பூமி தினத்தில் வெப்ப அலைகளின் மூலம் பூமி எமக்கான செய்தியை அனுப்பியுள்ளது
Share
– பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு
பூமியின் வளங்களை வருங்காலச் சந்ததிகளுக்காகப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் திகதி பூமி தினம் கொண்டாடப்படுகிறது. பூமி தினம் மட்டுமல்ல ; சுற்றுச்சூழல் தினம், உயிர்ப்பல்வகைமை தினம், தண்ணீர் தினம், மண் தினம், சமுத்திரங்கள் தினம், வனவிலங்குகள் தினம், மலைகள் தினம், காடுகள் தினம், ஓசோன் பாதுகாப்புத் தினம் என்று சர்வதேச நாட்காட்டியில் ஏனைய விடயங்கள் தொடர்பான தினங்களைவிடப் பூமியைப் பாதுகாப்பதற்கான தினங்களே அதிகம். எனினும் எமது தலைமுறைக்குக்கூட மிச்சம்மீதி எதையுமே விட்டுவைக்காத வேகத்தில் வளங்களை நாம் சுரண்டி வருகிறோம். இவற்றுக்கான எதிர்வினைகளைப் பூமி அவ்வப்போது ஆற்றிவருகின்றபோதும் நாம் கண்டுகொள்வதாக இல்லை. இந்தப் பூமி தினத்திலும் வெப்ப அலைகளின் மூலம் பூமி ‘இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்‘ என்று எமக்கான வலுவான செய்தியை அனுப்பியுள்ளது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பூமி தினம் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பூமியின் மத்திய கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள தென்னாசிய நாடுகளில் கோடைகாலமான மார்ச்–ஏப்ரல் மாதங்களில் அதிக வெப்பநிலை நிலவுவது வழமை ஆனால், அண்மைய வருடங்களில் இக்காலப்பகுதியில் வழமைக்கு மாறாகத் தாங்கொணாத வெப்பம் உணரப்பட்டுள்ளது. இந்தியாவில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடந்த ஒரு நூற்றாண்டின் மார்ச் மாதங்களில் நிலவிய வெப்பநிலையைவிட மிகக் கூடுதலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. மார்ச் தொடங்கி மே மாதம் வரையில் 280 தடவைகள் வெப்ப அலைகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. இந்த ஆண்டும் சித்திரையில் கடந்த ஒரு நூற்றாண்டின் சித்திரை மாதங்களைவிட கூடுதலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெப்ப அலைகளின் தாக்குதலுக்கு இலங்கையும் தப்பவில்லை.
தாக்குகின்ற வெப்பஅலைகளின் எண்ணிக்கையும் அவற்றின் சூட்டுத்திறனும் அண்மைய வருடங்களில் அதிகரித்து வருவதற்குப் பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதே பிரதான காரணமாகும். நாம் பெற்றோலியப் பொருட்களை அளவுகணக்கின்றி எரித்துத்தள்ளுவதும், கரிக்காற்றை உறிஞ்சவேண்டிய காடுகளை வரம்பின்றி அழித்துத்தள்ளுவதுமே பூமி சூடாகி வருவதற்கான காரணங்களாகும். காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையேயான குழு இன்னும் இருபது வருடங்களில் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5பாகை செல்சியஸ் அளவால் அதிகரிக்கும் என்று எச்சரித்திருக்கிறது. இது வருங்காலங்களில் நாம் வெப்ப அலைகளின் தாக்குதல்களுக்கு மேலும் மிகமோசமாக ஆளாகவுள்ளோம் என்பதற்கான எச்சரிக்கையாகும்.
வெப்ப அலைகள் எமது இதயம், நுரையீரல், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, வெப்பவாதத்துக்கு ஆட்படுத்தி மரணத்துக்கும் இட்டுச்செல்கிறது. பூமியை வெப்பப்படுத்தி எம்மில் நாமே எரிதணலைக் கொட்டுகிறோம் என்பதற்கும் அப்பால், பூமியின் ஆரோக்கியத்திலும் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறோம். பூமி சூடாகுவதால் பனி மலைகள் உருகிக் கடல் மட்டம் உயரத்தொடங்கியுள்ளது. சூறாவளிகளின் தாக்குதிறன் மூர்க்கமாகி வருகிறது. ஒருபுறம் வறட்சி வாட்ட இன்னொருபுறம் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. உயிர்ப்பல்வகைமை அழிய ஆரம்பித்துள்ளது. பூமி வெப்பஅலைகளின் மூலம் விடுத்திருக்கும் செய்தியை நாம் உணர்ந்து இயற்கையோடு இசைந்து வாழ இப்புவி தினத்திலாவது உறுதியேற்போம் தவறின், ஒட்டுமொத்தப் பூமியின் அழிவுக்கும் நாமே காரணமாகி விடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.