LOADING

Type to search

விளையாட்டு

இந்திய அணியில் அஜிங்கியா ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு

Share

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியில் இடம்பிடித்து சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் கம்பேக்கை நிகழ்த்தி காட்டியுள்ளார் அஜிங்கியா ரஹானே.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் இந்திய அணியில் இருந்து நீக்கம், ரஞ்சி சீசனில் ஃபார்ம் அவுட், ரஹானே மீதான நம்பிக்கையை இழந்த கொல்கத்தா அணி நிர்வாகம், ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டது என்று இந்திய அணியை வழிநடத்தி வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்த அஜிங்கியா ரஹானேவுக்கு கடந்த ஓராண்டு போதாத காலம் என்றே சொல்லலாம்.

சில வாய்ப்புகளை ரஹானே தவறவிட்டார், சில வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டார். கிரிக்கெட்டில் வெற்றி, தோல்விகள் சாதாரணமானது தான். ஆனால் ஜாம்பவான்கள் தோல்வியடைவது ரசிகர்களுக்கு சாதாரணமல்ல. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கொடியை நாட்டிய, காபா கோட்டையை தகர்த்த, 36 ரன்களில் வீழ்ந்த இந்திய அணியை எழுந்து நிற்க வைத்த ரஹானே வீழ்ந்தது பலருக்கும் ஆச்சரியம் தான்.

ஆனால் எத்தனை துயரங்கள், எத்தனை விமர்சனங்கள், எத்தனை தோல்விகள் வந்தாலும் மைதானத்தில் பயிற்சிக்கு பேட் கட்டி முதல் ஆளாய் வருவதை ரஹானே என்றுமே நிறுத்தவில்லை. கொல்கத்தா அணிக்கு எதிராக 71 ரன்கள் குவித்த பின்னரும், என் சிறந்த ஆட்டம் இனிதான் வரும் என்று அமைதி காத்தார் ரஹானே. எங்கும், எதற்கும் தனது பொறுமையையும் நிதானத்தையும் ரஹானே இழந்ததே இல்லை.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அஜிங்கியா ரஹானே போன்ற வீரர்கள் அணிக்காக தன்னலம் பாராமல் உழைப்பார்கள். கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டில் தனிமனித சாகசங்கள் இல்லாமல் வெற்றியை ஈட்டி கொடுக்கும் வீரர்களில் ரஹானேவும் ஒருவர். தற்போது ரஹானே எதிர்பார்த்த நேரம் கைகூடி வந்துவிட்டது.

வெளிநாடுகளில் இந்திய அணிக்காக சண்டை செய்த முதன்மை வீரரான ரஹானேவுக்கு கடைசியாக போர்க்களம் செல்லும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் களம் தான் ரஹானேவுக்காக கடைசி களமாக இருக்க போகிறது. ஏனென்றால் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் போது இந்தியாவின் சீனியர் வீரர்கள் பலரும் அணியில் இருக்கப் போவதில்லை.

டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதை பார்த்து டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்வதா? என்று சில கேள்வி எழுப்புகிறார்கள். ரஹானே தேர்வு செய்யப்பட்டது அவரது டி20 பேட்டிங்கை பார்த்து அல்ல. அவர் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் அனுபவமும், அவரின் பேட் ஸ்விங்கும் தான். ரஹானேவின் ஆட்டம் மீண்டும் கவிதை போல் அழகாக மாறியுள்ளது. அதனை தான் இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என்னும் தனது கடைசி யுத்தத்தில் நிச்சயம் ரஹானே வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.