காசு மேல் காசு கேட்டு வழக்கு மேல் வழக்கு போடும் மோகன் ஷான் அணி அடியோடு தோல்வி
Share
மலேசிய இந்து சங்கத்தில்
சலசலப்பும் சச்சரவும் இத்துடன் முற்றுபெறட்டும்
சிவநெறிச் செல்வன் தங்க கணேசன் அபார வெற்றி
-நக்கீரன்
ஜோகூர் பாரு, மே 28:
மலேசிய இந்து சங்கத் தேசியத் தலைவராக ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன், தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்; அதிரடி படைத்துள்ளார்.
இந்து சங்கத்தின் 46-ஆவது தேசிய ஆண்டுக் கூட்டம் நாட்டின் தென்புலத்தில், ஜோகூர் பாரு, தாமான் புக்கிட் இண்டா-2-இல் இன்று நடைபெற்றது. இதில், தங்க கணேசனை ஆதரித்து களம் கண்ட அழகேந்திரன் சிவசாமி(1,195 வாக்குகள்), எஸ்.ஜெயபாலன்(1,185வாக்குகள்), அ.கிருஷ்ணன்(1,178), இந்து சங்க பொதுச் செயலர் மாணிக்கவாசகம்(1,192), நாகேசுவரராவ்(1,165), காயத்ரி (1,161), ஆர்.இராஜேந்திரன் வி.ராஜு(1,147), சிவம் பழனிசாமி (1,135), விஜய பாஸ்கர்(1,141) ஆகிய ஒன்பது பேரும் அபார வெற்றி பெற்று தங்க கணேசன் கரங்களை வலுப்படுத்தி உள்ளனர்.
இதன்மூலம், கடந்த ஓராண்டு காலமாக இந்து சங்க தலைமையகத்திலும் ஒருசில மாநிலப் பேரவைகளின் நிருவாக மட்டத்திலும் நிலவிவந்த தலைமைத்துவ சிக்கலும் ஊசலாட்டமும் முற்றுபெறும் என்று மலேசிய இந்து சமுதாயமும் சமுதாய ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 45-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் டத்தோ மோகன் ஷான் சந்தித்த தோல்வியைவிட மோசமான தோல்வியை இந்த முறை இந்து சங்க உறுப்பினர்கள் அளித்துள்ளனர்.
தான் தலைவர் பதவியை இழந்ததை இதுவரை சீரணித்துக் கொள்ள முடியாத மோகன் ஷாண், காலம் உள்ளவரை தான் மட்டுமே இந்து சங்கத் தலைவராக நீடிக்க வேண்டும் என்று கருதுகிறார் போலும்.
கடந்த ஓராண்டு காலமாகவே வழக்கு மேல் வழக்கைப் போட்டு, தங்க கணேசன் ஆக்ககரமாக செயல்பட முடியாமலும் சமய-சமூகப் பணியை ஆற்ற விடாமலும் அவரை முடக்கும் விதமாக வழக்குகளைத் தொடர்ந்து வருகிறார்.
தேர்தலில் பகிரங்கமாக தோற்ற பின்னும் நானே இன்னமும் தலைவர் என்று ஒரு வழக்கு, இந்து சங்கம் தனக்கு ஊக்கத் தொகையையும் போக்குவரவு செலவுத்தொகையையும் கொடுக்க வேண்டும் என்று இன்னொரு வழக்கு; மேலும் கடன் தொகையைத் திருப்பித் தரவேண்டும்; அச்சக செலவுத் தொகையைக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் வழக்கு மன்னனாக உருவெடுத்து, இந்து சங்கத்தை நீதிமன்ற வாசலிலேயே நிற்கும்படி செய்ததுடன், இந்து சங்க நிதியை மலேசியவாழ் இந்து மக்களுக்கான சமய-சமுதாயப் பணிகளுக்காக செலவழிப்பதற்குப் பதிலாக, வழக்கு செலவிலேயே அழிக்கும்படியான நெருக்கடியை தெரிந்தோ தெரியாமலோ மோகன் செய்து வருகிறார்.
ஒரு பொது அமைப்பில் 13 ஆண்டு காலம் தலைமைப் பதவியை அலங்கரித்து, ஒரு கட்டத்தில் தோல்வி அடைந்துவிட்டால், மற்றவர்களாக இருந்தால் அந்தமட்டில் கண்ணியமாக ஒதுங்கிக் கொள்வர்; அல்லது மக்களும் சமயமும்தான் முக்கியம் என்று கருதி ஒருங்கிணைந்து செயல்பட முன்வருவர். இந்த இரண்டும் இல்லாமல், புதிய நிருவாகம் நிம்மதியாக செயல்பட முடியாமல் அதற்கு இடையூறு செவதுடன், காசு மேல் காசு கேட்டு, வழக்கு மேல் வழக்கு போடும் மோகன் ஷான், சமுதாயம் தன்னைப் பற்றி என்ன நினைக்கும்? பொதுவான மனிதர்களும் நடுநிலையான கல்வியாளர்கள், சமூக ஆரவலர்கள் உள்ளிட்டவர்கள் தன்னைப் எப்படி எடைபோடுவார்கள் என்ற எண்ணெமெல்லாம் மோகன் ஷானுக்கு அறவே இல்லைபோலும்!
*இதைத்தான் ஆசை வெட்கம் அறியாது* என்பார்களோ?
எது எப்படியோ, இன்றைய ஆண்டுக் கூட்டத்தில் மத்திய செயலவைக்கு புதிதாக தேர்வுபெற்ற ஒன்பது பேராளர்களை உள்ளடக்கி, மண்டப அரங்கத்திலேயே 2023-24 தவணைக்கான முதல் மத்தியப் பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், புதிய நிருவாகக் குழுவினர் தேர்ந்தெடுக்கப் படும் அதேவேளை, சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன், 27 பேர் கொண்ட மத்திய பேரவையில் ஒருமனதான ஆதரவைப் பெற்று, மலேசிய இந்து சங்க தேசியத் தலைவராக தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொள்வார் என்றும் தெரிகிறது.
தங்க கணேசன் அணியைச் சேர்ந்த அனைவரும் ஆயிரத்து நூற்றுக்கு மேற்பட்டும் ஆயிரத்து இருநூற்றுக்கு நெருக்கமாகவும் வாக்குகளைப் பெற்று அபார வெற்றிபெற்றுள்ள வேளையில், மோகன் ஷான் அணியைச் சேர்ந்த அனைவரும் வெறும் அறுநூற்று சொச்சம் என்ற அளவில் மட்டும் பெற்று தோல்வியடைந்தனர்.
மோகன் ஷான் அணி சார்ந்து போட்டியிட்ட பாலகிருஷ்ணன்(633 வாக்குகள்), வி.என் ராதா(661), டத்தோ வீரன்(653), டத்தோ மோகன் ஷான் (671), பத்மா தேவி(661), கே.எல். ரவி(624), ஏ.ரவிச்சந்திரன்(645), ஏ. சுகுமாறன்(636), பொன்.விக்ரமன்(616) ஆகிய ஓன்பது பேரும் பெரும்பான்மை வாக்கு வேறுபாட்டில் தோல்வி அடைந்தனர்.
இந்தக் கூட்டத்தை மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ மு.சரவணன் தொடக்கிவைத்து உரையாற்றினார்.