LOADING

Type to search

இலங்கை அரசியல்

பொருளாதார நெருக்கடியால் கேள்விக்குள்ளாகி உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் கல்வி நிலை

Share

(மன்னார் எஸ்.றொசேரியன் லெம்பேட்)

(11-04-2023)

நாட்டின் சமகால பொருளாதார நெருக்கடி நலிவடைந்த மக்கள் பலரின் வாழ்க்கையிலும் வெகுவாகத் தாக்கம் செலுத்தியுள்ள நிலையில், பாடசாலை செல்கின்ற பிள்ளைகளின் கல்விச் செலவை ஈடு செய்ய முடியாத நிலையில் திண்டாடும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்ந்தோம்.

எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எதிர் காலத்தில் தமது பிள்ளைகள் எதிர்கொள்ளக் கூடாது என்ற மனப்பாங்குடன் பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் உள்ள பெண்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

வடக்கு கிழக்கில் பல்வேறு விதங்களில் பெண்கள் பலரும் பெண் தலைமைத்துவ குடும்பங்களாக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போர் காரணமாக அதிக பாதிப்புகளையும், பொருளாதார நெருக்குதல்களையும் எதிர் கொண்ட சமூகமாகவும் பெண் தலைமைத்துவ குடும்பங்களே காணப்படுகின்றன.

தமிழர்கள், முஸ்லிம்கள் சிங்களவர்கள் என அனைவரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான பாதிப்புகளில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அவர்களைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் சுமார் 54 ஆயிரத்து 532 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளதாக வடமாகாண மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதிலுமுள்ள ஏனைய மாகாணங்களிலும் பாதிப்புக்கள் வடக்கு, கிழக்கை விடக் குறைந்தளவானதே.

‘நான் கணவனை பிரிந்து வாழ்ந்து வருகின்றேன். எனக்கு பாடசாலைக்குச் செல்லும் 4 பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகளுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது 800 ரூபாய் வரை தேவைப்படுகிறது என்கிறார் முல்லைத்தீவு முள்ளியவளை யைச் சேர்ந்த வினோதா. அவருக்கு வயது 46.

‘பிள்ளைகளின் கல்விக்காகவும், குடும்ப செலவீனங்களுக்காகவும் கூலி வேலை செய்து வருகிறேன். கிடைக்கிற நாளாந்த வருமானம் பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதல்ல.வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டால், பிள்ளைகளின் கல்விச் செலவையும் இதர தேவைகளையும் ஈடு செய்து கொள்வேன். இதன் மூலம் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தங்கு தடைகள் இன்றி முன்னெடுக்க என்னால் முடியும். நாங்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை எமது பிள்ளைகள் எதிர் நோக்கக் கூடாது. அதற்காக அவர்கள் சிறப்பாக கற்க வேண்டும்’ என்று வினோதா எதிர்பார்ப்புக்களை பகிர்கிறார்.

முல்லைத்தீவு கரும் புள்ளியானில் வாழும் மூன்று பிள்ளைகளின் தாயான கோகுலன் சுகந்திக்கு மூன்று பிள்ளைகள்.

மூவரும் பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றனர்.

‘அப்பியாசக் கொப்பிகளின் விலை ஏற்றத்தால் கொப்பிகளை வேண்ட சவால்களை சந்தித்தோம்.கடந்த காலங்களில் குறைந்த விலையில் தேவையான அப்பியாச கொப்பிகளை வேண்ட முடிந்தது.தற்போதைய சூழ்நிலையில் ஒரு அப்பியாசக் கொப்பியை வேண்ட 200 ரூபாய் தேவைப்படுகிறது.ஒரு பிள்ளைக்கு ஒரு தவணைக்கு அப்பியாசக் கொப்பியை கொள்வனவு செய்ய சுமார் 6500 ரூபாய் வரை தேவைப்படுகிறது என கூறினார் கோகுலன் சுகந்தி.

விவசாய நடவடிக்கையில் ஈடுபடுகிறேன்.பிள்ளைகளின் கல்விச் செலவு,குடும்ப செலவு என்பவற்றை ஈடு செய்ய முடியாத நிலையில் நாளாந்த பொழுதை கழிக்கின்றோம்’ என விரக்தியோடு கூறினாள்

அனுதீபா

கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்டு, தனது மகளின் கற்றல் செயற்பாடுகளையும் குடும்ப செலவினங்களையும் கட்டிக்காத்து வந்த கரும்புள்ளி யானைச் சேர்ந்த அனுதீபா, தனது கால்நடைகளில் 4 மாடுகள் நோயால் இறந்து விட்ட நிலையில், 3 மாடுகளை மாத்திரம் தற்போது வளர்த்தவாறு, குடும்ப செலவுக்கும் பிள்ளையின் கல்வி செலவுக்கும் இடையே போராடி வருகின்றார்.

தலை மீது சுமத்தப்பட்ட குடும்ப பாரத்தை தணிப்பதற்காக கிராமத்தில் கிடைக்கும் கூலி வேலைகளுக்கும் அனுதீபா செல்கின்றபோது, வாழ்க்கைச் செலவு மும்மடங்காக அதிகரித்ததால், கூலியாகக் கிடைக்கும் வருமானத்தில் குடும்ப செலவுகளை ஈடுகட்ட முடியாதவளாக, சுயதொழில் வாய்ப்பொன்று அமையப்பெற்றால், பிள்ளையின் கல்வி செலவுகளையும் ஈடு செய்து முன்னேற முடியும் என்பது அவளது எதிர்பார்ப்பாக உள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2 ஆம் வகுப்பில் கல்வி கற்று வரும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த தீபனுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

ஒரு சகோதரி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகிறார். இன்னும் ஒரு சகோதரி சாதாரண தரம் படித்து வருகிறார். மூவரது கல்விச் செலவும் கால் நடையை மையப்படுத்தியே அமைந்துள்ளது. அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்தே படிப்பு உள்ளடங்களாக இதர தேவைகளையும் ஓரளவேனும் பூர்த்தி செய்து கொள்கின்றனர். தனது தாயினால் குடும்பச் செலவை சமாளிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும்,சகோதரி உயர் கல்வியை கைவிட நேரும் நிலையில் உள்ளதாக தமது குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்து விரக்தி அடைகின்றார்.

வவுனியா சலலீலீகம பகுதியைச் சேர்ந்த எச்.எம்.சோபாலிக,

கணவனை இழந்த நிலையில், 3 பிள்ளைகளோடு வறுமையில் வாடுகிறார்.’வயல் மற்றும் தோட்ட வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கிறேன்.தற்போது மின்சார கட்டணம் அதிகரித்துள்ளது.தோட்டத்திற்கு கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்க வேண்டும்.இதனால் அதிக மின்சாரம் விரயமாகிறது. அதிக மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். தோட்டச் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கான உணவு,பாடசாலைக்கான செலவீனங்களை செய்ய முடியாத நிலையில் நிக்கின்றேன்,என கவலை கொள்கிறார்.

எனது கணவர் யுத்தத்தின் போது மரணித்து விட்டார்.எனக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.4 பிள்ளைகள் திருமணம் முடித்து விட்டனர்.நானும் எனது கடைசி பிள்ளையும் உள்ளோம்.தற்போதைய பொருளாதார நிலை காரணமாக நான் பல கஸ்டங்களை அனுபவிக்கின்றேன்.திருமணம் முடித்த பிள்ளைகளுக்கு உரிய தொழில் வாய்ப்பு இல்லை.இதனால் எனது கடைசி பிள்ளையின் பாடசாலை செலவு மற்றும் குடும்பச் செலவை ஈடு செய்ய முடியாத நிலையில் உள்ளேன்.எனக்கு சிறு வயதில் காலில் ஏற்பட்ட காயம் தற்போது பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தொடர்ந்தும் என்னால் கூலி வேலை செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது என அடுத்த கட்டம் நோக்கிய பயத்தை வெளிப்படுத்தினார் வவுனியா குடா கட்டி குடிய பகுதியைச் சேர்ந்த யூ.சுவரன லதா.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 345 கிராம அலுவலர் பிரிவுகளில்,

யுத்தத்தினால் கணவனை இழந்த,அங்கவீனமுற்ற கணவர்,கணவனை பிரிந்து வாழ்தல்,கணவன் தடுப்பில் இருத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண் தலைமைத்துவ குடும்பங்களாக 34 ஆயிரத்து 155 குடும்பங்கள் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

‘மூத்த பிள்ளை உயர் தரத்திலும்,2 வது பிள்ளை தரம் 7 இலும்,மூன்றாவது பிள்ளை தரம் 5 இலும் நான்காவது பிள்ளை தரம் 2 இலும் கல்வி கற்கின்றனர். கல்விச் செலவு உட்பட குடும்பச் செலவை ஈடு செய்ய கூலி வேலைக்குச் செல்கின்றேன் என்றார் 45 வயதான கணவர் இல்லாத நிலையில் நான் கூலி வேலை செய்கின்றேன் என்றார் காத்தான்குடியை சேர்ந்த பாத்திமா பர்வீன்.

வீட்டில் கோழியும் வளர்த்து அதில் கிடைக்கிற மேலதிக வருமானத்தை வைத்து அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட முயற்சி எடுத்தாலும், மருத்துவ மற்றும் உணவு போன்ற செலவுகளை தன்னால் சமாளிக்க முடியவில்லை என தனது சுய தொழில் முயற்சியும் செலவுகளை ஈடு செய்ய உதவவில்லை என ஏக்கம் கொண்டார் பாத்திமா பர்வீன்.

தாயின் துன்பங்களை பகிர்ந்த தரம் 7 இல் கல்வி கற்கும் பாத்திமா அஸீனா (பெயர் மாற்றப்பட்டது)

‘எனக்கு வாப்பா இல்லை.உம்மா தான் எங்களை எல்லாம் வைத்து பார்க்கிறார்.உணவு மற்றும் படிப்பிற்கான அனைத்து விடயங்களையும் உம்மாவே பார்க்கின்றார். பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கூலி வேலை செய்து எங்களை பார்க்கிறார் என கூறினாள்.

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியை சேர்ந்த மாணவனான றொசாந்தன் கூறுகையில்,

‘எனது அம்மா ஒரு முன்னாள் போராளி.அவர் இயலாத நிலையிலும் வீட்டு வேலைக்கு போய் உழைக்கின்றார். நாங்கள் மிகவும் கஷ்ட நிலையில் இருக்கிறோம்.நான் தரம் 10 இல் கல்வி கற்று வருகிறேன்.எனக்கு பாடசாலைக்கான புத்தக பை கூட இல்லை.உரிய அப்பியாசக் கொப்பிகள் கூட இல்லை.பாடசாலைக்கு அல்லது தனியார் வகுப்புகளுக்கு செல்ல துவிச்சக்கர வண்டி இல்லை. இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாங்கள் பல்வேறு இடர்களை நாங்கள் சந்தித்து வருகிறோம்.

அம்மாவினால் தொடர்ந்தும் வேலைக்கு செல்ல முடியாது. ஒரு பொருளாதார நெருக்கடியின் மத்தியில் நான் அம்மாவின் உதவியுடன் கல்வி கற்று வருகிறேன்.நான் நாளாந்தம் 5 கிலோ மீற்றர் தூரம் நடந்து பாடசாலை சென்று வருகின்றேன்.அவ்வளவு தூரம் நடந்து செல்வது என்பது எனக்கு சரியான கஷ்டமாக உள்ளது.இந்த நிலை தொடருமாக இருந்தால் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என விரக்கி நிலையை கூட்டிக்காட்டினான்.

றொசாந்தனின் தாயாரும் முன்னாள் போராளியுமான வசந்தி, தனது மனதில் இருந்தவற்றை பேச ஆரம்பித்தால்,

‘நான் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி.15 வயதில் இணைந்து கொண்டேன்.1998 ஆம் ஆண்டு எனது கண்,முகம்,காது போன்றவை பாதிக்கப்பட்டது. தற்போது நான் குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வருகின்றேன். என்னை பார்க்க ஒருவரும் இல்லை. நான் வீடு வீடாக சென்று வீட்டு வேலை பார்ப்பது,தேங்காய் துருவி கொடுப்பது எனது வேலை.

எனக்கு 250 ரூபாய் பணம் தருவார்கள்.அந்த பணம் போக்குவரத்திற்கு காணாது.எனது தாய் தந்தையர்கள் வயது போனவர்கள்.தந்தைக்கு 85 வயது.அவர் படுக்கையில் உள்ளார்.வீட்டு வேலை செய்து கிடைக்கின்ற பணத்தை வைத்து அவர்களையும் நான் தான் பார்க்கின்றேன்.எனது உடலில் பல காயங்கள் உள்ளது.வெயிலில் சென்று வேலை செய்ய முடியாத நிலை உள்ளது.இருந்தும் எனது பிள்ளைகளையும் படிக்க வைக்கிறேன்.நான் வீட்டில் இருந்தே சுயதொழில் செய்ய வேண்டும்.ஆனால் அவ்வாறான சுய தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.எனக்கு வீட்டில் இருந்து தொழிலை மேற்கொள்ள உதவி செய்தால் எனது பிரச்சனைகள் ஓரளவுக்கு தீரும்.தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக நான் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளேன்.எவ்வித கொடுப்பனவுகளும் அரசாங்கத்தால் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.எனவே எனக்கு சுய தொழில் மேற்கொள்ள அரசாங்கமும் சரி,அரச சார்பற்ற நிறுவனங்களாக இருந்தாலும் சரி உதவி புரிந்தால் எனது வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு சென்று எனது பிள்ளைகளின் கல்வியை இடை இன்றி கொண்டு செல்ல முடியும்.

எங்களுக்கு தாய் தந்தை இல்லை.எனக்கு ஐந்து சகோதரிகள் உள்ளனர்.எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார்.எனது சகோதரிகளை நானே பார்க்கிறேன்.படிக்க வைக்கிறேன்.

அவர்கள் 5 பேரையும் படிக்க வைக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.எனவே எங்களுக்கு வாழ்வாதாரத்திற்கான உதவிகளை மேற்கொண்டு வழங்கினால் எனது சகோதரிகளை படிக்க வைக்க முடியும்.என மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் டிசாந்தினி கூறுகிறார்.

ரஞ்சனியின் அரவணைப்பில் உள்ள தனுஷ் கூறுகையில்,

எனது தாய் மரணித்து விட்டார்.நான் மூத்த சகோதரியின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றேன்.நான் தரம் 6 இல் கல்வி கற்று வருகிறேன்.தற்போது பாடசாலை கற்றல் உபகரணங்களின் விலை அதிகரித்துள்ளமையினால் எங்களுக்கு போதிய அளவு பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

லோஜினன் என்ற மாணவன் தெரிவிக்கையில்,

‘நான் சித்தாண்டி ம.வி பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கிறேன். நான் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றேன்.அம்மா தோட்டம் செய்து என்னை பார்த்து வருகிறார். எனது குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லை.பாடசாலைக்கு பேருந்தில் சென்று வர வேண்டியுள்ளது.நாளாந்தம் பயணச் செலவை ஈடு செய்ய முடியாத நிலை உள்ளது.வீட்டில் இருந்து படிக்க முடியாத நிலை.வீடு சேதமடைந்துள்ளது. மழைக்காலத்தில் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுக்கிறேன். என தெரிவித்தார்.

கண்டி ஹந்தானை தோட்டத்தில் லயன் குடியிருப்பு 8 ல் சுமார் 17 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

அக் குடியிருப்பாளர்களில் ஒருவரான 40 வயதுடைய ஜெயமலர் தானும் மகளும் தனது தாயாருடன் வசித்து வருவதாகவும். வாழ்வாதாரத்திற்காக கூலித் தொழில் கிடைப்பதில்லை என்றும் தேயிலை கொழுந்து பறிக்கும் வேலையும் குறை வந்தமையினால் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டோம் என கஷ்டங்களைப் பகிர்ந்தார்.

குடும்ப வாழ்வாதாரம் மகளின் படிப்பு ஆகியவற்றிற்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் கொழும்பிற்கு தொழில் வாய்ப்பை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.மகளை அம்மம்மாவின் அரவணைப்பில் விட்டுச் சென்றுள்ளேன்.நாளாந்தம் 1000 ரூபாய் வருமானம்.அதனை வைத்து எனது குடும்பச் செலவை கவனிக்கிறேன். மகள் உரிய கல்வியை கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு, பகல் பாராது கூலி வேலை செய்து வருவதாக மிகுந்த களைப்போடு பேசினார்.

இவரது மகள் அனுஷா,

கண்டி மகாசிங்க ம.வி பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்று வருகின்றாள்.
தோட்டத்தில் இருந்து நாளாந்தம் பாடசாலைக்கு முச்சக்கர வண்டியில் செல்கின்றாள். முச்சக்கர வண்டிக்கான கட்டணமாக மாதம் 5000 ரூபா செலுத்த வேண்டிய நிலையில் தனது தாயார் காணப்படுகிறார் என்ற விடயத்தைச் சுட்டிக்காட்டியவாறு பேச ஆரம்பித்தாள்.
‘அம்மா சிந்தும் ஒரு துளி வியர்வையும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு, எனது கல்வி நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றேன்.

தமிழரான நான் எனது கல்வியை சிங்கள மொழி மூலம் கற்று வருகிறேன்.தற்போது தமிழை விட சிங்களத்தையோ அதிகம் கதைக்க எழுத கற்றுக் கொண்டுள்ளேன்.எதிர் காலத்தில் இந்த நாட்டில் சிங்கள மொழி தெரிந்து இருந்தால் தான் ‘அரச வேலை வாய்ப்புக்களை’ பெற்றுக்கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்புடன் எனது கல்வியை முன்னெடுத்து வருகின்றேன்.எனது தாயின் கூலி தொழிலிலேயே எனது கல்வி தங்கி இருக்கிறது.என தாயின் அர்ப்பணிப்பையும் கல்வி மீதான நம்பிக்கையையும் பகிர்ந்தாள்.

வடக்கில் மாகாணத்தில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களில் உள்ள பெண் முயற்சியாளர்கள் குறித்து மாகாண தொழில்துறை திணைக்கள பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணத்தை தொடர்பு கொண்டபோது,

‘வடக்கில் தற்போது வரை 3514 பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பெண் முயற்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

பலர் பதிவுகள் இன்றி தன்னிச்சையாக இயங்கக் கூடும்.என தெரிவித்தார்.
ஏனையவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுயதொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடேவிடம் வினவியபோது.

‘கொரோனா பரவலை தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் பொருட்களின் விலையேற்றம் அதிகரித்து, பாதிக்கப்படுவது பெண் தலைமைத்துவ குடும்பங்களும் குறித்த குடும்பத்தில் உள்ள மாணவர்களுமே.
பிள்ளைகளுக்கான உணவு மற்றும் பாடசாலை கற்றல் உபகரண்ஙகளை கொள்வனவு செய்ய என பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றனர். பாடசாலை அதிக காலம் மூடப்பட்ட மையினால் அவற்றை மீள பெற்றுக்கொள்ள அவர்கள் தனியார் கல்வியையும் அதிக அளவில் கற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் இவற்றை ஈடு செய்ய பெண் தலைமைத்துவ குடும்ப பெண்களுக்கு நாட்டில் உரிய தொழில் வாய்ப்பு இல்லை. தமது பிள்ளைகளின் கல்வி செலவு உள்ளடங்களாக ஏனைய தேவைகளை பூர்த்தி செய்ய இவர்களிடம் நிதி வசதி இல்லை.இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அடையாளம் கண்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்த சுய தொழில் நடவடிக்கைகளுக்கு அவர்களை உள்வாங்கி வருகின்றனர்.

மெசிடோ நிறுவனம் வடக்கு கிழக்கு உள்ளடங்களாக நாட்டில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் சுய தொழில் உற்பத்தியை ஊக்கப்படுத்தி வருகிறது.

கருவாடு பதனிடுதல்,சவர்க்கார உற்பத்தி,வீட்டுத்தோட்டம் சேதனைப் பசலை பயன்படுத்தி ,நஞ்சற்ற நெல் உற்பத்தி,கோழி வளர்ப்பு உள்ளிட்ட சுயதொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறோம்.
பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அடையாளப் படுத்தப்பட்டால் அவர்கள் பெண்கள் குழுக்கள் ஊடாக அவர்களுக்கு பொருளாதாரத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் தற்சார்பு பொருளாதார சுயதொழில் நடவடிக்கையை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்’ என்றார்.

‘பொருளாதார நெருக்கடியை முற்றிலுமாக சமாளிக்க கூடிய நிலையில் நடுத்தர குடும்பங்களோ வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களோ இல்லை’ என்பதே உண்மை.அரசாங்கம் இக் குடும்பங்கள் மீள் எழுச்சி பெறுவதற்கான நடை முறையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இவர்களின் குடும்பங்களில் முன்னேற்றம் காணும் பட்சத்தில் குறித்த குடும்பங்களில் உள்ள பாடசாலை செல்லும் மாணவர்களின் கல்வியில் ஒளி வீசும்.

எனவே இவ்வாறான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரச அரச சார்பற்ற அமைப்புக்களும் கைகொடுக்க வேண்டும். என்பதே பாதிக்கப்பட்ட மக்களினதும்,குறிப்பாக கல்விக்காக ஏங்குகின்ற மாணவர்களின் எதிர் பார்ப்பாகவும் அமைந்துள்ளது.