விநாயகர் விமர்சனம் | சிறுத்துப்போன வடையும், அது சொல்லும் செய்தியும்
Share
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்-பகுதி 17)
கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி
”நேயர்களுக்கு வணக்கம். இது லண்டன் பிபிசி உலக சேவையிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழோசை……….
இன்றை பிபிசி தமிழோசையில் உங்களுடன் சிவராமகிருஷ்ணன்…………..
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையே நேற்று முதல் கடும் மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், வன்னிப் பகுதியில் இன்றைய கள நிலவரம் பற்றி அங்கிருக்கும் நமது வவுனியாச் செய்தியாளர் மாணிக்கவாசகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டேன்”………
இற்றைக்குப் பதினான்கு வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கையில் யுத்தம் மிகத்தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் உண்மையான தகவல்களைப் பெற உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்ந்த தமிழர்கள் பெரிதும் நம்பிய பிபிசியின் உலகசேவையில் அடிக்கடி கேட்ட இந்த ஒலிக்குறிப்பை எந்தத் தமிழரும் மறந்து போயிருக்க நியாயமில்லை. நாளாந்தம் இரவுச் செய்தியில் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள் பற்றி உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் உண்மையை ஓங்கி உரைத்த செய்தியாளர் மாணிக்கவாசகம் இன்று உலகில் இல்லை.
ஆனால் இலங்கைச் செய்தியாளர்கள் வழங்கும் செய்திகளை பிபிசியில் அதீத கரிசனையுடனும் அக்கறையுடனும் ஊடக தர்மத்தை மீறாமலும் தொகுத்து உரைத்த மூத்த ஒலிபரப்பாளர் சிவராமகிருஷ்ணன் அவர்களுடன் எனக்கு நெருங்கிய பழக்கமுண்டு. இலங்கைப்பொருளாதாரம் தொடர்பாக பேட்டிகளை நானும் அவ்வப்போது பிபிசிக்கு வழங்கியிருந்தேன். நன்கு அறியப்பட்ட விமல் சொக்கநாதன் அவர்களின் புத்தக வெளியீட்டில் கலந்து கொள்ள இலங்கை வந்திருந்தார். முள்ளிவாய்க்கால் யாழ்ப்பாணம் என்று ஊடகப்பயணம் செய்து விட்டு கொழும்பில் ஒருவாரம் தங்கயிருந்து அலுவல் பார்க்க வசதியாக இருக்கும் என்று வெள்ளவத்தையில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் அறை எடுத்திருந்தார்.
அந்த ஹோட்டல் பற்றி என்னிடம் அபிப்பிராயம் கேட்டார். நான் நாளாந்தம் வேலைக்குப் போகும் போதும் திரும்பி வரும்போதும் அந்த ஹோட்டலை வெளியில் மரைன் ட்ரைவிலிருந்து இருந்து பார்த்தளவில் சனநடமாட்டம் அதிகமாக இருந்தமையால் நல்லஹோட்டல் என்று நம்பியிருந்தேன். யாழ்ப்பாணத்திலிருந்து வந்து அதிகாலை ஹோட்டலுக்கு போனவரிடமிருந்து போன் வந்தது. சார், அந்த ஹோட்டல் அறை ரொம்ப மோசம், வேறு இடம் பாரக்கவேண்டும் என்று. கொள்ளுப்பிட்டியில் இவருக்கு ஏற்கெனவே பரிச்சயமான ஒரு ஹோட்டலைத் தடவியதில் உடனடியாக அவருக்கு அறை கிடைத்தது. அந்த ஹோட்டல் எனது காரியாலயத்திலிருந்து இரண்டு கட்டடங்கள் தள்ளி அமைந்திருக்கிறது. ஆகவே இது அவர் இங்கு இருக்கும் வரை விடாமல் அவருக்கு கரைச்சல் கொடுக்க வசதியாக வாய்த்தது. பாவம் அந்த வெள்ளவத்தைப் பெரிய ஹோட்டல். வானளாவிய கட்டத்தையும் ஏனைய வசதிகளும் இருப்பதாக கூறிக்கொண்டாலும் சர்வதேச அனுபவமுள்ள ஒரு ஊடகவியலாளரிடமிருந்து மிக மோசமான ஹோட்டல் என்ற நற்சான்று வாங்கியிருக்கிறது. ஆட்கள் வருகிறார்கள் என்பதற்காக வாடிக்கையாளர் திருப்தியை சற்றும் கருத்திற் கொள்ளாத ஹோட்டல்களும் தங்குமிடங்களும் நகரத்தின் மத்தியில் அதிகமிருந்தால் நாட்டின் உல்லாசப் பயணத்துறை வளர்ந்து கிழித்த மாதிரித்தான். ’நீ விரும்பினால் வா இல்லாவிட்டால் போ’ என்ற மனப்பாங்கில் தான் பல ஹோட்டல்கள் இயங்குகின்றனவேயன்றி டொலர்களில் கட்டணம் செலுத்துகிறார்களே அவர்களைத் திருப்திப்படுத்துகிறோமா என்ற கஸ்டமர் சட்டிஸ்பக்ஷன் பற்றி கவனஞ் செலுத்துவது வெகு அபூர்வம்.
கனடாவிலிருந்து வந்து வெள்ளவத்தைப் பகுதியில் இருக்கிற ஹோட்டல்களிலும் விடுதிகளிலும் தங்கி விட்டுப் போனவை தங்களுடைய அனுபவங்களையும் இங்கு பதிவு செய்யலாம். சரி நமது விருந்தாளிக்கு நல்ல ஹோட்டல் அறை கிடைத்தது. சாப்பாடு? என் கண்முன்னாலேயே அவரிடம் ஒரு பெண் ஜோவியலாக அண்ணா நீஙகள் வெஜ்ஜா நொன்வெஜ்ஜா என்று கேட்டாள். நான்-வெஜ் என்று பதில் சொன்னார். என்ன சொல்கிறார்? நான் ஒரு வெஜிடேரியன் என்கிறாரா அல்லது நான் ஒரு நொன்வெஜிடேரியன் என்கிறாரா என்று புரியாமல் மீண்டும் அவள் அதே கேள்வியை கேட்க அவரும் மீண்டும் அதே பதிலைச் சொல்ல அவள் தலையைப் பிய்த்துக்கொண்டு அவ்விடத்தை விட்டுப் போய்விட்டாள். அவரொரு தாவரப் பட்சி. கொழும்புக்கு வந்தால் கோன் பிளேக்ஸையும் பால் பைக்கற்றையும் வைத்து சமாளிக்க அவருக்குத் தெரியும். கொள்ளுப்பிட்டி ஹோட்டலில் சாப்பாடு இல்லாமல் அறைவாடகை குறைவு. அவரோ அசைவம் சாப்பிடுவதில்லை. பிறகேன் சைவ சாப்பாட்டுக்கு அவ்வளவு பெரிய தொகையைக் கொடுப்பான்? ஆனால் அக்கம்பக்கத்தில் அருவருப்பில்லாமல் சென்று உட்கார்ந்து சாப்பிடுமளவுக்கு ஒரு சைவக் கடை இல்லை. மகாபெரிய ஒரு ஆங்கிலப் பெயருடன் கொள்ளுப்பிட்டிச் சந்திக்கருகில் ஒரு சைவக்கடை உண்டு. அங்கு சென்று சாப்பிடுபவர்களுக்கு சுடச்சுட தோசை வடை போன்றவை கிடைக்குதோ இல்லையோ ஆனால் அங்குள்ள (அ)சுத்தம் நிச்சயம் சுகம் தராது. ஆகவே இரவுச் சாப்பாட்டிற்கு கொள்ளுப்பிட்டியிலிருந்து புறப்பட்டு வெள்ளவத்தையின் தெற்குக் கோடி ராமகிருஷ்ண மிஷனுக்கு அருகில் உள்ள ஒரு உணவகத்திற்கச் சென்றோம். சூடாக என்ன கிடைக்கும் என்று வெயிட்டரிடம் கேட்டார். சூடாக சுடுதண்ணி கிடைக்கும் என்று பதில் வருமோ என்று பயந்தேன்.
எல்லாமே புதிதாகப் போட்டுத் தருவோம் சார். ஓடர் பண்ணுங்கள் என்று பௌவியமாக பதில் வந்தது. ஓரு தோசை ஒரு வடை ஓடர் செய்தோம். கொண்டு வந்தார்கள். சாப்பிட்டோம். ஓ… சாப்பாடு ரொம்ப நல்லாருக்கு சார் என்றார். உண்மைதான் போல. ஏனென்றால் எனக்கும் சைவசாப்பாடுகளுக்கும் ஏழாம் பொருத்தம். நல்லாருக்கா இல்லையா என்று நான் சொல்ல முடியாது. அவர் கைகழுவப் போக நான் கார்ட்டைத் தேய்த்து பில்லைச் செலுத்திவிட்டேன். அவருக்கு அவருடைய இந்திய கிறடிட் கார்ட்டை இலங்கையில் உள்ள மெஷின்களில் தேய்த்துப்பார்க்க அவ்வளவு ஆசையாம். நீங்கள் ஆசையாய் அதைப் பிறகு தேய்க்கலாம் சார் வாருங்கள் போகலாம் என்று கூட்டிவந்து விட்டேன். இன்னொருநாள் பகல் பொழுது. பசித்தது. சார் சாப்பிடப்போவோமா என்றேன் சரி என்றார். ஆனால் மீண்டும் வெள்ளவத்தை தெற்கு செல்ல பஞ்சியாக இருந்தது. கிட்ட ஏதாவது இடம் இருக்குமா என்று கூகுள் அக்காவைக் கேட்க ’பம்பலப்பிட்டியில் மெரைன் ட்ரைவிலேயே ஜயா வீதிக்கருகில் ஒரு சைவ ரெஸ்டோரண்ட் இருக்கென்றாள்’. அட ஒவ்வொரு நாளும் அதால தானே போய்வாரன் ஏன் கவனிக்காமல் விட்டேன் என்று யோசித்தபடி அங்கு போனோம். கூட்டம் அதிகமில்லை. என்ன இருக்கென்று அவர் கேள்வி கேட்க முன்பு சோறு சாப்பிடுவோம் என்றேன். மெட்ராஸ் தாலி இருக்கென்றார் வெயிட்டர். ஓ……அப்படியென்றால் பொண்ணும் பார்த்துக் கொடுப்பீர்களா கட்டுவதற்கு என்று கேட்கத் தோன்றியது. வைத்திருப்பது சைவக்கடை பெரும்பாலான கஸ்டமர்கள் இலங்கையர்களும் தென்னிந்தியர்களும் அப்புறம் ஏன் சோற்றுக்கு பெயர் வைக்கிறீர்கள் தாலியும் தையலும் பொட்டும் என்று? கஸ்மாலம் என்று மெட்ராஸ்பாசையில் திட்டத் தோன்றியது. ஏனோ தெரியவில்லை. இலங்கையில் இந்த வடஇந்தியப் பெயர்கள் ஒரே குரங்குப்பிடியாக வளர்ந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் சாப்பாடு பிரமாதமாக இருந்தது. இடைநடுவில் மீண்டும் சோறு உட்பட கறிகளை கேட்டுப்பெற்றுக்கொள்ள முடிந்தது. சிப்பந்திகள் நட்புணர்வுடன் பழகினார்கள். ஆனால் கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் தும்முல்லைச் சந்தியில் நீண்டகாலமாக இயங்கிவரும் ஒரு சைவக்கடையில் எப்போதுமே அளவுச் சாப்பாடு தான். மேலதிகமாக சோறு கேட்டால் அதற்கு மேலதிக பணம் செலுத்த வேண்டுமோ என்ற பயம் வேறு. பொதுவாக தமிழர்களால் நடத்திச் செல்லப்படும் உணவகங்களில் வழங்கப்படும் ஒரு பிளேட் உணவின் அளவு குறைவாக இருப்பதை தொடர்ச்சியாக அவதானித்திருக்கிறேன். ஒரு முண்டாசு சின்னத்துடன் இந்தியாவிலும் இலங்கையிலும் இயங்கும் அசைவ உணவகத்தின் சோற்றுப்பார்சலின் அளவு ஆரம்பத்தில் ஒரு ஆளுக்குப் போதுமாக திருப்திகரமாக சாப்பிடும் அளவில் இருந்தது. ஆனால் இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக ஒரு சிறிய பெட்டியில் ஏதோ ரேஷனுக்கு இலவசமாக பஞ்சச் சாப்பாடு போடுவது போல காக்காவுக்கு சோறு போடப் போதுமானளவுக்கு அளவு சிறுத்துப் போய் விட்டது.
ஆனால், விலை முன்னரைவிட மிகவும் அதிகரித்திருக்கிறார்கள். வாசகர்கள் இப்போதைக்கு இதைக் குறித்துவைத்துக் கொள்ளவும். முஸ்லிம் கடைகளில் சாப்பாட்டுப்பார்சலின் அளவு இன்னமும் தாராளமாகத் தான் இருக்கிறது. சாப்பாட்டில் வஞ்சகம் செய்யக் கூடாது என்ற அவர்களின் கொள்கை இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் தமிழர்கள் மற்றவர்களிடம் பணம்வாங்கிக்கொண்டு சாப்பாடு போடும் போதும் மிகவும் கஞ்சத்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
அந்தளவில் மரைன் ட்ரைவில் உள்ள அந்த சைவ உணவகம் சற்று வித்தியாசம். அடுத்த தடவை மீண்டும் அதே உணவகத்தில் இட்டிலியும் வடையும் ஓடர் பண்ணிவிட்டு காத்திருந்தோம் இருபது நிமிடத்தின் பின்னர் வந்தது. இட்டிலியிலும் வடையிலும் புறங்கையை வைத்துப்பார்த்தவிட்டு வடைபுதுசு இட்டிலி பழசு என்று திருப்பி அனுப்பி விட்டார். மீண்டும் 20 நிமிடம் இட்டிலியும் வடையும் சுடச்சுட வந்தது. வடையை எடுத்து அதன் நடுவில் இருந்த ஓட்டை வழியே பார்க்க மரைன் டரைவுக்கு அப்பாலிருந்த கடல் தெளிவாகத் தெரிந்தது. உற்றுப்பார்த்தால் சிலவேளை இந்தியாவும் கூட தெரியலாம். வடை சிறுத்துப் போய் அதன் நடுவில் இருந்த ஓட்டை பெரிதானதால் ஏற்பட்ட தொழில்நுட்பப் புரட்சி இது. ஆனால் 70 ரூபாவாக முன்னர் இருந்த வடை இப்போது 250 ரூபா ஆகியிருக்கிறது.
முன்னர் நாம் கண்ட சிறுத்துப்போன சோற்றுப்பார்சல் இப்போது சிறுத்துப் போன இந்த வடை இரண்டுமே முக்கிய பொருளாதார விடயங்கள் தான். பணவீக்கம் நிலவும் காலங்களில் தமது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும் இலாபங்களை பெருக்கிக் கொள்ளவும் வியாபார நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் வியாபார தந்திரம்- அளவைக் குறைத்து விலையை அதிகரிப்பது. இதனை சுருக்கவீக்கம் (shrinkflation) என்று அழைப்பார்கள். இலங்கையில் சிறுவர்கள் விரும்பிப்பருகும் வெனிலா பால் பக்கற்றில் ஆரம்பத்தில் 250 மில்லி லிற்றர் இருந்த நினைவு இது படிப்படையாகக் குறைந்து 180 – 170 மில்லி லிற்றராகக் குறைந்து விட்டது. அதேபோல் மெகி நூடில்ஸ் 100 கிராதில் இருந்து 72 கிராமாகக் குறைந்து விட்டது. ஆனால் விலைகள் நான்கு மடங்கு அதிகரித்திருக்கின்றன. இது போல பல்வேறு பொருள்களை நாம் உதாரணம் சொல்ல முடியும். பெற்றோல் டீசல் எரிவாயு விலை அதிகரிப்பைக் காரணம் காட்டி விலைகளை பலமடங்கு அதிகரித்த ஜெகஜ்ஜாலக் கில்லாடிகள், இப்போது எரிபொருள் விலைகள் மிகக் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ள போதிலும் தங்களுடைய பொருள்விலைகளை குறைக்க மாட்டார்கள்.
இந்த இடத்திலேயே மக்களின் நன்மை கருதி பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியமாகிறது. குறிப்பாக மக்களின் உணவுப்பொருள் விலைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம் இதை வடையிலுள்ள ஓட்டை பிரச்சனையாகப் பார்க்காமல், அந்த ஓட்டை ஏன் பெரிதானது என்பதை ஆராய்ந்து, மக்களின் உணவுத் தேவையை உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும். இல்லையென்றால் அந்த ஓட்டை வழியாக ஓட்டு வேறெங்காவது விழுந்துவிடும்.