இன்று சர்வதேச தொழிலாளர் தினம் – கொழும்பில் பலத்த பாதுகாப்பு!
Share
(01-05-2023)
சர்வதேச தொழிலாளர் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது.
1886ஆம் ஆண்டு மே 1ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் திரண்டு 8 மணி நேர பணி மாறுதல் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல நாட்கள் நீடித்த போராட்டங்களுக்கு பொலிஸ் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது ஏராளமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர்.
1889 ஆம் ஆண்டு, தொழிலாளர் போராட்டம் தொடங்கிய மே முதல் நாள், சர்வதேச தொழிலாளர் அமைப்பால் உலக தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் மே மாதம் முதல் நாள் சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதுடன், தொழிலாளர் தினத்தை கொண்டாடும் வகையில் மே தின கூட்டங்கள், பேரணிகள் மற்றும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
இதேவேளை, இன்று (01) இலங்கையில் நடைபெறவுள்ள அரசியல் கூட்டங்களுக்கு சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் இதனை தெரிவித்தார்.
கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த பிரதேசங்களில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெறும் மே தினப் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக 3,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.