மன்னார் பிரதேச செயலாளர் பிரிவு அரச உத்தியோகத்தர்களுக்கு சூழல் பாதுகாப்பு குறித்த கருத்தமர்வு
Share
(மன்னார் நிருபர்)
(22-05-2023)
மன்னார் வாழ்வுதய சூழல் பாதுகாப்பு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான சூழல் பாதுகாப்புக் கருத்தமர்வு இன்று திங்கட்கிழமை (22) காலை 10.00 மணி தொடக்கம் 12.30 மணி வரை மன்னார் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மன்னார் பிரதேச செயலாளர் . எம். பிரதீப் தலைமையில் இடம்பெற்ற குறித்த கருத்தமர்வில் மன்னார் நகர பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட அதிகாரி திருமதி. ஜே.எம். அன்ரறிடா, ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள், கழிவு முகாமைத்துவம், அரச பணியாளர்களின் கடமைகள்’ தொடர்பான கருத்துரை வழங்கினார்.
வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரி எம். ஜீ. திசர ‘மன்னார் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணி, அரச சட்டங்கள் மற்றும் சவால்கள்’ பற்றிய கருத்துக்களை வழங்கினார்.
இதன் போது வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை செ. அன்ரன் அடிகளார் உரையாற்றுகையில்,,
‘உலகம் இன்று காலநிலை மாற்றத்தின் பாரிய விளைவுகளை நாளாந்தம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முகம் கொடுக்கும் விதமாக கூறப்பட்ட கருத்துக்களை அனைத்து அரச சூழியர்களுக்கும் தாம் பணியாற்றும் மக்களுக்கு தெரியப்படுத்தி இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்’ என்றார்.
சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பாக உத்தியோகத்தர்கள் அறிந்து கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பமாக அமைந்தது.
பொதுக் கலந்துரையாடலில் அரச உத்தியோகத்தர்கள் தமது வினாக்களுடாக தெளிவுபடுத்தல் களை மேற்கொண்டனர்.
இறுதியில் வாழ்வுதய சூழல் பாதுகாப்புத் திட்டப் பிரிவின் இணைப்பாளர் திரு.ச.யேசுதாசன் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார்.