LOADING

Type to search

மலேசிய அரசியல்

கண்ணையும் கருத்தையும் கவரும் மலேசியா பத்துமலை இராமாயணக் குகையில் உடற்பயிற்சி – தியான மையம்

Share

-நக்கீரன்

பத்துமலை, ஏப்.18:

மலேசியாவில் திருமுருக வழிபாட்டு தலைத்தளமாக விளங்கும் பத்துமலை வளாகத்தில் அமைந்துள்ள இராமாயணக் குகையில் யோகப் பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது.

இராமாயணக் குகை தற்பொழுது பக்தர்களையும் பொதுமக்களையும் கவரும் வண்ணம் புத்தெழுலுடன் காட்சி தருகிறது. இராமாயண நெடுங்கதையில் உள்ள பெரும்பாலான பாத்திரங்களையும் அதில் அடங்கியுள்ள கருத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான கும்பகர்ணன் சிலையில், அவரின் மீசை பிரமிப்பாக உள்ளது.

அத்துடன், அங்கு வரும் பக்தர்கள், சுற்றுப் பயணிகளை வெகுவாகக் கவரும் வகையில் சுவர் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றுக்கு தகுந்தாற்போல வண்ண விளக்குகள் பாய்ச்சும் ஒளிவெள்ளம் இன்னும் அழகுசேர்க்கின்றன.

இந்த நிலையில், இராமாயணக் குகையின் மேல்தளத்தில் ஏறக்குறைய 500 பேர் கலந்து கொள்ளும் வகையில் தியானக் கூடமும் உடற்பயிற்சி மையமும் உருவாக்கப்பட்டு, ஏப்ரல் 17-ஆம் நாள் திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பத்துமலை திருத்தலத்தை இந்து மையமாக உருவாக்கும் வகையில் கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் ஆலய தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா அங்கு தொடர்ந்து மேம்பாட்டுப் பணியை மேற்கொண்டு வருவதன் ஒருகூறாக, இந்தப் புதிய கட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

இராமாயணக் குகையை விளம்பரப்படுத்தவும் ஆன்மிக அன்பர்களுடன் சுற்றுப் பயணியரையும் கவர்வதற்கு ஏதுவாக ‘அருள்மிகு இராமாயணக் குகை சென்.பெர்.’ என்ற பெயரில் தனி நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம், இங்கு உடற்பயிற்சியுடன் தியானத்தையும் வழிநடத்துவதற்காக ‘மலேசிய மூப்பெதிர்ப்பு யோகா மற்றும் ஆரோக்கிய அமைப்பை அமர்த்தி உள்ளது.

இதன் தொடர்பில் அருள்மிகு இராமாயணக் குகை நிறுவனத்திற்கும் மூப்பெதிர்ப்பு யோகா மற்றும் ஆரோக்கிய அமைப்பிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏப்ரல் 17 மாலையில் அருள்மிகு இராமாயணக் குகை நிறுவனம் ஏற்பாடு செய்த செய்தியாளர்க் கூட்டத்தில் மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ ந.சிவக்குமார் முன்னிலையில் இந்தக் கையெழுத்தும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இராமாயண குகை நிறுவனத்தின் சார்பில் டத்தோ முகமட் முஸ்தஃபாவும் மாஸ்டர் அட்ரியான் சுரேஷும் கையொப்பம் இட்டனர்.

உடற்பயிற்சியுடன் மனதிற்கு ஆன்ம வலிமை, புத்துணர்ச்சி, மன அமைதி ஆகியவற்றையும் அளிக்கும் வகையில் தியானப் பயிற்சி வழங்கும் பொறுப்பை மாஸ்டர் அட்ரியான் சுரேஷ் அந்தோணி ஜான் ஏற்றுள்ளார்.

இவரின் தலைமையில் வரும் செப்டம்பர்த் திங்கள் 5 முதல் 9-ஆம் நாள்வரை இராமாயணக் குகையில் ‘உலகளாவிய அமைதி, யோகா மற்றும் ஆரோக்கிய உச்சி மாநாடு’ நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்கள், பொதுமக்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த நிருவாகியருடன் பத்துமலை தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி சரசுவதி செங்கன் தலைமையில் ஆசிரியர் ஏ.விக்டர் உட்பட அதிகமான ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.