கனடாவில் வசிக்கும் ஈழத்து எழுத்தாளர் வீணை மைந்தனின் 3 நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு
Share
நடராசா லோகதயாளன்
ஈழத்து எழுத்துலகப் படைப்பாளிகளில் பரவலாக அறியப்பட்ட வீணை மைந்தனின் மூன்று நூல்கள் வைபவ ரீதியாக யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (28) அன்று வெளியிடப்பட்டன.
கனடாவில் வசித்து வரும் வீணை மைந்தன் என்று எழுத்துலகில் அறியப்படும் கே. ரி. சண்முகராஜா அவர்களின் அந்த நூல்கள் நாகலிங்கம் நூலாயம் ஆதரவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.
பேராசிரியர் கலாநிதி நாகலிங்கம் சண்முகலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணை வேந்தர் சி.சிறீசற்குணராஜா முதன்மை விருந்தினராகவும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் சிறப்பு விருந்தினராகவும் பங்குபெற்று விழாவினை கௌரவித்தனர்.
இதன்போது “மண்ணும் மனசும்”, ”மறக்கத் தெரியாத மனசு” மற்றும் தமிழ் சினிமாவில் மகாகவி பாரதி பாடல்கள் ஆகிய மூன்று புத்தகங்கள் வெளியீட்டு வைக்கப்பட்டன.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் வைத்தியர்கள், ஊடகவியலாளர்கள், நூல் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் தாயகத்தில் சிறந்த பண்பாட்டு ஆளுமை ஆக்க திறனுக்கான கௌரவிப்பு விருது கனடா உதயன் பத்திரிகை நிறுவனத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதன்போது மருத்துவர் சிவன் சுதன், வாழ்வக இயக்குநர் ரவீந்திரன், கிராமிய செயல்பாட்டாளர் யோசப்பாலா, கொ.அற்புதராஜ் சிறந்த ஆசிரியர், ஆய்வாளர் சிதம்பரநாதன் ரமேஸ். ஆகியோருடன் பெண் நாதஸ்வரக் கலைஞர் சுந்தரம் தையல்நாயகி ஆகிய ஆறுபேர் கௌரவிக்கப்பட்டனர்.
முன்னதாக இந்த விழாவில் பங்கேற்க வந்திருந்தவர்களிற்கு கனடா உதயனின் இலங்கைச் சிறப்பிதழை அதன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் வழங்கினார்.