LOADING

Type to search

மலேசிய அரசியல்

வெறுங்கோல் செங்கோல்மூலம் பச்சை மோடித்தனம்

Share

தமிழர்-தமிழ் மொழி-தமிழ் நிலத்திற்கு தொடர் வஞ்சகம்:

மோடி அமைச்சரவையில் 9 ஆண்டுகளாக தமிழ் நாட்டு தமிழர் இல்லை

-நக்கீரன்

கோலாலம்பூர், மே 29:

கனியன் பூங்குன்றனார், திருவள்ளுவர், ஔவை உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கிய ஆளுமைகளை வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் திருடப் பார்த்து ஓய்ந்துவிட்ட நிலையில், தமிழர்தம் சித்த மருத்துவத்துடன் இணைந்த மூச்சுப் பயிற்சியை மட்டும் ‘யோகா’ என்ற பெயரில் மொத்தமாக அபகரித்துவிட்டார் மோடி!

இப்பொழுது, அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொது தேர்தலை இலக்கு வைத்து, தமிழ் நாட்டில் ஓரிரு இடங்களிலாவது வென்றுவிட வேண்டும் என்ற அரசியல் தகிடுதத்தத்தை உள்ளீடாக வைத்து, தமிழரை வசப்படுத்தும் நோக்கில், சீந்துவார் இன்றி எங்கோக் கிடந்த வெறுங்கோலான செங்கோலை எடுத்துவந்து, கழுவி எடுத்து, நகாசு வேலை பார்த்து, அதை பளபளப்பாக்கி அதை நெடுஞ்சான் கிடையாக வணங்கி இன்னொரு அரசியல் நகாசுவேலையைப் புரிந்திருக்கிறார் மோடி.

காந்தியைக் கொன்ற ராஷ்டிரீய சுயசேவை சங்கத்திற்கு(ஆர்.எஸ்.எஸ்.) அடித்தளமிட்ட சாவர்க்கரின் பிறந்த நாளில்தான், செங்கோல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் நூற்றாண்டு விழா, அடுத்த ஆண்டில் வருவதால், எப்படியாவது அதிக இடங்களை வென்று இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கத்தை முழுதாக நிலைநிறுத்த வேண்டும்; தமிழ் நாட்டிலும் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்ற பார்ப்பனியக் குறிக்கோளை நிலைநாட்டவே, பார்ப்பனியத்தின் அடிமையும் ஆர்.எஸ். எஸ். இயக்கத்தில் புடம்பெற்றவருமான மோடி தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துப் பார்க்கிறார்.

2014-இல் முதன் முதலில் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்த பொழுது, நாடாளுமன்ற படிக்கட்டுகளில் தலைசாய்த்து வணங்கினார். ஆனால், இவரைப் போன்று நாடாளுமன்றத்தை அவமதித்த பிரதமர் ஒருவருமில்லை.

நாடாளுமன்றத்தில் விவாதமின்றியே சட்டத்தை நிறைவேற்றும் அரசியல் படுகொலையை கூச்சமின்றி நிறைவேற்றிவரும் மோடி, இப்பொழுது செங்கோலை கட்டி அழுவதுடன் சோழர் பெருமை குறித்தும் பேசி வருகிறார்.

அரச நிருவாகத்திலும் ஆன்மிக எல்லையிலும் பார்ப்பனர்களை மட்டுப்படுத்த விரும்பிய இளஞ்சிங்கமான ஆதித்த கரிகால சோழனை நான்கு பார்ப்பனர்கள் வஞ்சகமாகக் கொன்ற சதியை வகையாக மறைத்துக் கொண்டு, சோழர் பெருமையை கொண்டாடுவதாகக் காட்டிக் கொள்கின்றனர்.

பொதுவாக பார்ப்பனர்கள், நமக்கு எதிராக நம்மையே ஏவிவிட்டு காரியம் சாதிப்பார்கள்; எல்லை மீறினால் அவர்களே களத்தில் குதிப்பார்கள். அதுவரை, அடிமைகளை விட்டு, தங்களுக்கான காரியத்தை கச்சிதமாக நிறைவேற்றி வருவார்கள். அத்தகைய அடிமை ஊழியத்தைதான் மோடி, கணக்காக ஆற்றி வருகிறார்.

மன்னராட்சி முதல் இன்றைய மக்களாட்சி காலம் வரை, அரசியல் அடிமைகளுக்கு வரலாற்றில் என்றுமே இடம் இருந்ததில்லை; இருக்கப் போவதுமில்லை.

அலாவுதீன் கில்ஜிக்கு வாய்த்த மாலிக் காபூர், சோனியா காந்தி அடையாளங்-கண்ட மன் மோகன் சிங், ஜெயலலிதா-சசிகலா காலில் விழுந்துகிடந்த ஓ.பன்னீர் செல்வம்-இடைப்பாடி பழனிசாமி ஆகியோர் மாசற்ற நல்ல அடிமையர்!

இதே வரிசையில் பார்ப்பனியத்திற்கு தன்னை முழு அடிமையாக்கிக் கொண்ட மோடி, கொஞ்சமும் மனம் கூசாமல் தமிழர்களை சிறுமைப்படுத்தி வருகிறார். மோடியின் இன்றைய அலங்கார உலா, காலம் உள்ளளவும் கார் உள்ளளவும் நிரந்தரம் என்றெண்ணி அடித்து ஆடுகிறார்.

மோடி அதிகார பவனிவரும் புது டில்லி கொத்தளப் பகுதியில், மாலிக் காபூர் என்ன ஆனார் என்ற வரலாற்றையும் பொருளாதார வல்லுநர் முனைவர் மன்மோகன் சிங் இப்பொழுது எப்படி இருக்கிறார் என்பதையும் சற்றே எண்ணிப் பார்க்க வேண்டும்.

நாமே அடிமை; நமக்கும்கூட தமிழ் நாட்டில் இரு அடிமைகள் இருக்கின்றனரே எண்றெண்ணி அகமகிழ்ந்த மோடி, அந்த அடிமைகளின் இன்றைய நிலையை எண்ணிப்பார்த்தாவது தன்னை சற்று நிதானப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழர்களை அழித்து ஒழிக்கும் இலங்கை அமைச்சரவையில்கூட தமிழருக்கு இடம் உள்ளது; 728.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் 55 இலட்ச மக்களைக் கொண்ட சிங்கப்பூரிலும் அசலும் கலப்புமாக மூன்று தமிழர்கள் அமைச்சர்களாக உள்ளனர்.

இலங்கைக்கு அடுத்து தமிழர்கள் அதிக அளவில் புலம்பெயர்ந்து வாழும் மலேசியத் திருநாட்டில் இந்த முறை ஒரு தமிழர் அமைச்சராக இல்லாவிடினும் இந்திய வழித்தோன்றலைச் சேர்ந்தவர் அமைச்சராக உள்ளார். ஆனால், ஒரு இலட்சத்து 30ஆயிரத்து 60 சதுர கிலோமீட்டர் பரப்பில் ஏறக்குறைய 8லட்சத் தமிழர்கள் வாழும் சூழலில் தமிழர்தம் தலைநிலமாம் தமிழ்நாட்டையும் மதிக்கவில்லை; அந்த நிலத்தேவாழும் தமிழர்களையும் புதுடில்லி பார்ப்பன அரசு மதிப்பதில்லை; ஆனாலும், இதில் மோடியை குறைசொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை; அவர் வெறும் அம்புதான்; பார்ப்பனர்தான் வில்.

எல். முருகன் என ஒருவர் இருக்கிறாரே என்று யாரேனும் கருதலாம்; அது ஒரு தொத்தை; சொத்தை; காரணம் அந்த ஆரிய அடிமை வகிப்பது கேபினட் தகுதி கொண்டதல்ல;

ஒரு சில மாதங்களுக்கு முன் மலேசிய இந்து சங்க மேநாள் தலைவர் டத்தோ அ. வைத்திலிங்கம், “இப்பொழுதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றி அடிக்கடி எழுதுகிறீர்களே” என்றார். அவர்தான் தொலைபேசிவழி அழைத்தார்.

ஆமாம், கைத்தடியுடன் ஊர்வலம் நடத்தும் அவர்கள், மத ஆதிக்கத்தை குறியாகக் கொண்டவர்கள் என்று நான் சொல்லி முடிப்பதற்குள்,

“அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க; போலீஸ்காரர்கள் கையில் தடியை வைத்திருப்பதில்லையா? அதைப்போன்றதுதான் இதுவும்; மற்றபடி அவர்கள் நிறைய சமூகப் பணி ஆற்றுகின்றனர்” என்று தற்காத்தார்.

காவலரின் கையில் இருக்கும் தடி என்ன முத்தமா கொடுக்கும்? தேவையான பொழுது ஆளை அடிப்பதற்காகத்தான் அவர்களில் கையில் அது இருக்கிறது. இந்த உண்மையைக் கூட மறைத்து அவர் என்னிடம் உரையாடினார்.

உடல் நலம் பாதித்த நிலையில் இருந்த அவரிடம் அதிகமாக விவாதிக்கவோ கருத்தாடவோ விரும்பாத நான், பார்ப்பனர்களின் ஆதிக்கம் மிக்க ஆட்சி மோடி தலைமையில் அமைந்துள்ள இந்த ஒன்பது ஆண்டுகளில், ஒரேயொரு தமிழருக்குக்கூட அமைச்சர் பதவி கொடுக்காமல், தமிழினத்தை சிறுமைப் படுத்துவதைப் பற்றி நீங்கள் எண்ணிப்பார்க்க மாட்டீர்களா என்று கேட்டதும்;

ஏங்க, நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் இருவரும் அமைச்சர்கள்தானே என்று அவர் சொல்லி முடிப்பதற்குள், அந்த இருவரும் பார்ப்பனர்கள்; தமிழர்கள் அல்லர் என்று நான் பட்டென வெடித்தேன்.

நீங்கள் இப்படி யெல்லாம் சிந்திக்கவும் கூடாது; பேசவும் கூடாது; அவர்கள் தமிழ்தானே பேசுகிறார்கள்; அதனால் அவர்களும் தமிழர்கள்தான் என்று வைத்திலிங்கம் வாதிட்டதை பொறுக்காத நான்,

நீங்கள் மலாய் மொழி பேசுகிறீர்கள்; அதனால் உங்களை மாலாய்க்காரர் என்று அச்சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? சீன மொழியை கற்றுக் கொண்டால் உங்களை சீனர் என ஏற்றுக்கொள்வார்களா என்று கேள்விகளையே நான் பதிலாக முன்வைத்தபொழுது, அவர் உடனே பொங்கிவிட்டார். “இப்படி யெல்லாம் சிந்திப்பதால்தான் நீங்கள் முன்னேறவில்லை” என்று நஞ்சைக் கக்கினார். அதாவது நான் பணம்படைத்தவனாக இல்லையென்பதை சுட்டிக் காட்டினார்.

நான் நிதானம் இழக்காமல் அந்தப் பெரிய மனிதரிடம் தொடர்ந்து நல்லபடி பேசியதையும் அவர் தொடர்ந்து தெரிவித்த கருத்தையும் இங்கேப் பதிவிட விரும்பவில்லை. இந்தியப் பிரதமர் மோடியின் ஆஸ்தான வழக்கறிஞரைப் போல ஒரு கட்டத்தில் அவர் என்னிடம் வாதிட்டார்.

ஆனாலும், நான் சிந்தனையில் வளமாகத்தான் இருக்கிறேன். நம் ஔவை மூதாட்டி குறிப்பிட்டதைப் போல, கூன்-குருடு-செவிடு-பேடு இன்றி இந்த மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதே பெரும்பேறுதான் என்ற கருத்து என் மனதிற்குள் எல்லைகொண்டு நிற்க, அந்தக் கருத்தாடலின் மற்ற பகுதியை இங்கே பதிவிட விரும்பவில்லை.

நாட்டில் உள்ள சிறந்த கல்வியாளர்களில் ஒருவரும் சமூகப் பற்றாளரும் நன்னெறிசார் ஆன்மிக சிந்தனையில் திளைத்தவருமான பேராசிரியர் டத்தோ என்.எஸ். இராஜேந்திரன் இப்பொழுது என்முன் வந்து நிற்பதைப் போல உணர்கிறேன்.

டத்தோ வைத்திலிங்கத்துடனான உரையாடல் குறித்து மனம் வருந்தி அவருடன் பகிர்ந்து கொண்டபொழுது, தயவு செய்து இதைப்பற்றியெல்லாம் எதுவும் எழுதவேண்டாம்; அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று என்னிடம் கேட்டுக் கொண்டதால், இந்த மட்டில் நிறுத்திக் கொள்கிறேன்.

இதுகூட, இந்த வேளையில் தேவை யென்பதால் தவிர்க்க முடியாமல் குறிப்பிடும்படி நேர்ந்துவிட்டது; பொதுவாக, ஆரிய அடிமைப் புத்தி கொண்டவர்களுக்கு, சொந்த இனத்தாரைப் பற்றிகூட அக்கறையின்றிப் போவதற்கு இது தக்க சான்றெனக் கருதுகிறேன்.

மதுரையில் பிரம்மாண்ட அளவில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் அப்படியே கிடப்பில் உள்ளது; இதற்குப் பின் வட இந்தியாவில் மோடி அடிக்கல் நாட்டிய மருத்துவமனை யெல்லாம் மளமளவென கட்டி முடிக்கப்பட்டுவிட்டன.

உலகம் முழுவது ஏறக்குறைய 28ஆயிரம் பேர் மட்டும் பேசக்கூடிய சமஸ்கிருத மொழிக்காக ஆண்டுதோறும் 500கோடி, 600 கோடி ரூபாய் என நிதி ஒதுக்கும் மோடி, தமிழ் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்கு குறித்து எவரேனும் குறிப்பிட முடியுமா?

தமிழ் நாட்டில் மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள், பொதுத் துறை ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்வுக்கும் முட்டுக்கட்டை போடும் மோடி, விவசாய நிலங்களையும் இயற்கை எரிவாயு-எண்ணய் துரப்பன மேடைகளை அமைப்பதன் மூலம் கெடுக்கப்பார்க்கிறார்.

இப்படி யெல்லாம், அனைத்து வகையாலும் தமிழர் வாழ்வு, தமிழர்தம் வாழ்விடம், அவர்களின் உயிரணைய மொழி உள்ளிட்ட அனைத்தையும் கெடுப்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, பிள்ளைப் பிடிப்பவன் கிளுகிளுப்பை, இணிப்பு தடவிய மயக்க மாத்திரையுடன் அலைவதைப்போல வாக்குகளைப் பொறுக்க வள்ளுவர், ஔவை, வேல், இப்பொழுது கோல் எனத் திரிவதை சிந்தனைத் தெளிவுள்ள தமிழர்கள் உலகளாவிய நிலையில் உணராமல் இல்லை;

எல்லாவற்றுக்கும் காலமகள் ஒரு கணக்கு வைத்திருப்பாள்; பொறுத்திருப்போம்.