LOADING

Type to search

இலங்கை அரசியல்

கனடா வீணை மைந்தன் 3 நூல்கள் வெளியீட்டில் யாழ் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் முன்னாள் வேந்தர்களின் புகழாரம்

Share

கடந்த ஏப்ரல் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை யாழ் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் அரங்கில் கனடிய எழுத்தாளரும் கவிஞருமாகிய வீணை மைந்தன், கே.ரி சண்முகராஜாவின் நூல்களான “மண்ணும் மனசும்”, “மறக்க தெரியாத மனசு”, “தமிழ் சினிமாவில் மகாகவி பாரதி பாடல்கள்” ஆகிய மூன்று நூல்கள் மண்டபம் நிறைந்த கற்றோர்,எழுத்தாளர், ஊடகவியலாளர்கள், வாசிப்புப் பிரியர்கள் மத்தியில் வெகு சிறப்பாக வெளியிடப்பட்டது.

முன்னை நாள் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் தலைமையில், இந்நாள் துணை வேந்தர் பேராசிரியர் கலாநிதி சி.சிறீசற்குணராஜா முதன்மை விருந்தினராக வீணை மைந்தன் ஆளுமையைப் புகழ்ந்தும் வியந்தும் பாராட்டிப் பேசினார்.

தலைமையுரையில் நாகலிங்க நூலாலய நிறுவனத் தலைவரும் பேராசிரியருமான திரு என்.சண்முகலிங்கன் 2015இல் இதே பல்கலைக்கழகத்தில் வீணைமைந்தனின் முத்தமிழ் நூல்கள் வெளியீட்டில் அறிமுகமாகி மீண்டும் புதிய மூன்று நூல்களை வெளியீடு செய்தல் வரை
நூலாசிரியரின் ஆழ்ந்த தமிழ்க்காதலையும் – தாய் மண் பற்றையும் எழுத்தின் மீது கொண்டுள்ள விடாத விருப்பையும் வியந்து புகழ்ந்துரைத்தார்.

கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் திரு.ஆர்.என் லோகேந்திரலிங்கம் தனது பத்திரிகை வளர்ச்சிக்கு முப்பது ஆண்டுகளாக வீணைமைந்தன் ஆற்றி வரும் தமிழ்ப்பணியை நன்றியுடன் மகிழ்ந்து சிறப்புரையாற்றினார்.

“மண்ணும் மனசும்” நூலை சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.இரா.இராஜேஸ்வரன் வாசித்து அனுபவித்த இரசணையுடன் ஆற்றிய விமர்சன உரை வாசிப்புப் பிரியர்களை நூலை வாங்கி வாசிக்கத் தூண்டியது.

“மறக்கத் தெரியாத மனசு” நூலுக்கு விமர்சன உரை நிகழ்த்திய மேனாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா நகைச்சுவை கலந்த ரசணையுடன் வீணை மைந்தனின் எழுத்து வடிவத்தை எல்லோர் மனதிலும் பதிய வைத்தார்.

மூன்றாவது நூலான “தமிழ் சினிமாவில் மகாகவி பாரதி பாடல்கள்” பற்றி பேராசியர் திரு. என்.சண்முகலிங்கன் பாரதி பாடல்களை இசைத்தபடி தனக்கேயுரிய பாணியில் மிக அழகாக விமர்சித்து நூலை விரும்பி வாங்க வைத்தார்.

வீணைமைந்தனின் ஏற்புரையுடன் விழா இனிதே இலக்கிய வெற்றி கண்டது.

– யாழ் சிற்பி