LOADING

Type to search

இலங்கை அரசியல்

இரண்டே ஆண்டுகளில் ரூ.62,000 கோடி வருவாய் பற்றாக்குறையை ரூ.30,000 கோடியாக குறைத்துள்ளோம் – அமைச்சர் பி.டி.ஆர் பெருமிதம்

Share

இரண்டு ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறையை 62,000 கோடி ரூபாயிலிருந்து 30,000 கோடி ரூபாயாக குறைத்துள்ளோம் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் இரண்டாண்டு நிறைவை முன்னிட்டு மதுரை மத்திய தொகுதியில் 2.62 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். அப்போது பேசிய அவர், ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக இயங்கி வருகிறது.

எந்த ஆட்சிக்கும் அடிப்படை கொள்கை அரசியல் ரீதியான தத்துவம் தான். திராவிட இயக்க கொள்கையின் அடிப்படையில் சமூக நீதி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கே அரசின் முக்கிய அடையாளம். ஒரு அரசுக்கு மனித நேயம், செயல்திறன் ஆகிய இரண்டும் தான் அவசியம். மக்களை அணுகி, அவர்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவது தான் நல்ல அரசுக்கு அடையாளம்.

இவை அனைத்தையும் செய்வதற்கு நிதி ஆதாரமும் முக்கியமானது. திமுக ஆட்சிக்கு வரும் போது 62,000 கோடி ரூபாயாக இருந்த மாநிலத்தின் வருவாய் பாற்றாக்குறை, கடந்த இரண்டே ஆண்டுகளில் 30,000 கோடி ரூபாயாக குறைத்து உள்ளோம். நிதி பற்றாக்குறை என சொல்லி எந்த திட்டமும் நிறுத்தப்படவில்லை. இரண்டு ஆண்டுகளில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்திய அரசு இது. கார்ப்பரேட்களால் உருவாக்கப்பட்டு அவர்களுக்காகவே செயல்படும் அரசு மத்திய அரசு.

ஆனால், திமுக அரசு மக்களுக்கான திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகிறது. எம்.எல்.ஏவாகி தான் அமைச்சர்கள் ஆனோம். எனவே, தொகுதியை கவனிக்க வேண்டியதும் அவசியம். எம்.எல்.ஏ சார்பாக முகாம்கள் நடத்தினாலும், சொந்த நிதியிலும் மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்குகிறோம். அதற்குமேல் கார்ப்பரேட் நிதி உதவியுடனும் சில திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். நல்ல அரசுக்கு அடையாளம், மனித நேயமும், செயல்திறனும், திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கி தேவையுள்ள நபர்களுக்கு கொடுத்து அதன்மூலம் ஒரு சமத்துவத்தை உருவாக்குவது’ என்று தெரிவித்தார்.