LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் குடிநீர் பிரச்சனைக்கான ’தீர்வு 2024 இறுதியில் தான்’ என அறிவிப்பு

Share

யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா ரோகதயாளன்

யாழ்ப்பாணத்து மக்கள் தமது குடிநீர் பிரச்சனைகள் பகுதியளவிலும் தீர்வதற்கு அடுத்த ஆண்டுவரை காத்திருக்க வேண்டும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது அடுத்த ஆண்டு-2024-டிசம்பர் அல்லது 2025 ஜனவரி மாதக் காலப்பகுதியிலேயே தீர்வு ஒன்று சாத்தியப்படும் என்று இப்போது வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது.

”யாழ் குடாநாட்டுக்கான குடிதண்ணீர் விநியோகத் திட்டம் அடுத்த ஆண்டு டிசெம்பர் மாதம் அளவிலேயே ஆரம்பிக்கக் கூடிய சாத்தியம் உண்டு. அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் குடாநாட்டின் தேவையின் 50 சதவீதத்தையே பூர்த்தி செய்ய முடியும்” என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் முகாமையாளர் என்.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் கடந்த புதன்கிழமை (மே 31) இடம்பெற்றது. இதன்போது அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில்பேட்டையின் குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டன. அங்கு முதலிட்டுள்ள முதலீட்டாளர்களுக்கு உற்பத்திகளை மேற்கொள்ள குடிநீர் தேவை என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது பதிலளித்த முகாமையாளர் ஜெகதீஸ்வரன், ”வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் முதலீட்டாளர்கள் சிலருடன் சந்திப்பு நடைபெற்றது. அவர்களும் குடிநீர் கேட்கின்றார்கள். வடமராட்சி கிழக்கில் கடல் நீரை சுத்திகரித்து நன்னீராக்கி விநியோகிக்கும் யாழ்ப்பாண குடிநீர்த் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே அவர்களுக்கு குடிநீரை விநியோகிக்க முடியும். அதுவரை எம்மால் குடிநீரை விநியோகிக்க முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

260 மில்லியன் அமெரிக்க டொலரில் முன்னெடுக்கப்படும் அந்தத் திட்டம் அடுத்த ஆண்டு டிசம்பரே நடைமுறைக்கு வரக்கூடும். அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் குடாநாட்டின் தேவையின் 50 சதவீதத்தையே பூர்த்தி செய்யமுடியும் என்றும் அவர்  குறிப்பிட்டார்.

இதற்கு மறுமொழியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ”அப்படியானால் எஞ்சிய தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இன்னொரு திட்டம் தேவைதானே” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முகாமையாளர் ஜெகதீஸ்வரன் ”ஆம்” என்று பதிலளித்தார். 

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி அதிலிருந்து மீள்வதற்கு தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், முதலீட்டாளர்களுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீரை கூட உரிய காலத்தில் தேவையான அளவில் அரசால் வழங்க முடியாவிட்டால், வடக்கு பகுதியின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள் எப்படி பெருகும் என்று யாழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தடையற்ற வகையில் குடிநீரை அரசால் விநியோகிக்க முடியாவிட்டால், முதலீடுகளை உறுதி செய்து உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வேலை வாய்ப்புகளை கொண்டு வருவதில் கடும் சிக்கல்கள் எழலாம் என்று பொருளாதர வல்லுநர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். 

இதேநேரம் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்  கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்தனம் காட்டுவதாக  வடக்கு மாகாண சபையின் அவை தலைவரும் இலங்கைத் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான  சி வி கே சிவஞானம் குற்றச்சாட்டினார். 

யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற அந்த  ஒருங்கிணைப்புக் குழுக்  கூட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார். 

”யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுவதற்கான வேலை திட்டங்களின் ஆரம்ப பணிகள் தற்போதும் இடம்பெற்று வருகின்றது.  குறிப்பாக குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த குடிநீர் வழங்குவதற்கான குழாய்களை புதைக்கும் திட்டமானது நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்ற போதும்  புதைக்கப்பட்டுள்ள  குழாய்களின் ஊடாக தற்போது காற்றுக் கூட வருகிறதோ தெரியவில்லை ஆனால்  குடிநீரை கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்த போக்கினை காட்டுகிறார்கள் இதுதான் உண்மை” என்று அந்த கூட்டத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சி வி கே சிவஞானம். அதிலும் குறிப்பாக இந்த அரசியல்வாதிகள் யாரும் யாழிற்கான குடிநீர் பிரச்சினை தொடர்பில் கதைத்ததாகவும் இல்லை என்று மேலும் விசனம் வெளியிட்ட அவர், அண்மையில் புதிதாக கடமையேற்ற ஆளுநரிடமும் தாம் இந்த விடயம் தொடர்பில் பேசியதையும் சுட்டிக்காட்டினார். எனவே குடிநீரை கொண்டு வருவதற்கு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு  ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.  

ஏற்கனவே நாங்கள் வடக்கு மாகாண சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி  தீர்மானத்தை பிரதமர் அலுவலகத்திற்கும்  அனுப்பி இருந்தோம் எனவே கிடப்பில் கிடக்கின்ற அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த  ஒருங்கிணைப்புக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் கோரினார். 

இதனையடுத்து யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில்  ஆராய வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி வி கே சிவஞானம் தலைமையில் ஐவர் கொண்ட விசேட குழு ஒன்று  நியமனம் செய்யப்பட்டது. இந்தக் குழுவில் வடக்கு மாகாண சபையின் அவை தலைவர், ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கான இணைப்பாளர், மாகாண  பிரதம  செயலாளர், நீர்பாசன பொறியியலாளர்களப்பணிப்பாளர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 

இந்தக் குழு-  நீர் விநியோகத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதோடு தமது முதலாவது கூட்டத்தை வெள்ளிக்கிழமை  (2 ஜூன்) நடத்தவும்  தீர்மானிக்கப்பட்டது.