
2025க்குள் சொத்து மற்றும் சொத்து பரிமாற்ற வரி அறிமுகம்
2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் பணவீக்கத்தை 12மூ -18மூ ஆகக் குறைக்க இலக்கு
ஜூன் மாத இறுதிக்குள் தற்போதைய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்
நாணய மாற்று விகித நெகிழ்வுத்தன்மையை பராமரித்தல்
மத்திய வங்கியை மேலும் சுதந்திரமாக்குதல்
வலுவான சமூக பாதுகாப்பு வலையமைப்பை அறிமுகப்படுத்துதல்
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கிணங்க இலங்கை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் உள்ள முக்கியமான நிறுவனங்கள் சிலவற்றையும் தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளது. அந்த நிறுவனங்களானவை:
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம், டெலிகொம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்,, ஹோட்டல் டெவலப்மெண்ட் லங்கா நிறுவனம் (கொழும்பு ஹில்டன் ஹோட்டல்), லிற்றோ காஸ் நிறுவனம், லங்கா ஹொஸ்பிடல் கூட்டுத்தாபனம், பி.எல்.சி. ஆகிய நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படவுள்ளன.
இந்த நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கிவிட்டது. அது மாத்திரமின்றி, நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரச ஊழியர்களின் தொகையிலும் குறைப்புச் செய்யப்படவுள்ளது. விரைவில், கல்வி, சுகாதாரம், வங்கிகள் போக்குவரத்துச் சேவை என்பனவும் தனியார்மயப்படுத்தப்படலாம். வசதி குறைந்தவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சமுர்த்தி நிதியும் வெட்டப்படலாம்.
அரசாங்கம் நாணய நிதியத்தின் உத்தரவுக்கமைய எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள் குறித்து இலங்கையின் எந்தவொரு – வலது – இடது – தேசியவாத – அரசியல் கட்சிகளும் தமது ஆட்சேபனையைத் தெரிவிக்கவில்லை. அதற்குக் காரணம், இந்த அரசியல் கட்சிகள்தான் ‘அரகலய’ என்ற பெயரில் ஏகாதிபத்தியம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சித் திட்டத்தில் ஈடுபட்டு, ஆட்சி மாற்றத்தின் ஊடாக இத்தகைய ஒரு நிலை ஏற்படுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தவர்கள்.
ஏகாதிபத்திய சக்திகள் இலங்கை மீது தற்பொழுது சர்வதேச நாணய நிதியம் மூலம் ஏற்றியுள்ள சுமை திடீரென்று ஏற்பட்டதல்ல. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே இதற்கான முயற்சிகள் நடந்து வந்துள்ளன.
1953 இல் டட்லி சேனநாயக்கவை பிரதமராகக் கொண்டு அமைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க காலத்தில் இவ்வாறான முயற்சி ஒன்று முயற்சிக்கப்பட்டது. அப்பொழுது அந்த அரசாங்கத்தில் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தாய்மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன நிதியமைச்சராக இருந்தார். அரசியலில் ‘குள்ளநரி’ என வர்ணிக்கப்படும் ஜே.ஆர்., மிகுந்த அமெரிக்க விசுவாசியும் ஆவார். மக்கள் விரோத நடவடிக்கைகளை துணிச்சலுடன் எடுக்கக் கூடியவர்.
இன்று இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது போல அன்றும் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. அந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இன்னொரு உலக வட்டிக்கடைக்காரனான உலக வங்கி இலங்கைக்கு சில ஆலோசனைகளை முன்வைத்தது. அதன்படி, நிதியமைச்சர் ஜே.ஆர்., இலங்கை மக்களுக்கு வழங்கி வந்த பங்கீட்டு அரிசியின் விலையை மும்மடங்காக்கினார், தபால் தந்தி மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களை உயர்த்தினார், பாடசாலைப் பிள்ளைகளுக்கு மதிய வேளையில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த பணிசை நிறுத்தினார். இவ்வாறு இன்னும் பல மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்தார்.
இதனால் இடதுசாரித் தொழிற்சங்கங்களில் அமைப்பு ரீதியாக அணிதிரண்டிருந்த இலங்கைத் தொழிலாளி வர்க்கம் ஐ.தே.க. அரசுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தையும், முழு அடைப்பையும் ‘ஹர்த்தால்’ என்ற பெயரில் 1953 ஆகஸ்ட் 12 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் நடத்தியது. தொழிலாள வர்க்கம் நடத்திய இந்தப் போராட்டத்துக்கு முழுநாட்டு மக்களும் ஆதரவளித்தனர். அதன் காரணமாக டட்லியின் அரசு கவிழ்ந்தது. அவர் நாட்டை விட்டு ஓடினார். இதனால் உக வங்கி இலங்கையில் மேற்கொள்ளவிருந்த நாசகாரத் திட்டங்கள் தவிடுபொடியாகின.
ஆனால், ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1977 தேர்தலின் மூலம் நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாகிய பின்னர், ஏகாதிபத்திய பொருளாதார நிறுவனங்களின் கொள்ளைக்காரத் திட்டங்களை ‘திறந்த பொருளாதாரக் கொள்கை’ என்ற பெயரில் மீண்டும் நடைமுறைப்படுத்த முயற்சிகள் எடுத்தார். அதன் காரணமாக நாட்டின் செல்வங்களை அந்நியர் வாரிச் சென்றதுடன், அந்நியக் கடன்களால் நாடு பாரிய கடனாளியாகவும் மாறியது. ஜே.ஆர். செய்த கைங்கரியத்தின் (அளவற்ற கடன் வாங்கியதின்) தொடர்ச்சியே நாடு இன்று எதிர்நோக்கும் திவால் நிலைமையாகும்.
ஜே.ஆரின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு 1994 இல் மக்கள் முடிவு கட்டினர். ஐ.தே.கவை விரட்டியத்த மக்கள், 2015 வரை சுமார் 20 வருடங்கள் அந்த நிலையைப் பாதுகாத்தனர். இருந்தும் இந்தக் காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த சந்திரிக மற்றும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுகள் நாட்டை சுயசார்புப் பொருளாதார நிலைக்கு இட்டுச் செல்லும் அடிப்படையான மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவ்வரசுகள் – குறிப்பாக மகிந்த ராஸபக்ச தலைமையிலான அரசு – ஏகாதிபத்திய பொருளாதார நிறுவனங்கள் தாம் நினைத்தபடி இலங்கையில் செயல்பட அனுமதிக்கவும் இடம் கொடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா தலைமையிலான மேற்குலக சக்திகள் திட்டமிட்ட முறையில் மகிந்த ராஜபக்சவை 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடித்து தமக்கு இசைவான ஆட்சியொன்றைக் கொண்டு வந்தனர். ஆனால் அந்த அரசின் செயல்பாடுகளை ஏற்காத மக்கள் அடுத்து வந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை அமோக வெற்றிபெற வைத்து, மேற்குலக சக்திகளின் திட்டங்களுக்கு ஒரு தடையை ஏற்படுத்தினர்.
இந்த நிலைமையில் அரசியலுக்குப் புதியவரான கோத்தபாய ராஜபக்ச நாட்டை பொருளாதார தன்னிறைவை நோக்கி சில நடவடிக்கைகள் எடுக்க முயன்றாராயினும், அவரது தூர நோக்கு அற்ற , திட்டமிடாத நடவடிக்கைகளாலும், ஏகாதிபத்திய சக்திகள் திட்டமிட்டு உருவாக்கிய செயற்கைப் பொருளாதார நெருக்கடியாலும், அவர் ஆட்சியைத் தொடர முடியாத சூழல் உருவானது. அவரது தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவதில் அமெரிக்கா தனது உள்ளுர் அடிவருடிகள் மூலம் நடத்திய ‘அரகலய’ என்ற போராட்டம் ஒரு முக்கிய பங்கை வகித்தது. இதில் ஈடுபட்டவர்கள் இன்று உண்மையை மறைத்தாலும் இந்த விடயம் வருங்காலத்தில் அம்பலத்துக்கு வந்தே தீரும்.
ஏகாதிபத்தியவாத சக்திகள் திட்டமிட்டு உருவாக்கிய ஆட்சி மாற்றத்தின் மூலம், சர்வதேச நாணய நிதியம் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களின் கொத்தடிமையாக இன்று இலங்கை மாற்றப்பட்டுள்ளது. அவர்களுக்கு வசதியான இலங்கையின் பொருளாதாரச் சூழலும், அவர்களுக்கு விருப்பமான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், அவர்கள் தாம் நினைத்ததை இலங்கையில் சாதிப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.
பல மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்டது போலவே, இலங்கையும் இந்த ஏகாதிபத்திய நிறுவனங்களின் செயற்பாட்டால் விரைவில் முன்பிருந்ததை விட மோசமான வங்குரோத்து நிலையை அடைவதை நாம் பார்க்கத்தான் போகிறோம். அதுவரையும் இலங்கையின் முதலாளித்துவ சக்திகள் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள 2.9 பில்லியன் கடனுதவி இலங்கையில் சொர்க்கத்தை உருவாக்கி, நாட்டில் தேனும் பாலும் ஓட வைக்கும் என மக்களுக்குப் பொய் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் நதிகள் ஒருபோதும் பின்நோக்கிப் பாய்வதில்லை.