ஜனாதிபதியுடன் வடக்கு – கிழக்குப் பகுதியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியது என்ன?
Share
நடராசா லோகதயாளன்
வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் ஜனாதிபதிக்குமிடையே வியாழன்(11) நடைபெற்ற சந்திபில் 5 விடயங்கள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டதாக சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கனடா உதயனிடம் வியாழன் இரவு தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிற்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணி முதல் 7மணிவரையில் இடம்பெற்றது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதை தெரிவித்தார்.
இச்சந்திப்பில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா, சி.சந்திரகாந்தன் மற்றும் திலீபன் ஆகியோரும் எதிரணிகள் சார்பிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழ் மக்கள் கூட்டணியின் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது அரச தரப்பில் அதிகாரிகளான ஜனாதிபதியின் செயலாளர் சாகல ரட்ணாயக்கா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சட்ட மா அதிபர், தொல்லியல்த் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இருதரப்பிற்கும் இடையே நடைபெற்ற உரையாடலில் தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு, படையினர் வசம் உள்ள நிலம் அவற்றை சுவீகரிப்பு தொடர்பான சர்ச்சை, பயங்கரவாத தடுப்பு திருத்தச் சட்டம் , அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் நல்லிணக்க செயலணி போன்றவை பிரஸ்தாபிக்கப்பட்டது.
”நல்லிணக்கம் என்பது இங்கே உள்ள நில அபகரிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, போன்றவற்றிற்கு தீர்வில்லாந நிலையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்னும் பயங்கரமான சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கும் காலத்தில் நல்லிணக்கமே ஏற்படாது. அதனால் நல்லிணக்க செயலணி என்பது தொடர்பிலே தற்போது பிரஸ்தாபிக்கவே முடியாது அதற்கான காலம் வரும்போதும் சர்வதேச பிரசன்னம் இன்றி நல்லிணக்க செயலணி சாத்தியமே அற்றது” என அரச சார்பற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடியோடு மறுத்து விட்டனர்.
இதேபோன்று பயங்கரவாத தடுப்பு திருத்தச் சட்டம் தேவை அற்றது அதை முற்றாக ரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் தேவை ஏற்பட்டால் அவசரகால சட்டத்தின் கீழ் அந்த நேரங்களில் பரிசீலிக்கலாம் என இரு விடயங்களிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று சுமந்திரன் தெரிவித்தார்.
காணி விடயமே நீண்ட நேரம் விவாதிக்கப்பட்ட சமயம் இன்றில் இருந்து எந்த நிலமும் சுவீகரிப்பு இடம்பெறாது என ஜனாதிபதியால் உத்தரவாதமளிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் உதயனிடம் கூறினார்
அரசியல் கைதிகள் விடயத்தில் 14 கைதிகளின் வழக்குகள் நிலுவையிலும், 14 கைதிகள் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையிலும் உள்ளனர். இந்த 14 பேரில் இருவர் மீது வழக்குத் தொடுநர் தரப்பின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது- அதாவது ஒருவர் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் கொலை வழக்கிலும் இரண்டாவது நபர் சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சி வழக்கிலும் உள்ளனர் என்று அரச தரப்பில் கூறப்பட்டது. எனினும் அவர்கள் இருவரின் விடயம் தீர்க்கப்படும் வரையில் காத்திராது எஞ்சிய 12 பேரையும் உடன் விடுவிக்க எதிர தரப்பு தமிழ் உறுப்பினர்கள் கோரிய சமயம் அதற்கான முயற்சிகள் இடம்பெறும் என அரச தரப்பில் வாக்குறுதி வழங்கப்பட்டது.
இச்சந்திப்பில் கலந்துகொண்ட தொல்லியல்த் திணைக்களப் பணிப்பாளர் பல விடயங்களில் தமது தரப்பில் தவறு நேர்ந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டதோடு அவற்றை விரைவில் திருத்துவோம் எனப் பதிலளித்துள்ளார்.
இவர்களிடையேயான பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமையும் (12) இடம்பெறுகிறது.
இதே நேரம் இன்றைய தினமும் மாலை இச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதேநேரம் நேற்றைய சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன் செ.கஜேந்திரன். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்றார்.
நடைபெற்ற கூட்டத்தில் வடக்கு கிழக்கில் தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 14 இடங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் சி.சிறிதரன் சமர்ப்பித்த ஆவணத்தின் பிரதி ஒன்றையும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் கையளித்தார்.