ஊடகத்தில் தங்கியிருக்க அவசியம் இல்லை -பொறுப்பில்லாமல் பதில் அளித்த திலீபன் எம்.பி மன்னார் நிருபர்
Share
(04-05-2023)
அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு அனுமதி மறுத்தமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஊடகத்தில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என பொறுப்பில்லாமல் பதில் அளித்துள்ளார்.
வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றதுடன், குறித்த கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக இணை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபனிடம் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பதில் அளித்த அவர்,
அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மக்களுக்கு எதிரான சட்டவிரோதமான தீர்மானம் எதனையும் எடுத்தீர்களா என ஊடகவியலாளர்கள் கேட்டுள்ளனர்.
அதற்கு, கிளிநொச்சி அபிவிருத்திக்குழு கூட்டத்தில் ஊடகவியலாளர்களை உள்வாங்கி இருக்கின்றனர், எனவே அடுத்த அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நாங்கள் உங்களை உள்வாங்குவோம் எனக் கூறியுள்ளார்.
எம்மை உள்ளே அனுமதிக்காமைக்கு விசேட காரணங்கள் உள்ளனவா என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, அரசாங்க அதிபர் சுற்றுநிருபம் எனச் சொல்கிறார் நாங்கள் என்ன செய்வது என பதில் வழங்கியுள்ளார்.
எனினும், இணைத்தலைவர் பரிந்துரை செய்தால் அனுமதி வழங்கலாம் என சுற்று நிருபத்தில் உள்ளதே என ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், ஊடகங்களில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என பொறுப்பில்லாமல் பதில் அளித்துள்ளார்.
எனினும் மக்கள் உண்மையினை அறிந்துகொள்ள ஊடகங்களை தானே நம்பியிருக்கின்றார்கள் என ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதில் அளித்த அவர், அடுத்த கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்தார்.
நாங்கள் வருகை தந்தபோது மண்டப கதவினை மூடி ஒலிபெருக்கியின் சத்தத்தினை குறைக்கவேண்டிய தேவை ஏன் என கேட்கப்பட்டது.
அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், வழமையாகவே இந்த மண்டபத்தின் கதவு மூடித்தான் இருக்கும் உங்களுக்காக மூடவில்லை எனச் சொல்லியுள்ளார்.
உங்களை மீறி அரச அதிபர் செயற் படுகின்றாரா? என கேட்கப்பட்டதற்கு, திணைக்கள அதிகாரிகளையும், ஊடகங்களையும் அழைக்கும் பொறுப்பு அரச அதிபருக்கே உரியது என இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் பதில் அளித்துள்ளார்.