குரங்குகளின் ஏற்றுமதி குருட்டுத்தனமான முடிவு சூழல் விரோதமானதும் சாத்தியம் இல்லாததும் – ஐங்கரநேசன் சாடல்
Share
குரங்குகளினால் விவசாயத்தில் ஏற்பட்டுவரும் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் செங்குரங்குகளைச் சீனாவின் மிருகக்காட்சிச் சாலைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்ததையடுத்துப் பலத்த வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, கொழும்பு சீனத்தூதுவராலயம் இவ்வாறானதொரு கோரிக்கையைத் தாம் முன்வைக்கவில்லையெனத் தற்போது அறிவித்துள்ளது. சீனாவின் தனியார் விலங்குப் பண்ணையொன்றின் எழுத்துமூல கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுமதி முடிவெடுத்த விவசாய அமைச்சும் சுருதி இறங்கி முதற்கட்டமாக ஐந்நூறு குரங்குகளை அனுப்ப இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இம்முடிவு குருட்டுத்தனமானதும் சூழல் விரோதமானதும் நடைமுறைச் சாத்தியம் இல்லாததும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சாடியுள்ளார்.
இலங்கையில் இருந்து சீனாவுக்குக் குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாக பொ. ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அழிந்துவரும் காட்டுயிரிகளின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் சர்வதேச உடன்படிக்கையைச் சீனா ஏற்றுக் கொண்டிருப்பதால் குரங்குகளின் இறக்குமதிக்கு அனுமதி இல்லை என்றும் சீனத் தூதுவராலயம் தெரிவித்திருக்கிறது. ஆனால், சட்டபூர்வமான அனுமதி இல்லாத நிலையிலும்; குரங்குகள் உட்பட அழிந்துவரும் பல காட்டுயிரிகளின் மிகப்பெரும் கறுப்புச்சந்தையாக இன்றளவும் சீனாவே இயங்கி வருகிறது. சீனஉணவகங்களில் குரங்கிறைச்சி அதிவிருப்பத்திற்குரிய தெரிவு என்பதாலும் ஆய்வகங்களில் குரங்குகள் சோதனை விலங்குகளாக அதிகம் தேவைப்படுவதாலும் சீனாவில் குரங்குகளுக்கான தட்டுப்பாடு எப்போதுமே நிலவுகிறது. இதனை ஈடுகட்டவே, ஐPவகாருண்யர்களின் தண்டனைகளில் இருந்து தப்ப மிருகக்காட்சிச் சாலைகளுக்கென்ற பெயரில் குரங்குகளின் வர்த்தகத்திற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
குரங்குகளால்; பயிர்களின் உற்பத்திக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் பாரதூரமானவை. ஆனால், கடந்த சில தசாப்தங்களாகக் குரங்குகளின் கணக்கெடுப்பு நிகழாத நிலையில் குரங்குகளை ஏற்றுமதி செய்ய முற்படுவது இதற்கான தீர்வாக அமையாது. மாறாக, பின்நோக்கிச் சுடுவது போன்று பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். குரங்குகள் தமது உணவு முறையால் காட்டுவெளியெங்கும் விதைகளைத் தூவி மரங்களை இயற்கையாகவே நடவு செய்கின்றன. இதனால், காடுகளின் கட்டுமானத்தில் மையக்கல் இனங்களாகக் (key stone species) கருதப்படும் இக்குரங்குகள் அழிந்தால் காட்டுப் பரப்பளவு சுருங்கி இயற்கைச்சூழலின் சமநிலை குலையும். காபன் உறிஞ்சிகளான காடுகள் சுருங்குவதால் பாதகமான காலநிலை மாற்றங்கள் விரைவுபடுத்தப்பட்டு விவசாயமும் வீழ்ச்சியுறும்.
செங்குரங்குகள் இலங்கைக்கு மட்டுமே உரித்தான ஓர் உள்நாட்டு இனம். இதனைச் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் அழிவை எதிர்நோக்கியுள்ள விலங்குகளில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது. சீனாவைப் போன்றே இலங்கையும் அழிந்து வரும் காட்டுயிரிகளின் சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்நிலையில் எதனையுமே விற்று டொலர்களாக்கும் முனைப்பில் உள்ள அரசாங்கம் சட்டபூர்வமான முறையில் நடைமுறைச்சாத்தியமற்ற செங்குரங்குகளின் ஏற்றுமதி குறித்துத் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்துதல் வேண்டும். கூடவே, குரங்குகளினால் விவசாயத்துறைக்கு ஏற்பட்டுவரும் பாதிப்புகளைக் களைய ஒருங்கிணைந்த மாற்றுப் பொறிமுறையொன்றையும் விரைந்து நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.