LOADING

Type to search

இலங்கை அரசியல்

வெடுக்குநாறி சிவன் கோவில் இடிப்பு விவகாரம் இந்தியப் பிரதமரின் கவனத்திற்குச் செல்கிறது

Share

நடராசா லோகதயாளன்

வெடுக்குநாறி ஆலய அழிப்பு விவகாரம் ஆலய நிர்வாகம் கோரியபடி பாரதப் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் கோவில் நிர்வாகத்தினரிடம் உறுதியளித்தார்.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் திங்கட்கிழமை (10) சந்தித்தார்.

அந்த ஆலயம் இடித்து அழிக்கப்பட்டது தொடர்பிலும், தொடர்ச்சியாக இந்து ஆலயங்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் குறித்தும் பலதரப்பினர் இந்தியத் தூதரின் பார்வைக்கு எடுத்துச் சென்றனர். வெடுக்குநாறி ஆலய நிர்வாகமும் இந்தியத் தூதர் பாக்லேயைச் சந்தித்து முறையிட நேரம் கோரியதை அடுத்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்ட ஆலய நிர்வாகத்தினர், சட்டத்தரணி மற்றும் அகில இலங்கை இந்து மாமன்ற உறுப்பினர்கள் என ஐவர் கல்ந்து கொண்டனர். இதேபோன்று தூதரகத்தின் சார்பிலும் தூதுவர், பிரதி தூதுவர் அதிகாரிகள் என ஐவர் பங்குகொண்டனர்.

இதன் போது வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வரலாற்று ஆவணங்கள், ஆலயம் மீது போடப்பட்டுள்ள வழக்கு, ஆலய விக்கிரகங்கள் அழக்கப்பட்ட ஆதாரங்கள், அவை தொடர்பில் எழுந்த சர்ச்சை என அனைத்தும் ஆவண ரீதியாக பாரதப் பிரதமரிடம் சபர்ப்பிக்கும் நோக்கில் தூதுவரிடம் கையளிக்கப்பட்டதோடு இது தொடர்பான கோரிக்கை மனுவும் இலங்கைக்கான இந்தியத் தூதரிடம் கையளிக்கப்பட்டது.

இவற்றைப் பெற்றுக்கொண்ட தூதுவர் ”உங்கள் கோரிக்கை மனு மற்றும் ஆவணங்கள் பாரதப் பிரதமிரற்கு அனுப்பி வைக்கப்படும்” என உறுதியளித்தாக கூட்டத்தில் பங்குபெற்றோர் கூறுகின்றனர்.

வெடுக்குநாறி ஆலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி கனடா உதயன் பத்திரிகையில் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் மதம் மற்றும் கலாச்சார அழிப்புகள் தலைப்பில் விரிவான வெளியாகியிருந்தது.

அந்த கட்டுரையில் ”இலங்கையில் உள் நாட்டுப போர் முடிந்து 14 ஆண்டுகளானாலும் இன்னமும் மதம் மற்றும் கலாச்சார அழிப்புக்கள் தொடருகின்றன என்பதனை அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்கள் தெளிவாக எடுத்துக காட்டுகின்றன”.

மேலும் தொல்லியல் திணைக்களம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இலங்கை ஜனாதிபதி இம்மாதம் இந்தியா செல்லவுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. அவர் அவ்வாறு செல்லும் சமயம், இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல், தொல்லியல் பூமி, பௌத்தச் சின்னங்கள் போன்ற காரணங்களைக் கூறி தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள காணிகளை இராணுவத்தினர் மற்றும் பௌத்தசாசன அமைச்சின் மூலம் தொடர்ந்து அபகரிக்கும் நடவடிக்கை குறித்து இந்தியா தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கும் என்றும் புதுதில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

“இந்தியா இப்படியாக ஆலயங்கள் மீதான தாக்குதல்களை பாரதூரமான விடயமாக பார்க்கும், மௌனமாக இருக்காது” என்கிற செய்து இலங்கை ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்படும் என்றும் அறியப்படுகிறது.

வெடுக்குநாறியில் இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் ஒரு சிவலிங்கத்தை மீண்டும் பிரதிஸ்டை செய்ய எடுத்த முயற்சிகளும் தொல்லியல் திணைக்களம் மற்றும் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன. அந்த நிகழ்விற்கு வந்திருந்த அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

அந்த பிரதேசம் தொடர்பில் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அங்கு எவ்விதமான கட்டுமானப் பணிகளையும் அனுமதிக்க முடியாது என்று தொல்லியல் திணைக்களம் வலியுறுத்தியதை அடுத்து, சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. அந்த பிரதேசம் தொல்லியல் பூமி, அங்கு செல்வதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்று அந்த திணைக்களம் கூறுகிறது. அப்படியிருந்தால், சுமார் 350 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படும் அந்த ஆலயப் பகுதிக்குள் ஊடுறுவி அங்கிருந்த விக்கிரகங்களை உடைத்து எறிந்தவர்கள் எப்படி அங்கு சென்றார்கள் என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை.

இந்தியா இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நல்லை ஆதீனமும் அறிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.