விநாயகர் விமர்சனம் | இலங்கையில் பெண்கள் ‘சக்தி’ உடையவர்களா?
Share
(கனடா உதயனற்கான பிரத்தியேக கட்டுரை தொடர்-பகுதி 10)
கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி
கல்வியா? செல்வமா? வீரமா? இம்மூன்றில் எது சிறந்தது? இம்மூன்று சக்திகளும் தம்முள் போட்டியிட்டு தாமே தலை சிறந்ததாகக் காட்ட முயற்சிப்பதாகக் காட்சிப்படுத்திய திரைப்படம் சரஸ்வதி சபதம். இறுதியில் இம்மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் அதற்கு நிகரேது என்று சௌந்தரராஜனின் கணீர் குரலில் கேட்டு முடித்திருப்பார் அதன் இயக்குநர் நாகராஜன். இன்மூன்று சக்திகளையும் பெண்வடிவங்களாகக் காட்டக் காரணமுண்டு.
வலுவான மனத்தைரியமும் தாக்குப்பிடிக்கும் திறனும் பெண்களுக்கே அதிகமுண்டு என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு இது என்று வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். தவறில்லை.
சீச்சீ அப்படியெல்லாம் கிடையாது ஆண்கள் தான் பலசாலிகள் தாக்குப்பிடிப்பவர்கள் என்று வாதிடும் நண்பர்கள் உங்கள் எதிர்வாதத்தை உங்கள் மனைவியிடம் அவிழ்த்து விட்டுப்பாருங்கள். அப்போது தெரியும். ஏற்படும் முன்-பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல. வெளியுலகுக்கு சிங்கம் போல மற்றவர்களுக்குத் தெரிபவர்கள் வீட்டுக்குள்ளே வெறும் மியாவ்கள் தான். ஓரிரண்டு விதிவிலக்ககல் வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் பெரும்பாலும் இப்படித்தான். ஹோம் மினிஸ்டராக வீட்டுக்காரியங்களைக் கவனித்து குடும்பம் ஒழுங்காக நடக்க குத்துவிளக்காகத் தொழிற்படும் அம்மணிகள் தான் இப்படி. மற்றபடி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் இந்த விவகாரங்கள் எப்படிக் கையாளப்படும் என்பதை நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. ஒரு வளர்ச்சியடைந்த நாடாகிய கனடாவில் வாழும் நீங்கள் அதை அனுபவித்துத் தெரிந்த கொண்டிருப்பீர்கள்.
தெற்காசிய சமூகங்களில் குடும்பம் பற்றிய தீரமானம் எடுத்தலில் ஆண்கள் வெறும் ’ரப்பர் ஸ்டாம்ப்’ மாத்திரம் தான். ஒரு பாட்டியாக, தாயாக, மனைவியாக, மகளாக அவர்களின் செல்வாக்கு குடும்பத்தில் எப்போதும் இருக்கும். இதெல்லாம் சரிதான். வெளியுலகிற்கு பெண்கள் எப்படித் தெரிகிறார்கள் என்று பார்த்தால்- பெரும்பாலான கட்புல,செவிப்புல ஊடகங்கள் அவர்களை வெறும் கவர்ச்சிப் பொருளாகக் காட்டிச் சம்பாதிக்க எத்தனிக்கிறார்கள் என்பது வெளிப்படை.
இவற்றையெல்லாம் மீறி சாதனைப் பெண்களாக அரசியல், பொருளாதாரம், சமூகம், விஞ்ஞானம், தொழில் என்று பல்வேறு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கிலே அண்மைக்காலமாக பெண்களுக்கு சாதகமாக ஏற்பட்டுவரும் மாற்றங்களைச் சொல்லலாம்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் வாக்குரிமை வழங்கப்பட்டபோது ஆண் பெண் இருபாலாருக்கும் சேர்த்தே வழங்கப்பட்டது. ஆகவே அரசியல் செயற்பாடுகளிலிருந்து பெண்களை விலக்கி வைக்கும் காரியங்கள் இலங்கையில் இடம்பெறவில்லை என்று கூறலாம். உலகின் முதலாவது பெண் பிரதமரையும் நாட்டின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியையும் உருவாக்கிய நாடு என்ற பெருமைகயை இலங்கை கொண்டிருப்பதற்கு மேற்படி சுதந்திரங்கள் காரணம் என்று கூறப்படலாம். ஆனால் இவ்விரு பெண்மணிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையின் துரதிருஷ்டவச அரசியலில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு தமது கணவன்மாரைப் பறிகொடுத்தவர்கள். அவ்விருவரும் அப்பதவிகளுக்கு வருவதற்கு கணவன்மாரை அரசியலில் இழந்த பரிதாபமும் ஒரு முக்கிய காரணியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் இலங்கையின் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் போதியதாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இருக்கின்றவர்களும் நாகரிகமாக அரசியல் செய்ய முடியாத சூழ்நிலைகளை எதிர்நோக்குவதைக் காண முடிகிறது. பொருளாதார ரீதியில் நோக்குமிடத்து இலங்கையின் பொருளாதாரம் பெண்களில் தங்கிவாழ்வதாகக் கூறலாம். காரணம் இலங்கைக்கு வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித்தரும் தேயிலை உற்பத்திக்கைத் தொழில் ஆடைதயாரிப்புக் கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் துறை ஆகிய மூன்றிலும் பெண்களின் பங்களிப்பே அதிகளவில் உள்ளது. இவற்றுள் வெளிநாட்டு வேலைவாய்புகளில் ஆண்களின் சதவீதம் படிப்படியாக அதிகரித்துச் செல்கின்ற போதிலும் ஏனைய இருதுறைகளிலும் பெண்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.
அது தவிர அரச வேலைவாய்ப்புகளை எடுத்துக்கொண்டாலும் அதிலும் பெண்களின் சதவீதம் அதிகமாக உள்ளது.இலங்கையின் குடித்தொகையில் பெண்களின் சதவீதம் சற்று அதிகமாக உள்ளமை நமக்குத் தெரியும். பாடசாலை உள்வாங்கலில் இருபாலாருக்கும் சமஉரிமை உள்ளது. ஆனால் பாடசாலை இடைவிலகலில் ஆண்களின் சதவீதம் அதிகமாக உள்ளது. இதனால் கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு வரும் போது பெண்களின் சதவீதம் ஆண்களைவிட உயர்வாக உள்ளது. இதற்குக் காரணம் ஆண்களின் பாடசாலை இடைவிலகலும் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் பெண்களின் சிறந்த பெறுபேறுகளுமாகும். அத்துடன் கல்விப்பொதுத்ராதர உயர்தரப்பரீட்சையில் கலை மற்றும் வணிகப்பிரிவுகளிலிலேயே அதிகளவு மாணவர்கள் தோற்றுகின்றனர். இப்பிரிவகளில் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் தோற்றுகின்றனர்.
ஆனால், விஞ்ஞானம் கணிதம் போன்ற தொழினுட்பத்துறைகளில் பெண்களைவிட ஆண்களே அதிகளவில் பிரகாசிப்பதையும்காணமுடிகிறது. பொதுவாகச் சொன்னால் கலை மற்றும் வணிகப் பிரிவகளில் பெண்கள் வெளுத்துக்கட்டுகிறார்கள் எனலாம். இதன் விளைவாகப் பல்கலைக்கழகஙகளில் கலை மற்றும் வணிகப்பிரிவுக்குத் தெரிவ செய்யப்படும் மாணவர்களில் பெண்களின் எண்ணிக்கை மிக் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக கலைப்பிரிவில் அல்லி ராஜ்ஜியமே நடக்கிறது. இதன் விளைவாக விரிவுரையாளர்களை உள்வாங்கும் போதும் கலைத்துறையில் பெரும்பாலும் பெண்களே ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகி வருகிறது.
வணிகத்துறையிலும் இந்நிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தனியார் துறை வேலைவாய்ப்புகளில் வணிகத்தறை சார்ந்தவற்றில் பெண்களின் பங்களிப்ப அதிகரித்துச் செல்கிறது. அரச போட்டிப் பரீட்சைகளியல் பெண்களின் தேர்ச்சிவீதம் அதிகரித்தள்ளமை தெளிவாகத் தெரிகிறது. எனவே அரச உயர்பதவிகளுக்கு பெண்கள் தகுதியுடையவர்களாக மாறியுள்ளனர் ஆயினும் ஆணாதிக்க மனப்பான்மை காரணமாக அவர்களின் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஆனால் தனியார்துறையில் பெண்களின் பதவி உயர்வுகள் மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகளைக் காண முடியவில்லை.
மறுபுறம் இலங்கையில் உள்ள தொழிலாளர்களின் தன்மை குறித்து கவனம் செலுத்துவேமாயின் இலங்கையில் உள்ளவர்களை இருகூறாகப் பிரிக்கலாம். முதலாவது பொருளாதார ரீதியில் செயற்பாட்டில் உள்ள சனத் தொகை (economically active population) இரண்டாவது பொருளாதார ரீதியில் செயற்பாட்டில் இல்லாத சனத் தொகை (economically inactive population). இதில் செயற்பாட்டில் உள்ள சனத் தொகையில் இப்போது வேலை செய்து கொண்டிருப்பவர்களும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களும் உள்ளடங்குவர். செயற்பாட்டில் இல்லாத சனத் தொகையில் வேலை செய்ய விருப்பமில்லாதவரகளும் ஓய்வு பெற்றவர்களும் உடல் நலிவடைந்தோரும் அங்கவீனர்களும் வேலை செய்ய அனுமதிக்கப்படாத முழுநேர மாணவர்களும் சட்டரீதியில் வேலை செய்ய அனுமதிக்கப்படாத சிறைக்கைதிகள் போன்றோரும் உள்ளடங்குவர்.
இலங்கையில் 2020இல் வெளியிடப் பட்ட ஆய்வுத் தகவல்களின் படி பொருளாதார ரீதியில் செயற்பாட்டில் உள்ள சனத் தொகையில் ஆண்களின் சதவீதம் 66.1 சதவீதமாகவும் பெண்களின் சதவீதம் 33.9 ஆகவும் இருந்தது. மறுபுறம் பொருளாதார ரீதியில் செயற்பாட்டில் இல்லாத சனத்தொகையில் ஆண்களின் வீதம் 26.5 ஆகவும் பெண்களின் சதவீதம் 73.5 ஆகவும் இருந்தது. இவ்வாறுள்ள பெண்களின் எண்ணிக்கை 61 இலட்சம் என அந்த ஆய்வு கூறகிறது. வேறு வகையில் கூறுவதாயின் இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமாகவுள்ள பெண்கள் கல்விகற்பதிலும் ஆண்களைவிட முன்னேறியுள்ளனர்.
ஆனால், அப்படி தகுதி வாய்ந்த நிலையில் உள்ள பெண்களில் பெரும் எண்ணிக்கையினர் வேலை செய்ய விரும்பவில்லை அல்லது வேலை செய்வதிலிருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ளனர் என்று கூறலாம். இலங்கையில் வேலை செய்யக் கூடிய வயதும் தகுதியும் இருந்தும் அவர்களில் முக்காற்பங்கினர் வேலை செய்யவில்லை அல்லது வேலை தேடவில்லை என்பது உங்களில் பலருக்குப் பதிய தகவலாக இருக்கலாம். அப்படி வேலை செய்யாமல் இருக்கும் பெண்களிடம் அது பற்றிய காரணம் கேட்டபோது 14 சதவீதமானோர் படிப்பில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினர் ஆனால் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வீட்டுவேலைகளில் ஈடுபட்டிருப்பதால் வேலை செய்யவில்லை என்று பதிலளித்திருக்கிறார்கள். ஆகவே பெண்கள் வேலையில் ஈடுபடாமல்ஃப்இருப்பதற்கு அவர்களது குடும்பப் பொறுப்புகளே முக்கிய காரணமாக இருக்கின்றன. ஆண்களில் குடும்பப் பொறுப்பகள் காரணமாக வேலை செய்யவில்லை என்று கூறியவர்களின் சதவீதம் வெறும் 3.7 மாத்திரமே. இதில் வேடிக்கை என்னவென்றால் உயர்கல்வி கற்ற பெண்களும் கூட குடும்பப் பொறுப்புகள் காரணமாக தொழில் புரியாமல் விட்டிருப்பது தான்.
இலங்கையில் அரசாங்கம் பாடசாலை முதல் பல்கழைக்கழகம் வரை இலவசக் கல்வியை வழங்கிவருகிறது. அதற்காகபெருந்தொகைப்பணமும் செலவ செய்யப்படுகிறது. ஆனால் அதன் மூலம் உருவாக்கபட்ட மனித மூலதனத்தின் கணிசமானபகுதி பயன்பாட்டில் இல்லாமல் இழக்கப்படுவது பொருளாதார ரீதியில் புத்திசாலித்தனமற்ற ஒரு நடவடிக்கையாகும். உண்மையில் குடும்பப் பொறுப்பகளைச் சுமக்கும் பெண்களின் சேவை ஒரு பொருளாதார நடவடிக்கையாகப்பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் வேறெந்த மாற்று ஊழியராலும் அதனை ஒத்த சேவையினை ஆற்ற முடியாது. ஆனபோதிலும் ஒரு இல்லத்தரசியாகப் பணியாற்றுவதற்கு பல்கலைக்கழகக் கல்வி போன்ற சிறப்பக் கல்வியறிவு தேவைப்படாது. எனவே அப்படி இல்லத்தரசியாக இருக்க விரும்பம் பெண்கள் பொருளாதாரத்திற்குப் பங்காற்றக் கூடிய இன்னொருவரது வாய்ப்பை வீணடிக்கின்றனர் என்றே கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் படித்தது அதன் பயனை சமூகத்திற்கு வழங்கும் விருப்பமள்ள ஒருவரது வாய்ப்பை அவர்கள் விணாக்கி விடுகின்றனர். அவ்வாறு படித்த பெண்கள் வேலை செய்ய விரும்பாமைக்கு ஒரு குடும்பத்தில் பெண்கள் செய்யும் பலதரப்பட்ட பணிகளே காரணமாகும்.
திருமணத்திற்கு முன்னர் தொழில் புரியும் பெண்களில் கணிசமானோர் குழந்தை பிறப்பின் பின்னர் அதனைக் கைவிடுவதைக் காண முடிகிறது. தொழிலிடத்திற்கும் வீட்டிற்கும் இடையிலான தூரம் போக்குவரத்து வசதிகளின் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்தின் போது எதிர்கொள்ள நேரிடும் பாதிகாப்பின்மை மற்றும் அசௌகரியங்கள் தொழிலிடத்தில் காணப்படும்
சிநேகபூர்வமற்ற சூழல் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் பாதுகாப்பின்மை தொழில் புரிந்த வீடுவந்த பின்னர் காத்திருக்கும் வீட்டுவேலைகள் ஏனைய குடும்ப அங்கத்தவர்களின் ஒத்துழைப்பின்மை போன்ற இவ்வாறான காரணிகள் பெண்கள் தொழில் புரியாமல் விடக்காரணங்களாக உள்ளன.
இலங்கையிலே எதிர்காலத்திலே தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் பிரகாசமாகத் தென்படுகின்றன. அரசாங்கமோ வெளிநாடுகளுக்க ஓடி வேலை தேடுங்கள் என்கிறது. நிபுணத்தவம் பெற்ற வைத்தியர்களின் வெளியேற்றம் காரணமாக வைத்தியசாலைகளின் சிறப்பப் பிரிவுகள் மூடப்படுகின்றன. இளைஞர்களும் யுவதிகளும் பாஸ்போட் ஒபிஸில் தவம் கிடக்கின்றனர். உள்நாட்டில் வேலை செய்யாவிட்டாலும் வெளிநாடுகளில் வேலை தேடும் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த வெளிப்பாய்ச்சல்களின் பின்னர் அடுத்தவரும் காலகட்டம் ஒரு மனிதனில் சேகரித்து வைத்த சக்தி அபாய காலத்தில் சேமிப்பிலிருந்து வெளிப்படுவது போல பொருளாதார ரீதியில் செயற்படாத நிலையில் உள்ள சனத்தொகையிலுள்ள பெண்களை உயிர்ப்பிப்பதன் மூலமே இலங்கையின் ஊழிய தேவையின் ஒரு பகுதியைப் பெறமுடியும். அப்போதும் கூட இலங்கை பெண்களில் தான் தங்கியிருக்கும்.
எங்கு காணினும் சக்தியடா என்று பாரதி இதைத் தான் பாடினானோ?