விநாயகர் விமர்சனம் | ஐயோ பாவம் அரகலய……. பெற்றதும், கற்றதும், இழந்ததும்
Share
(கனடா உதயனிற்கான பிரத்தியேக கட்டுரைத் தொடர்- பகுதி 14)
கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து- குறள் எண் 551- அரசியல்
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையில்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்”
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியை சற்றே திரும்பிப் பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
மே 9 இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் வெறுக்கும் ஒரு கரிநாள்.
கொடுங்கோல் அரசுக்கு எதிராக இளைஞர்களால் நன்கு கட்டமைக்கப்ட்ட வகையில் அமைதி வழியில் முன்னெடுக்கபட்ட அரசகலய போராட்டம்- மக்கள் எதிர்நோக்கிய பொருள் தட்டுபாடு நாள்கணக்கில் நீண்ட கியு வரிசைகள் போன்ற நாளாந்த வாழ்வாதராப் பிரச்சினைகள் காரணமாக அவர்களை வீதிக்குக் கொண்டுவந்து அரகலயவுக்கு ஆதரவு வழங்கத் தூண்டியது.
“கோட்டா கோ கம” என்றொரு இடத்தை உருவாக்கி நெடுநாள் போராட்டத்திற்கு வேண்டிய உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் பிரதான போராட்ட வடிவங்களை அறிமுகப்படுத்தி இலங்கையில் வாழும் எல்லா மக்கள் பிரிவினரையும் உள்ளடக்கிய அநியாய அரசுக்கு எதிரான இலங்கைப் போராட்டமாக அதனை சித்தரிக்க முனைந்து அதில் ஓரளவு வெற்றியையும் கண்டனர்.
அவ்வப்போது இலங்கை பாதுகாப்புத் தரப்பினரோடு முறுகல் நிலை ஏற்பட்ட போதிலும் அவை ஒரு கட்டத்திற்கு தீவிரமாகச் செல்லாமைக்கு முக்கிய காரணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆதரவு ஒரு கட்டம் வரையில் அவர்களுக்கு இருந்தமையும் இலங்கையில் உள்ள மேற்குலக நாடுகளின் தூதரகங்களும் மேற்குலக ஊடகங்களும் இருபத்து நான்கு மணிநேரமும் கண்கொத்திப் பாம்பாக நிலைமையை அவதானித்துக் கொண்டிருந்தமையுமாகும்.
ஆனால், இதே மாதிரி ஒரு போராட்டம் வடக்கிலோ கிழக்கிலோ முன்னெடுக்கப் பட்டிருக்குமாயின் இரத்தக்களரியில் அது முடிந்திருக்கும் அல்லது அப்படி ஒன்று நடக்க முன்பே விரட்டியிருப்பார்கள்.
எல்லாம் நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது. அரச ஆதரவு தொண்டரடிப்பொடிகளை வெளிப்பிரசேதங்களிலிருந்து வரவழைத்து அலரி மாளிகையில் நடந்த மந்திராலோசனையின் பின்னே அங்கிருந்து வெளியேறிய குண்டர் கூட்டம் காலி வீதிவழியே அமைக்கப்படிருந்த அரகலய கூடாரங்களை அடித்துச் சிதைத்து பெண்கள் என்றும் பாராமல் அதில் இருந்தவர்களை அடித்து உதைத்து வெறியாட்டம் ஆடிக்கொண்டு காலிமுகத் திடலை நோக்கிச் சென்றது.
அந்த வீதிவழியே CCTV கமராக்கள் வைக்கப்பட்டிருந்ததால் அரகலயகாரர்கள் பதிலடி கொடுக்கவில்லை. வெற்றிக் களிப்படைந்த குண்டர் கூட்டம் காலி வீதியைவிட்டு உள்வீதிகளுடாக திரும்பிச் செல்ல முயன்றபோது தான் அவர்களுக்கு சிறந்த விருந்து காத்திருந்தது. தமிழ் சினிமாப்படங்களில் விரியும் காட்சிகளைப் போல குண்டர்களை பேருந்துகளிலிருந்து இறக்கி அடையாளம் கண்டு வெளு வெளு என்று வெளுத்து பேரை வாவியில் போட்டு நீண்ட நேரம் ஜலக்ரீடை செய்ய வைத்து தண்ணீரில் தவம் செய்து நடுங்கியவர்களுக்கு பிளேன் டீ கொடுத்த காட்சிகளையெல்லாம் காட்சி ஊடககங்கள் ஊதித் தள்ளின.
காலி நோக்கிச் சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு அங்கும் பூசை வழிபாடுகள் இடம் பெற்றன. அப்படி ஒரு வாங்கு வாங்குவோம் என்று வந்தவர்கள் ஒரு போதும் நினைக்க வாய்ப்பில்லை. உண்மையில் மிகவும் பொறுமைகாத்த அரகலயகாரர்கள் இவற்றுக்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும் சண்டித்தனம் காட்டிய கூட்டத்திற்கு சாதாரண பொதுமக்கள் காட்டிய எதிர் வினையே அதுவென்றும் கூறினர். அரகலயகாரர்களுக்கு அடித்த சம்பவமே ஆளும் கட்சியினருக்கு எதிரான வன்முறைகள் வலுப்பெறக் காரணமாக அமைந்தது. அடுத்து வந்த நாட்கள் ஆளும் கட்சி அரசியல் வாதிகள் ஓடி ஓளித்த காட்சிகளாக மாறின. வன்முறைக்கு ஆயுக் கம்மிதான் ஆனால் அந்த குண்டர் கூட்டம் அந்த மொழியைத்தவிர வேறு எந்த மொழியையும் புரிந்து கொண்டிருக்காது என்பது யதார்த்தம்.
மக்கள் ஒரேநாளில் பெரும் எண்ணிக்கையில் கொழும்புக்கு வந்து ஜனாதிபதி மாளிகையை நோக்கித்திரளாகச் செல்ல கோட்டாபய பின்வாசற் கதவால் பாதுகாப்பாக அழைத்துச் சென்று கப்பலில் ஏறியதாக சொல்லப்பட்டது. கோட்டாபய விரும்பியிருந்தால் மக்களைச் சுடுமாறு உத்தரவிட்டிருக்கலாம். தமிழர்களை கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த அவருக்கு தன் மக்கள் தன்னை துரத்தியபோது சுடும் உத்தரவு பிறப்பிக்காமல் விட்டது தனது இனத்தின் மீது கொண்ட பாசமா அல்லது பின் விளைவுகளைப் பற்றி சிந்தித்தபடியினாலா என்று தெரியவில்லை.
ஆனால், அப்படிச் செய்ததன் மூலம் மிகப்பெரிய இரத்தக் களரி தவிர்க்கப்பட்டது என்று கூறலாம். அதனோடு இணைந்ததாக அரசியல் வாதிகளின் இல்லங்கள் இலக்குவைக்கப்பட்டு எரிக்கப்பட்டன. சந்தர்ப்ப வாதிகள் இந்த வன்முறைகளுக்கு காரணம் என்றும் தமக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் அரகலயகாரர்கள் மறுத்தார்கள். பாதுகாப்புத் தரப்பு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவே வன்முறைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. அதற்கு முன்னரே ராஜபக்ஷ குடும்பத்தின் அங்கத்தவர்களும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளும் பாதகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
சில நாள் இழுபறியின் பின்னர் கோட்டாபய தனது பதிவிவிலகல் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார். அரகலய போராட்டம் உச்ச கட்டத்தில் இருக்கும் போதே புதிய பிரதமர் ஒருவரை நியமித்து நிலைமைகளை கட்டுப்படத்த கோட்டாபய முயற்சித்திருந்தார். ஏதிர்க்கட்சித்தலைவருக்கு அதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மூழ்கும் கப்பலை தோளில் சுமக்க தான் தயாராக இல்லை என்று மறுக்கவே இலங்கையின் ஜனநாயக வரலாற்றில் முதன் முறையாக மக்களால் தேர்தலில் முற்றாக நிராகரிக்கப்பட்டு கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் மூலம் ஆசனத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்திற்க வந்த விக்கிரமசிங்க பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். இப்போது கோட்டாபய விலகிச் செல்லவே அடித்தது மேலும் ஒரு பிரைஸ். கோட்டாபயவின் எஞ்சியிருக்கும் பதவிக்காலத்கை நிறைவு செய்யும் வகையில் அவர் ஜனாதிபதியாக நியமிக்கபட்டார். நியமிக்கப்பட்ட மறுகணமே பாதுகாப்புத் தலைமையகத்திற்குப் பறந்த அவர் அரகலய போராட்டக்காரர்களை அடித்து விரட்டி அகற்றுமாறு உத்தரவிட்டார்.
நெடுங்காலம் உத்தரவுக்காகக் காத்திருந்தவர்கள் வள்ளல்களாக மாற வாரி வழங்கி கோட்டா கொ கம போராட்டக்களத்தை முற்றாக அகற்றி விட்டனர். அதன் பின்னர் அரகலயவில் ஈடுபட்டவர்களை தனித்தனியாகக் கவனிக்கும் வேட்டை தொடங்கியது. இன்றும் பலர் வேட்டையாடப்பட்டு வருவதையும் காண முடிகிறது. அரகலயகாரர்களின் நோக்கம் கோட்டாபயவை அகற்றுவது தான் ஆனால் அதன் பின்னர் என்ன நடக்கும்? யார் ஆட்சிக்கு வருவார்கள்? அவ்வாறு ஆட்சிக்கு வரும் நபர் முன்னைய ஆட்சியாளரைவிட நம்பத்தகுந்தவரா? போன்ற புரிதல்களோ திட்டங்களோ அரகலயகாரர்களுக்க இருந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் விக்கிரமசிங்க பதவிக்கு வந்திருக்க முடியாது. ஒரு மூன்றாவது தரப்பு அரசலய இளைஞர்களை தமது நோக்கங்களுக்காகப் பயன்படுத்திவிட்டு இடைநடுவல் கைவிட்டு விட்டார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
ஒருபுறம் போராட்டக்களத்தை ஒரு முன்னுதாரணமாகக் கருதுமளவுக்கு வடிவமைத்து நடத்தியவர்கள் திடீரென உடைந்த போகக் காரணமென்ன போன்ற வினாக்கள் தவிர்க்க முடியாத வகையில் எழுகின்றன. இந்த போராட்டத்தின் மூலம் நன்மை பெற்ற ஒரே நபராக விக்கிரமசிங்க விளங்குகிறார். சில மாதங்களுக்க முன்பு அவர் நினைத்தும் பார்த்திராத வகையில் அவர் தேர்தல்கள் மூலம் அடையலாம் எதிர்பார்த்த ஆனால் மக்கள் தொடர்ந்து வேண்டாம் என்று நிராகரித்த அந்தப்பதவி அரகலய போராட்டத்தின் மூலமே அவருக்குக் கிட்டியது.
ஆனால் அதன் பின்னரும் அரகலய தொடர்ந்தால் தனது ஆட்சிக்கு ஆப்பு வரும் என்று அவருக்கு நன்கு தெரியும். ஏனென்றால் போராட்டக்கார்களின் தெரிவு நிச்சயமாக அவர் கிடையாது. மறுபுறம் கோட்டாபய சற்று அசைந்தாலும் மனிதஉரிமை மனிதஉரிமை என்று கதறிய மேற்கு நாடுகளும் அவர்களது ஊடகங்களும் விக்கிரமசிங்க பதவிக்கு வந்த உடன் நடத்திய வன்முறைகள் குறித்த மூச்சுக்காட்டவில்லை. இது அவர்கள் கோட்டாவை பதவியிலிருந்து துரத்தி தமக்குச் சார்பான ஒருவரைப் பதவியிலிருத்தும் திட்டத்தை செயற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. 69 இலட்சம் வாக்காளர்களின் ஆதரவு பெற்ற ஜனாதிபதியை பதவியிலிருந்து துரத்துமளவுக்கு அரகலய போராட்டம் மக்களாதாரவு பெற்ற ஒன்றாக இருந்திருக்கிறது என்பதில் உண்மை இருந்தாலும். அந்த மக்கள் ஆதரவு ஏன் வந்தது என்று சற்று சிந்திப்போமேயானால் இலங்கை மக்கள் ஜனநாயக ரீதியில் இன்னமும் பாலர் வகுப்பிலேயே இருக்கிறார்கள் என்பது புரியும்.
உணவுத் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, நீண்ட வரிசைகளில் காத்திருப்புகள் போன்ற அன்றாட வாழ்வாதார பிரச்சினைகள் மக்கள் ஆதரவை திரட்ட உதவின. இந்த பற்றாக்குறைகள் தீர்க்கப்பட்டு நிலைமை வழமைக்குத் திரும்பினால் விலைகள் அதிகமாக இருந்த போதிலும் மக்கள் வீதிக்கு இறங்கிப் போராட வரமாட்டார்கள் என்பதை கோட்டா கோகம அகற்றப்பட்ட பின்னர் விடுக்கப்பட்ட போராட்ட அழைப்புகளுக்கு மக்கள் செவிசாய்த்து அதிகளவில் திரளாமையிலிருந்து தெரிந்த கொள்ளலாம்.
இது நீண்ட காலம் அரசியலில் இருந்த விக்கிரமசிங்கவுக்கு நன்கு தெரியும். எனவே எதிர்காலத்தில் இப்படி ஒன்று நடைபெறாமல் தடுப்பதற்குரிய சகல நடவடிக்கைகளையும் எடுப்பார். பெரியளவில் ஒரு மக்கள் பேரியக்கமாக இலங்கை அரசியலில் காத்திரமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று பலரும் கருதிய அரகலய போராட்டம் நீர்த்துப்போய் பழைய பேய்கள் மீண்டும் வலுப்பெற்று ஆட்டம் ஆடுவம் நிலையை இன்று நாம் காண்பதற்கு போராட்டத்திற்கு நீண்டகால இலக்கு இல்லாமையும் தலைமைத்துவக் குறைபாடுகளும் மூன்றாம் தரப்பு நிகழ்ச்சி நிரல்களுக்குள் அது சிக்கிவிட்டமையையும் காரணமாக இருந்ததாகக் கூறலாம்.
மூளையை அடிப்டையாகக் கொண்டல்லாமல் வயிற்றை அடிப்படையாகக் கொண்டு அரசியல் ஆதரவு வழங்கும் மக்கள் கூட்டமும் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதலாம். ஆக, இந்த அரகலய போராட்டத்தினால் ஊழல்பரியும் அரசியல்வாதிகள் ஏதாவது பாடம் கற்றுக் கொண்டார்களா என்று பார்த்தால் தமது வீடுகள் எரிக்கப்பட்டதனால் இனிமேல் எந்த அரகலய ஏற்படுவதை என்னவிலை கொடுத்தாவது தடுக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்கள். பேரை வாவியில் தள்ளிவிடப்பட்ட ஒருவர் தான் வழமையாகவே பேரை வாவியில் குளிப்பதாகவும் அதனால் அன்றும் அப்படிக்குளியல் நடத்தியதாகவம் கூறுகிறார். உண்மையாக இருக்கலாம். அடிக்கின்ற முடைநாற்றம் அப்படி இருக்கிறது.
ஐயோ பாவம் அரகலய.