LOADING

Type to search

இலங்கை அரசியல்

அதிலிங்கேஸ்வரருக்கு அனுமதி….. ஆனால் குறுந்தூர் ஐயனாருக்கு ?…..

Share

யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். 

கனடாவிலுள்ள எமது தமிழ் உறவுகள் வெள்ளிக்கிழமை (28) அன்று காலை கண் விழிக்கும் (அல்லது சற்று தாமதமாக எழுந்து இந்த வார உதயன் பத்திரிகையை வாசிக்கும்) நேரத்தில், வவுனியா வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் மீண்டும் தனது இடத்தில் வீற்றிருப்பார். பல வாரங்களாக மன உளைச்சலில் இருந்த தமிழர்களிற்கு இது சற்று மனதிற்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருக்குமென்று நம்புகிறேன்.

வவுனியா மாவட்டம் நெடுங்கேணி வெடுக்குநாறியில் விசமிகளால்  திட்டமிட்டு உடைக்கப்பட்ட ஆலய விக்கிரகங்களை அதே இடத்தில் மீண்டும் நிறுவிட வவுனியா  நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. 

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் ஒலுடுக் கிராமத்தில் அமைந்திருந்த ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் மார்ச் மாதம் இனம் தெரியாத விசமிகளால் உடைக்கப்பட்டமை தொடர்பில் ஆலய நிர்வாகம் நெடுங்கேணிப் பொலிசில் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் நெடுங்கேணிப் பொலிசாரினால்  வவுணியா நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு  நேற்று நீதவான் சுபாஜினி தேவாராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி கட்டளையை நீதவான் வழங்கினார். 

ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது ”எவரும் அங்கே வழிபட முடியும்” என மன்று ஏப்பிரல் மாதம் 24ஆம் திகதி கட்டளையிட்டதோடு வழக்கை வியாழக்கிழமை (27) தினத்திற்கும் திகதியிடப்பட்டது. 

இருந்தபோதும் ஆலய நிர்வாகிகள் சிலர் வலிந்து நாசம் செய்யப்பட்ட அந்த ஆலயப் பகுதியில்  வழிபாட்டில் ஈடுபட்டாலும், துரதிஷ்டவசமாக, மிகவும் மன வருத்தத்துடன், அங்கே எந்தவொரு விக்கிரகங்களும் இன்றியே வழிபாட்டில் ஈடுபட்டனர். விக்கிரகம் இல்லாத ஆலயத்தில் பூசை அல்லது வழிபாடு என்பது மிகவும் வருத்தமளிக்கும் செயல் என்றாலும், தமது இறை கடமைகளை நிறுத்துவது முறையல்ல என்பதால், கடும் மன வேதனையுடன் ஆலய நிர்வாகத்தினர் அங்கு சென்று பெயரளவில் வழிபாட்டில் ஈடுபாட்டு வந்தனர். 

அதனால், அங்கே முன்பிருந்தமை போன்று அந்த  விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்ய நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என  ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று நேரில் பிரசன்னமாகி மன்றில்  சமர்ப்பணம் செய்தார்.

இதன்போது சட்டத்தரணி சுமந்திரனுடன் வவுனியாவைச் சேர்ந்த மேலும் 12 சட்டத்தரணிகள் மன்றில்  ஆஜராகினர். வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போது, வவுனியா பொலிஸ் தரப்பில் ஆஜராகியிருந்தாலும், இரண்டாவது முறையாக தொல்லியல் திணைக்களத்தின் சார்பில் யாரும் சமூகமளிக்கவில்லை என்பது நீதிமன்றத்தால் குறித்துக்கொள்ளப்பட்டது. 

எனினும் தொல்லியல் திணைக்களம் சார்பில் ஏன் யாரும் நீதிமன்றத்தில் சமூகமளிக்கவில்லை என்பது தொடர்பில் எந்த விளக்கங்களும் நீதவான் முன்னர் வைக்கப்படவில்லை. 

இந்த வழக்கினை ஆராய்ந்த நீதிபதி தனது  கட்டளையில் இன்றைய தினம் (வியாழக்கிழமை 27 ஆம் திகதி) பொலிசார் தமது பொறுப்பில் உள்ள ஆலய விக்கிரகங்களை ஆலய நிர்வாகத்தினரிடம் கையளிக்க வேண்டும். நிர்வாகத்தினர் வெள்ளிக்கிழமை 28ஆம் திகதி காலையில் அவற்றினை ஏற்கனவே இருந்த இடத்தில் பிரதிஸ்டை செய்யலாம் என்று உத்தரவிட்டார்.  

கடந்த மார்ச் மாதம் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்த விக்கிரகங்கள் அடித்து நொறுக்கி சேதமாக்கப்பட்ட பிறகு, மன வருத்தமடைந்திருந்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள், அங்கு புதிய விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்ய ஏற்பாடு செய்தனர். எனினும் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் முன்னிலையில் அவை மீண்டும் பிரதிஸ்டை செய்யப்படவிருந்த நேரத்தில் தொல்லியல் திணைக்களத்தின் தலையீட்டால், பொலிசார் அந்த நிகழ்வை நிறுத்தி, அங்கு வைக்கப்படவிருந்த புதிய விக்கிரகங்களை தமது பொறுப்பில் எடுத்தனர். 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (28) அன்று நீதிமன்ற உத்தரவின்படி புதிய விக்கிரகங்களின் பிரதிஸ்டை இடம்பெறும்போது தொல்லியல்த் திணைக்களமும் பிரசன்னமாக முடியும் எனவும், எனினும் அவர்கள் அந்த நிகழ்விற்கு தடை ஏதும் ஏற்படுத்தக் கூடாது என்றும் வவுனியா நீதவான் கட்டளையிட்டதோடு வழக்கை மேலதிக விசாரணைக்காக எதிர் வரும் மே 17ஆம் திகதிக்கும்  ஒத்தி வைத்தார். 

நீண்டகால வரலாற்றைக்கொண்ட ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப் பகுதியில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள தொல்லியல்த் திணைக்களம் தடைவிதித்து வந்ததோடு 2019ஆம் ஆண்டின் பின்பு அங்கு பொதுமக்கள் செல்வதற்கும் தடை விதித்து வந்தனர். இந்த தடையின் காரணமாக பூசைகள் தடைப்பட்டதோடு எவரும் ஆலயப் பகுதிக்கு செல்ல முடியாத சூழலும் சுமார் நான்கு ஆண்டுகளாக நிலவி வந்தது.  

இந்த நிலையிலேயே வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளதான தகவல் ஆலய நிர்வாகத்திற்கு கிட்டியது. இந்த  தகவலையடுத்து  மார்ச் மாதம்  26ஆம் திகதி ஆலயப் பகுதிக்குச் சென்ற ஆலய நிர்வாகத்தினர் இது தொடர்பில் மறுநாள் நெடுங்கேணிப் பொலிசிலும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தனர். இந்த விடயம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்து வவுனியாவில் பொதுமக்கள் வீதியில் இறங்கும் ஆர்ப்பாட்டம் வரை சென்றது. ஆர்ப்பாட்டம் நடாத்த வேண்டாம் விக்கிரகங்களை மீள வைக்க முடியும் என மாவட்ட ஆரச அதிபர் மற்றும் அமைச்சர்கள் வாய்வழியாக கூறியபோதும் அதனை எழுத்தில் வழங்க மறுத்தமையால் வவுனியாவில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த ஆலயத்தின் மீதான தாக்குதல் மற்றும் அங்கு மக்கள் சென்று வழிபடுவதற்கான தடையை மதத் தலைவர்களும், சிவில் சமூகத்தினரும், மாணவர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கண்டித்திருந்தன என்பது நினைவூட்டத்தக்கது.

சற்று பின்னோக்கிப் பார்த்தால், ஏப்பிரல் மாதம்  2ஆம்  திகதி மீண்டும் ஆலய விக்கிரகங்கள் அதே இடத்தில் பிரதிஸ்டை இடம்பெறும் என அமைச்சர்களான டக்ளஸ் தேவானாந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கூறி இரண்டாம் திகதி ஆலய விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்ய முற்பட்ட சமயம் அமைச்சர் ஒருவரின் கட்சியை சேர்ந்த ஒருவர் சிலரை அழைத்து வந்து தமது இஸ்டத்திற்கு சிலை வைக்க முயன்றதாக கூறப்பட்டதை அடுத்து தொல்லியல்த் திணைக்களம் கடவுள்களின் திருச்சொரூபங்களை மீண்டும் அங்கு பிரதிஸ்டை செய்ய தடைபோட்டது. இதனால் ஆலய சூழல்வரை சென்ற அமைச்சர்கள் ஆலய  வளாகத்திற்குச் சென்றபோதும் ஆலய விடயம் நீதிமன்றில் இருப்பதனால் தற்போது பிரதிஸ்டை செய்ய முடியாது எனத் தெரிவித்த அமைச்சர்கள் இருவரும்  அங்கிருந்து வெளியேறிய நிலையிலேயே மேற்படி வழக்கு இடம்பெற்றது. 

இதையடுத்து இனிமேல் நாம் அமைச்சர்களையோ அதிகாரிகளையோ நம்பவில்லை நீதிமன்றத்தையே நம்பி நிற்கின்றோம் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.

தற்போது வெடுக்குநாறி மலையில், இடித்தழிக்கப்பட்ட விக்கிரகங்களை மீண்டும் பிரதிஸ்டை செய்ய தடைகள் ஏதுமில்லை என்று வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், சிவபெருமான் அந்த மலையில் மீண்டும் எழுந்தருளி அவரது பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்று சைவர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார்  ஆலயம் தொடர்பிலும்   வியாழனன்று முல்லைத்தீவு நீதிமன்றில் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் வழக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இந்த வழக்கு 2023-03-02 அன்று சட்டத்தரணி தனஞ்சயன், கெங்காதரன் ஊடாக வடக்கு மாகாண சபையின. முன்னாள் உறுப்பினர்  துரைராசா ரவிகரனால்  வழக்கு தொடுக்கப்பட்டு அந்த வழக்கு 2023-03-30 இற்கு  தவணை இடப்பட்டது. 2023-03-30 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தொல்லியல் திணைக்கள பணிப்பாளர்  அநுர மணதுங்க சார்பில் சட்டமா அதபர் திணைக்கள  சட்டத்தரணியும் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி அமரதுங்க ஆகியோர்  தவணை  கோரியதற்கு அமைய வியாழக்கிழமை திகதியிடப்பட்டிருந்த வழக்கு அன்றைய தினம் விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அவ்வகையில் 27ஆம் திகதி வியாழனன்று வழக்கு விசாரணையின் போது  சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான  சட்டத்தரணி விகாரை  கட்டப்பட்டுள்ளதனை ஏற்றபோதும் அதன் நியாயப்படுகளை விளக்கினார். இதேநேரம் வழக்காளர் தரப்பு சட்டத்தரணிகளும் விவாதங்களை முன்வைத்த நிலையில் இரு தரப்பு விவாதங்களையும. கேட்டறிந்த நீதிபதி ரி.சரவணராஜா வழக்கை யூலை மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். 

குறுந்தூர் மலையிலுள்ள ஆதிசிவன் அய்யனார் ஆலயத்தில் பன்னெடுங்காலமாக தாங்கள் வழிபட்டு வந்ததாக தமிழர்கள் கூறுகின்றனர். அங்கு சென்று வழிபட முடியாமல் தடுப்பது மட்டுமின்றி, அங்கு நீதிமன்ற உத்தரவொன்றயும் மீறி புதிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்படுவது ஏற்றுக்கொள முடியாதது என்று தமிழ் மக்கள் உறுதியாக கூறுகின்றனர். எனினும் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதன் முடிவிற்காக காத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

வவுனியா ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாடு மற்றும் அங்கு உடைத்தழிக்கப்பட்ட விக்கிரகங்களிற்கு பதிலாக புதியவற்றை மீண்டும் பிரதிஸ்டை செய்ய அனுமதிவழங்கியது போன்று நீதிமன்றம் குறுந்தூர்மலை விடயத்திலும் நல்லதொரு தீர்ப்பை வழங்கும் என்று தாங்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

வெடுக்குநாறி ஆலய வழக்குகளின் பின்னர் நெடுங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவின் ஒலுமடுவில் உள்ள வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகிகளில் ஒருவரான வை.பூபாலசிங்கத்திடம் ஆலய விக்கிரகங்களின் பிரதிஸ்டை தொடர்பில் கேட்டபோது:

”எமது ஆலய லிங்கம் உள்ளிட்ட விக்கிரகங்களை மீண்டும் பிரதிஸ்டை செய்ய நீதிமன்றமே அனுமதி வழங்கிய வகையில் உடனடியாக வெள்ளிக் கிழமை பகல் 12 மணிக்கு அந்தப் புண்ணிய காரியம் இடம்பெறும் அதற்கான ஏற்பாடுகளை மிகத் துரிதமாக மேற்கொள்வோம்” என்றார். 

இதற்கமைய இன்றைய தினம் ஒலுமடு ஆதிலிங்கேஸ்வரர் மீண்டும்  பீடத்தில் அமர   அனுமதி கிட்டிய நிலையில் பிரதிஸ்டை இடம்பெறுகின்றதா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுவதோடு பலரும் ஆலயத்தை நோக்கிச் செல்ல தயாராகியுள்ளனர். 

வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த இடத்தில் இறைவனின் புதிய திருவுருவச் சிலைகளை மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட அனுமதி கிடைத்துள்ளது என்றாலு, குறுந்தூர்மலை தொடர்பில் எவ்விதமான தீர்ப்பும் இதுவரை கிட்டவில்லை. ஆனால் அங்கு நீதிமன்ற உத்தரவையும் மீறி அங்கு மிகப்பெரிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு வருவதும் அது முடிவடையும் நிலையில் உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. நீதிமன்ற உத்தரவையும் மீறி எவ்வாறு அவ்வளவு பெரிய விகாரை கட்டப்படுகிறது என்பதற்கு மௌனமே பதிலாக உள்ளது.