பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்
Share
(ஒரு சிறப்பு கள ஆய்வுக் கட்டுரை)
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்
இலங்கையில் இன்று நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு முன்னேற உலக நாடுகளிடம் இருந்து கடன்களையேனும் பெற்று மீளத்துடிக்கும் நிலையில் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் சுயதொழிலில் ஈடுபடும் பெண் தலைமைகளின் நிலையும் தினக்கூலிகளாக பணியாற்றும் பெண்களின் வாழ்வாதாரமும் மிக மோசமாக உள்ளதோடு போதிய ஒத்துழைப்பு இன்றியுமே காணப்படுகின்றது.
இலங்கையில் போர் ஓய்ந்து 13 ஆண்டுகளானாலும் அதனால் ஏற்பட்ட அதிகரித்த பாதிப்புக்களில் இந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நெருக்கடியும் ஒன்றாகும். போரின் காரணம் மட்டுமன்றி வீதி விபத்துக்கள், கொடிய நோய்களினாலும் ஏற்பட்ட இறப்பின் காரணத்தோடு குடும்ப பிரிவுகளினாலும் இந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் எண்ணிக்கை இலங்கை முழுவதுமே காணப்பட்டாலும் போரின் காரணமாக வடக்கு கிழக்குப் பகுதியிலேயே பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர்.
இவ்வாறு காணப்படும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தமது அடிப்படை வாழ்வியலிற்காக ஓர் தொழிலில் மேற்கொள்வதில் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களும் மிக அதிகமாகவே உள்ளது. இதனை இனரெர் நியூஸ் நிதி அனுசரணையில் களவிஜயங்களை மேற்கொண்டு செய்தியாக்கினோம்.
போரின்போது தனது மூத்த ஆண் பிள்ளையை இழந்து, கணவன் இயற்கை எய்திய நிலையில் ஓர் விபத்தில் ஒரு காலும் முழுமையாக பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் வாழும் அமிர்தலிங்கம் கலாசோதி (56) இன்று தனது குடும்ப வருமானம் கருதி ஓர் சிறுதொழில் முயற்சியில் ஈடுபடுவதோடு மேலும் சிலருக்கு பகுதி நேர வேலை வாய்ப்பினையும் வழங்கி வருகின்றார்.
”நான் இந்த தொழிலை 24 ஆண்டுகளாகச் செய்து வருகின்றேன். எனது மூத்த மகன் போர்க் காலத்தில் உயிரிழந்தார். பின்பு கணவர் உயிரிழந்து 10 வருடங்கள் ஆகின்றது. கணவர் இருக்கும்போதே ஓர் விபத்தில் அகப்பட்டு எனது ஓர் கால் இயலாது. இந்த நிலையில்தான் எனது குடும்ப வாழ்வாதாரம் கருதி சிறிது சிறிதாக வடகம் போட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் குடும்பத்தினர் மட்டுமே முயற்சித்து 10 முதல் 15 கிலோ வடகம் தயாரித்து விற்பனை செய்தபோது கேள்வி அதிகரிக்க அதிகரிக்கவே முயற்சியை சற்று விரிவாக்கினேன்.
இந்த தொழிலிற்கு மிக முக்கிய மூலப்பொருளான வேப்பம் பூவை பெறுவதும் அதனைப் பாதுகாத்து வைப்பதும் மிகப் பெரிய சவால். ஏனெனில் வேப்பம்பூ 12 மாதமும் பெற முடியாது வருடத்தில் ஒரு மாதம் மட்டுமே பெற முடியும். மார்ச் மாத கடைசியில் தொடங்கி ஏப்ரல் மாதம் மட்டுமே இந்த பூவை பெறமுடியும்.
இதனைப் பெறுவதற்கு சுமார் 60 முதல் 70 கி.மீ பயணிக்க வேண்டும் சில சமயம் 100 கிலோ மீற்றர் தாண்டியும் செல்ல வேண்டும். அதனால் முச்சக்கர வண்டிகளிலேயே பயணித்து அவற்றை சேகரித்து வரலாம். 2020ஆம் ஆண்டுவரை ஒரு தடவை சென்று பூவை சேகரித்து ஏற்றி வருவதற்கு 2 ஆயிரம் ரூபோ போதுமானதாக காணப்பட்டது இன்று 6 ஆயிரம் ரூபாவும் போதாமல் உள்ளது.
இதேநேரம் வேப்பம்பூ இல்லாத காலத்தில் தொழிலைக் கைவிட்டால் வாழ்வாதாரச் செலவிற்கு வேறு எந்த வருமானமும் கிடையாது. இதனால் தொழில் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி வாழைப்பூ, பிறண்டை, தாமரைக் கிழங்கு, வெங்காயம் போன்றவற்றிலும் வடகம் தயாரிப்பதோடு பாகற்காய், சுண்டங்காய், காத்தோட்டிக்காய், வாழைக்காய், போன்றவற்றில் வற்றல் தயாரிக்கும் பணியிலும் ஈடுபடுகின்றோம்.
ஆரம்பத்தில் மூலப்பொருளைப் பெற்றுவருவதற்கும் உற்பத்தியை நகருக்கு எடுத்துச் செல்லவும் போக்குவரத்து செலவு குறைவாக இருந்தது. அத்தோடு இதற்கு தேவையான உழுந்து, மிளகாய், பெருஞ்சீரகம் என்பனவும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக பல மடங்கு விலை உயர்ந்து விட்டது. இருப்பினும் அதன் விலைக்கு ஏற்ப உற்பத்தியின் விலையை அதிகரிக்க முடியவில்லை.
இத்தனைக்கும் மத்தியில் எனது குடும்பம் மட்டுமன்றி நான்கு அல்லது ஆறு பெண்கள் என்னுடன் பணியாற்றுகின்றனர். காலையில் 8 மணி முதல் 11 மணிவரை பணியாற்றினால் 600 ரூபாவை பெற முடியும். அது அவர்களின் குடும்ப நெருக்கடியில் ஒருவேளை உணவுப் பசியைப் போக்க வெய்யிலில் வாடி வதங்கி பாடுபடுவதால் வரும் பணம் உதவுகின்றது.
இந்த பொருளாதார நெருக்கடியிலும் சுகாதாரப் பரிசோதகர்கள் கூறும் அறிவுரைக்கேற்ப அதற்கு தேவையான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக வடகம், வற்றல் என்பன காய வைப்பதனை பதிவாக வைப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள், உயரத்தில் வைத்தாலும் திறந்த வெளியில் வைக்க முடியாது போன்ற சுகாதாரப் பிரச்சணைகளைப் பொருளாதார நெருக்கடியிலும் தீர்க்க வேண்டும். இவற்றை தாண்டியே வாழ்வாதாரத்தை ஈட்ட வேண்டும். இன்றைய பொருளாதார நெருக்கடியில் சுய முயற்சியில் ஈடுபடும் பெண்களிற்கு இந்த கடும் பொருளாதார நெருக்கடி காலத்தில் தொழிலைத் தொடர்ந்து நடாத்த அரசு மானிய விலையில் எரிபொருளையோ அல்லது அதற்கான ஊக்குவிப்புக்களை குறுகிய காலத்திற்கேனும் வழங்கினால் எம்மைப்போன்ற பெண்கள் மட்டுமன்றி என்போன்ற சிறு முயற்சியில் ஈடுபடும் பெண்கள் தொடர்ந்தும் சொந்த முயற்சியில் ஈடுபட வாய்ப்பு உண்டு. ஏனெனில் கடந்த ஆண்டு ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காலத்தில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களை மட்டுமே அரசு நினைத்ததே அன்றி வேறு வருமானம் அற்ற எம்போன்ற சுய முயற்சியாளர்களை திரும்பியும் பார்க்கவில்லை இதனால் 3 மாதம் தொழிலை இழந்து தவித்தோம்” என்றார்.
இங்கே சுமார் ஓராண்டாக பணியாற்றும் இ.வனிதா, ”வருமானம் போதாமல் உள்ளபோதும் காலை 8 மணிமுதல் 11 மணிவரை வேலை செய்து அதன் பின்பு வீட்டிற்குச் சென்று தனது சமையல் வேலையைப் பார்ப்பதாகக் கூறுகின்றார்.
இலங்கையில் இடம்பெற்ற போரின் கொடுமையாலும், விபத்துக்கள் மற்றும் இயற்கை அனர்தங்களால் அதிகமாகவும் முதலில் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே காணப்படுகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களை நம்பி வாழும் பல ஆயி்ம் குடும்பங்கள் இன்றும் தொடர் நெருக்கடியின் மத்தியில் தமது குடும்ப வாழ்வாதாரத்திற்காக கையில் கிடைக்கும் தொழில் முயற்சிகளையும் கடினமான வேலைகளையும் ஏற்று அதில் வரும் வருமானத்தில் வாழ்வாதாரத்தை நடாத்துவதோடு சில பெண்கள் இணைந்து தமக்கான வாழ்வாதாரத்தைத் தேடும் அதே நேரம் அயலில் உள்ள தம்மைப்போன்ற பெண்களிற்கு பகுதி நேர வேலை வாய்ப்பினையும் வழங்குகின்றனர். இந்த நிலை இன்று இலங்கை முழுவதும் வியாபித்துக் காணப்படுகின்றது.
இந்த அவலம் தமிழ், முஸ்லீம், சிங்களம் என்ற பாகுபாடின்றி வியாபித்துள்ளது. வவுனியா நகரின் மத்தியிலிருந்து 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மடுக்கந்தைப் பகுதியில் உள்ள அம்பலாங்கொடல்ல குக்கிராமத்தில் வாழும் 57 வயதான கே.என்.தமயந்தி என்னும் சிங்களப் பெண்மணி: ”17 ஆண்டுகளின் முன்பு 40 வயதில் கணவரை இழந்த சமயம் 5 குழந்தைகளுடன் அந்தரித்தேன். அப்போது மூத்த பிள்ளைக்கு வயது 14 ஐந்தாவது பிள்ளைக்கு இரண்டு வயதாகவும் இருந்தது”.
ஆரம்பத்தில் கூலி வேலை, தையல் என பல பணிகளில் ஈடுபட்டு கடும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மூத்த இரு பிள்ளைகளும் திருமண செய்துவிட்டார். 5வது பிள்ளையோ விசேட தேவையுடையவர். அரச உதவி எனில் சமுர்த்தி உதவி மட்டுமே கிடைக்கின்றது. இதனால் வீட்டின் அருகே ஓர் அப்பக் கடையை நடாத்துகின்றார்.
”அந்தக் காலமும் கஸ்ரம் இந்தக் காலமும் கஸ்ரம். அதிலும் குறிப்பாக இந்த பொருளாதார நெருக்கடி எம்மை மேலும் வாட்டுகின்றது. ஏனெனில் முன்பு வீட்டின் உணவிற்கு அப்பத்தை வேண்டிச் செல்பவர்களிடமும் பணம் இல்லை. விலை ஏற்றத்தின் முன்பு ஒரு நாளைக்கு 2 ஆயரம் ரூபா முதல் 3 ஆயிரம் ரூபாவிற்கு விற்றால் நாள் ஒன்றிற்கு 700 ரூபா மிச்சம் கிடைக்கும் ஆனால் தற்போது அத்தனை பொருளும் 3 மடங்கு விலை உயர்த்த பின்பும் 2 ஆயிரம் ரூபாவிற்கும் விற்பனை இடம்பெறுவது கிடையாது. இதனால் 400 ரூபாவினைக்கூட இலாபமாகப் பெற முடியவில்லை. இந்த நிலையிலேயே இயலாத பெண் பிள்ளையின் மருத்துவத்திற்கே அந்தப் பணம் போதாது. அதனால் நான் பட்டினி கிடந்தேனும் பிள்ளையின் மருத்துவத்தைப் பார்க்கின்றேன். எனது வேலையோ உணவு விற்பது-ஆனால் நான் உணவை பார்க்கும் நாள்கள் குறைவாகவே உள்ளது”.
வடக்கு மாகாணத்தில் தமது வாழ்வாதாரத்திற்காக இன்னல்களை எதிர்நோக்கும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவக குடும்பங்கள் வாழ்கின்றபோதும் மாகாண தொழிற்துறை திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணத்தை தொடர்பு கொண்டு வடக்கில் எத்தனை பெண் சுய முயற்சியாளர்கள் உள்ளனர் என விபரம் கேட்டபோது பதிவு செய்யப்பட்ட பெண் முயற்சியாளர்களாக தற்போதுவரை 3514 பேர் பதிவில் உள்ளனர் சிலர் தனித்து பதிவின்றியும் இயங்கக்கூடும் என்பதனை உறுதி செய்தார்.
பொருளாதார நெருக்கடி தொடர்பில் பாதிக்கப்படும் பெண்கள் பொருள் விலையேற்றம் மாறுபட்ட விலை எனக் குற்றம் கூறுவது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டால். ”எந்த பொருளானாலும் அதற்கு சட்ட வரையறை அல்லது வர்த்தமானி அறிவித்தல் இருந்தால் மட்டுமே வர்த்தகர்களிறகு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் அவ்வாறு இல்லையென்றால் தரம் தொடர்பில் மட்டுமே எம்மால் பரிசோதிக்க முடியும்” என்றனர்.
இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களின் நெருக்கடி நிலை ஒரு மாவட்டத்திலோ அல்லது ஓர் இனத்தில் மட்டும் உள்ள பிரச்சனையாக அன்றி நாடு முழுதும் உள்ள பிரச்சனையாகவே உள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடி தீர்ந்தால் மட்டுமே ஒரளவேனும் நிம்மதியான உணவை பார்க்க முடியும் என ஒதியமலையில் புகையிலைத் தோட்டத்தில் பணியாற்றும் ஒரு பெண்மணி கூறியதோடு ”புகையிலை ஓர் பணப்பயிர் ஆனாலும் அதனை விளைய வைக்கும் நாம் அந்தப் பணத்தை பார்த்தது கிடையாது” என்றார்.
இவ்வாறெல்லாம் இடர் நோக்கும் பெண்களின் முயற்சிக்கு அரச உதவிகள் எந்தவகையில் கிட்டுகின்றது என யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபரான அ.சிவபாதசுந்தரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது:
”சுய முயற்சியில் ஈடுபடும் பெண்களிற்கு சமுர்திக் குழுக்கள் மூலம் கடன் ஏற்பாடுகள் கிட்டுவதோடு உள்ளூர் சந்தை வாய்ப்புக்களில் வரி விலக்களிப்பு அல்லது வாடகை கட்டணமற்ற சந்தை வாய்ப்புக்கள் அல்லது கண்காட்சிகளில் முன்னுரிமை அளிப்பது மட்டுமன்றி வடக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் அவரது செயலகம் மூலமாக ஓர் வாய்ப்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இதே நேரம் சிலர் உற்பத்தி செய்யும் சிறு முயற்சிப் பொருட்களிற்கு சர்வதேச சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதனால் ஏற்றுமதியாளர்களுடன் உரையாடி ஓர் நியாயமான பெறுமதியைப் பெற்று வழங்க முடியுமா எனவும் முயல்கிறோம்” என்றார்.