தையிட்டி விகாரையும் அரசியல்வாதிகளின் திடீர் போராட்டமும்
Share
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்
புத்த பகவான் இலங்கையின் தெற்கே அமைதியில்லை என்பதால் வட பகுதிக்கு வந்தாரா அல்லது வடக்கே நிலவும் அமைதியை குலைக்க புத்த பகவானை ஆராதிப்பதாகக் கூறும் பிக்குமார் கொண்டு வந்தனரா என்கிற கேள்வி வவுனியாவிற்கு வடக்கேயுள்ள மக்கள் மத்தியில் அண்மைக்காலமாக எழுந்துள்ளது. இதற்கு காரணம் புத்த பகவானின் திருவுருவச் சிலைகள் வட மாகாணத்தில் சமீபத்தில் அதிகரித்துள்ளதே. அவர் மீது மக்கள் வைத்துள்ள பக்தி, மரியாதை, அபிமானம், பற்று என்பதற்கெல்லம் அப்பாற்பட்டு, சமீப காலத்தில் நடைபெறும் சம்பவங்கள் அதற்கு எதிர்மறையான எண்ணங்களையே ஏற்படுத்துகின்றன என்று வட மாகாண மக்கள் அன்றாடம் அங்கலாய்க்கின்றனர்.
இந்த எதிர்மறையான சிந்தனை தோன்றுவதற்கு காரணமே வட மாகாணத்தில் ஆங்காங்கே புத்தரின் சிலைகள் தீடீரென தோன்றுவதே காரணமாக பேசப்படுகிறது. அதுவும் பிக்குமார் இராணுவத்தினர் மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் விகாரைகள் நிறுவப்படுவதால், போரினால் பாதிக்கப்பட தமிழ் மக்கள் மன உளைச்சலும், விசனமும் அடைந்துள்ளனர். என்பது பலருடன் உரையாடிய போது அறிய முடிந்தது. மிழ் அரசியல் கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்கின்றன என்கிற விமர்சனமும் காதில் விழாமல் இல்லை.
அண்மையில் தையிட்டியில் அரங்கேறிய சம்பவங்கள் இதை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டம் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் தையிட்டி கிராமத்தில் உள்ள கலைவாணி வீதியில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பாக அரசியல் கட்சிகள் மேற்கொண்ட நடவடிக்கைதான் என்ன என்ற ஆதங்கத்தின் மத்தியிலேயே இந்தக் கேள்வியும் எழுகின்றது.
தையிட்டி கிராமத்தில் கட்டப்படும் விகாரையொன்று இப்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டம் ஜே.250 கிராம சேவகர் பிரிவான தையிட்டி கிராமத்தில் ஏழரைப் பரப்பு காணி ஒன்றை நயினாதீவு நாக விகாரையின் பெயரில் அறுதி உறுதியில் உரித்தான நிலமாக உள்ளபோதும் தற்போதைய விகாரையானது நயினாதீவு விகாரைக்கு உரித்தான இந்த ஏழரைப் பரப்பு நிலத்தில் அமைக்கப்படவில்லை என்பதோடு இவை அனைத்துமே 1990ஆம் ஆண்டு யூன் மாதம் 15ஆம் திகதி விரட்டப்பட்ட அப்பாவி மக்களின் நிலத்தில், அந்த நில உரிமையாளர்களின் எந்தவிதமான ஒப்புதலும் இன்றியே அமைக்கப்பட்டது.
இவ்வாறு தையிட்டியில் இதுவரை விடுவிக்கப்படாத நிலப்பகுதிக்குள் இந்த விகாரை உள்ளது என்பதும் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
கலைவானி வீதியை முகப்பாகக்கொண்டுள்ள- நாக விகாரைக்கு உரித்தான நிலத்திற்கு அப்பால்- “முடத்தி கலட்டி” என்னும் 3431 இலக்க உறுதியின் பிரகாரம் 21 மற்றும் 9 பரப்புக் காணியும், 4383 இலக்க14 பரப்புக் காணியும், கந்தவனம் தம்பையா என்னும் பெயரில் 4118 இலக்க உறுதியில் 9 பரப்புக் காணிகளும் இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பு எழுதிய அறுதி உறுதிகள் உள்ளன.
இதேபோன்று ஆறுமுகம் பத்மநாதனிற்கு 2881 இலக்க 1972ஆம் ஆண்டு உறுதியின் பிரகாரம் 8 பரப்பும், அப்புத்துரை சிவகுமாரின் 396ஆம் இலக்க 1989-10-08ஆம் திகதிய உறுதியின் பகுதி நிலமும், அப்புத்துரை சுரேஸ்குமாரின் அதே இலக்க உறுதியின் பகுதி நிலமும் ஏனையோராக சீனியர் சிவசம்பு, பொன்னம்பலம் பூரணம், நாகரத்தினம் கங்காதரன் ஆகியோரது நிலத்துடன் மேலும் மூவரது நிலத்தையும் உள்ளடக்கிய வகையில் 8 ஏக்கர் பகுதி நிலம் இந்த இந்த விகாரையின் பெயரில் அபகரிக்கப்பட்டு 2019இல் கட்டிட பணி ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறு கட்டப்படும் விகாரையானது 1990ற்கு முன்பு காங்கேசன்துறையில் இருந்த திஸ்ஸ விகாரையின் பெயரில் அமைக்கப்படுகின்றது. காங்கேசன்துறையில் காவர் வியூ கோட்டல் என அறியப்பட்ட துறைமுகத்திற்கு அருகிலேயே இது காணப்பட்டது. அப்பிரதேசம் தற்போது கடற்படையினரின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளதோடு அங்கே அந்த விகாரை இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.
அவ்வாறு ஏற்கனவே இருந்த விகாரையின் பெயரில் அந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் புதிய விகாரைக்காக நிலம் அபகரிக்கும் தேவை ஏன் எழுந்தன என்பதெல்லாம் மர்மமான விடயமாகவே உள்ளது. தமிழரின் நிலம் படையினருக்காகவும், அபிவிருத்தி என்னும் பெயரிலும் மட்டும் அபகரிக்கப்படவில்லை. நிலமே வேண்டாம் என துறவறம் பூண்ட புத்த பெருமானின் விகாரையின் பெயரிலும் அபகரிக்கப்படுகின்றது.
உயர் பாதுகாப்பு பகுதி என்னும் பெயரில் யாழ். குடாநாட்டில் இன்னமும் படையினர் வசமுள்ள 3 ஆயிரத்து 214 ஏக்கர் நிலத்திற்குள் இந்த விகாரைக்கு 2019ஆம் ஆண்டு அடிக்கல் இட்டபோதே சர்ச்சைகள் எழுப்பப்பட்டதோடு கௌதம புத்தரின் பெயரில் அபகரிக்கும் 8 ஏக்கர் பிரதேசத்திற்குள் பவாணி வீதி என்னும் பிரதான போக்குவரத்து வீதியும் உள்ளடங்குவதாகவும் விகாரைக்கான கட்டுமான பணிகள் 18 பரப்பை தொட்டு நிற்பதாகவும் 2019ஆம் ஆண்டே கொழும்பில் அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்காவின் கவனத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடாக வரைபடங்களுடன் கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் இந்த விடயம் ரணிலின் வழமையான பாணியில் கையாளப்பட்டு ஏமாற்றப்பட்டது. இந்த விடயம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினரால் பிரஸரதாபிக்கப்பட்டது.
இதேநேரம் இந்த விடயம் தொடர்பில் யாழ். கட்டளைத் தளபதி, மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் விபரங்களை சமர்ப்பித்து அப்பகுதியை விடுவிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜாவும் கோரிக்கை விடுத்தார். இருந்தபோதும் அவை எவையும் வெற்றியளிக்கவில்லை.
விகாரை அமையும் சூழலான 8 ஏக்கர் நிலப்பகுதியினையும் உள்ளடக்கிய வகையிலான நிலத்திற்கு இதுவரை 8 உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது நிலத்தின் உறுதிகளும் பெறப்பட்டு பிரதேச செயலகம் ஊடக ஒப்படைக்கப்பட்டது.
குறிப்பிட்ட அந்த விகாரையினை சூழ தற்போதுள்ள 18 பரப்பு காணிகளின் உரித்தாளர்கள் யாரும் இனம் காணப்படாதபோதும் கட்டிடம் அமைந்துள்ள இடத்தின் உறுதியோ வரைபடம்கூட இதுவரை இனம் காணமுடியாத தன்மையே நிலவுகின்றது.
இதன்காரணமாக 8 ஏக்கர் நிலப்பரப்பிற்குள் உள்ளடங்கும் நிலத்தில் நில உரிமையாளர்கள் சார்பில் யாரும் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என பரிசிலிக்கப்படுகின்றது.
இதேநேரம் வலி. வடக்கு பிரதேச சபையிலே இவ்வாறு அனுமதியற்ற விகாரை, படையினரின் பிடியில் உள்ள தமிழ் மக்களிற்குச் சொந்தமான தனியாரின் காணியில் அத்துமீறி அமைக்கப்படுவதற்கு எதிராக, ஓர் கண்டணத் தீர்மானம் 2022ஆம் ஆண்டு யூலை மாதம் நிறைவேற்றப்பட்டு 2022-08-12 இல் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. அவ்வாறு அனுப்பப்பட்ட தீர்மானக் கடிதம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட செயலாளர் ஒப்பமிட்டு 2022-08-30 அன்று புத்தசாசன அமைச்சின் செயலாளருக்கு அதனை அனுப்பி வைத்து ஒரு மாத காலத்தில் பதிலளிக்குமாறு கோரியதோடு அந்த விடயமும் நின்றுபோனது.
இந்நிலையில் திடீரெனெ விழித்துக்கொண்ட அரசியல்வா(வியா)திகள் உடனடியாக இதற்கு முடிவுகட்ட வேண்டும் அல்லது போராட்டம் வெடிக்கும் என்று சீறி எழுந்த சிங்கம் போன்று சவால் விட்டனர். இது உள்ளுர் மக்களிடம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறெல்லாம் இடம்பெற்ற போதும் 100 அடிவரை அந்த விகாரைக்கான கட்டிடம் உயர்ந்துகொண்டே சென்றது. அதன் பணிகள் முடிக்கப்படும்வரை கண் மூடி, வாய் மூடி மௌனிகளாக இருந்தவர்கள் தற்போது மட்டும் உரக்க குரல்கொடுப்பதன் மர்மங்கள் புரியவில்லை என அப்பகுதி பொது அமைப்பு ஒன்றின் பிரதிநிதி குறிப்பிடுவதோடு அதன் காரணமாகவே நாம் இந்தப் போராட்டத்திலும் பங்குகொள்ளவில்லை என்கின்றார்.
இவ்வாறு 2020இல் கொதிநிலை கண்ட ஒரு விடயம் பின்னர் எவராலும் கண்டுகொள்ளாமல் போன நிலையில் தற்போது ’கள்ளன் போனபின்பு விசுவா பொல்லை எடடா’ என்னும் கதையில் உள்ளதோ எனவும் எண்ணத் தோன்றுகின்றது.
அதாவது இன்று போராட வந்துள்ள அரசியல்வாதிகள், அந்த விகாரையின் பின்னணியை அறியாமல், அது அமையவுள்ள காணி உரிமையாளர்களை தேடிக் கண்டுபிடிக்க எவ்விதமான முயற்சியும் மேற்கொள்ளாமல், உரிய ஆய்வுகளோ அல்லது அரச தரப்பிலிருந்து தரவுகளையோ பெறாமல், சுயலாப தேர்தல் அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்று உள்ளூர் மக்கள் வெளிப்படையாகவே கூறுவது அந்த அரசியல்வாதிகளை தவிர அனைவரின் காதுகளிலும் விழுகிறது.
இதேநேரம் குறித்த விகாரையின் முன்பாக த.தே.ம.முன்னணியினர் கவண ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தை எப்படியும் தடுத்து விடவேண்டும் என்பதில் படையினர் அதிக அக்கறைகொண்டு செயல்படுவதாகவே தெரிகின்றது. இருந்தபோதும் அடுத்து கட்டமாக, பிரமுகர்கள், நில உரிமையாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன, அதற்கு அரசு கூறும் பதில் என்ன? அதன் மூலம் நீதி கிடைக்குமா இல்லை வழமை போல இராணுவ முகாம்களிற்கு வெளியே நின்று புத்த பகவானை தரிசனம் செய்துவிட்டு, கண்கள் மற்றும் வாயைப் பொத்திக் கொண்டு இருக்க வேண்டியது தான் என்றாலும் ஏதோ ஒரு வழியில் நீதி கிடைக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
இதே நேரம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ”இங்கே ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெறுகின்றது இதே மாவட்டத்தின் தையிட்டியில் அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் மக்களைத் திரட்டிப் போராடிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை பொலிசார் தடுத்து வைப்பது போன்று வீதித் தடையை ஏற்படுத்தி உள்ளே போனால் வெளியே வர முடியாமலும் வெளியே வந்தால் உள்ளே போக முடியாமலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அந்து மீறி அமைத்த அந்த விகாரை தொடர்பான போராட்டத்திற்கு நாமும் ஆதரவு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்கிறோம்” என்று அறிவித்த போது அதற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், இ.அங்கஜன் ஆகியோருடன் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் வெளியேறி தையிட்டியில் இடம்பெறும் போராட்டத்தில் பங்குகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
இனி புத்த பகவானே மீண்டும் வந்து, தனக்கு இருக்கும் விகாரைகள் போதுமானது, மேலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில் மேலதிகமாக விகாரைகளை அமைத்து வழிபாட்டு இடங்களை அதிகரிக்க வேண்டாம் என்று கோரினாலும், அதற்கு ஆட்சியாளர்களும், இராணுவமும் செவி மடுக்குமா என்பது அவருக்கே வெளிச்சம்.
இதனிடையே தையிட்டி விகாரையில் வழிபாட்டிற்கோ அல்லது விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ எந்தவித இடையூறும் ஏற்படுத்த கூடாது. என மல்லாகம் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
.