பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சீயோன் தேவாலயத்தில் அஞ்சலி.
Share
மன்னார் நிருபர்
(21-04-2023)
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு( 21) தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவேந்தல் சீயோன் தேவாலயத்தில் விசேட ஆராதனையும் கல்லடி பாலத்திற்கு அருகே உள்ள நினைவு தூபி மற்றும் காந்தி பூங்காவிலுள்ள நினைவு தூபியிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்,விசேட ஆராதனையும் உயிர் நீத்தவர்களுக்கு மலர்தூவி மெழுகுவத்தி ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 ம் திகதி சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் சிறுவர்கள் 14 பேர் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவேந்தல் தினமான இன்று (21) சியோன் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விசேட ஆராதனைகள் போதகர் மகேசன் ரொஷான் தலைமையில் இடம்பெற்றது.
ஆராதனையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், படு காயமடைந்தோர் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதுடன் அங்கு மலர் வளையம் வைத்து குண்டு தாக்குதல் இடம்பெற்ற 9.02 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து கல்லடி பாலத்துக்கு அருகில், உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் கிழக்கு சமூக அபிவிருத்தி அமையத்தின் பெண்கள் வலையமைப்பு ஒன்றிணைந்து மலர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் இந்த மனித படுகொலைக்கு நீதி கோரி அந்த பகுதியில் வீதியில் சங்கிலி தொடராக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்
அதேவேளை நகர் காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட நினைவு தூபியில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மலர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.