LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையில் சட்டமும் ஜனநாயகமும் கேள்விக்குறியாகியுள்ளது வெட்கக்கேடானது.

Share

சிவா பரமேஸ்வரன்

ஹலோ சார். யுவர் பாஸ்போர்ட் பிளீஸ்

யெஸ்

தாங்கஸ். வாட் இஸ் யுவர் பர்பஸ் ஆஃப் விசிட்டிங் ஸ்ரீலங்கா

பில்கிரிமேஜ், கோயிங் டு கோவில் அண்ட் மீட்டிங் பிரென்ட்ஸ்

விச் கோவில் யூ ஆர் கோயிங் சார்?

நல்லூர் அண்ட் கீரிமலை சிவன் கோவில்

எனி ஸ்பெஷல் ரீசன் சார்

நோ ஸ்பெஷல் ரீசன். ஜஸ்ட் லார்ட் ஷிவா கால்ட் மீ. யூ ஆர் ஃபிரீ டு கான்செல் மை விசா அண்ட் ஐ டோண்ட் ஹாவ் எ பிராப்ளம் இன் கோயிங் பாக்…

சாரி சார், வெல்கம் டு ஸ்ரீலங்கா….

அந்த குடிவரவு அதிகாரியுடனான உரையாடல் 45-60  நொடிகளில் முடிவடைந்தது.

குடிவரவு மேசையில் அந்த சிறிய உரையாடல், பின்னர் ஒரு முத்திரை, கதவு திறந்தது, அடுத்து வரியில்லாத விற்பனை நிலையம், பிறகு சுங்கத்துறையில் பிரச்சனைகள் ஏதுமின்றி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே வர….எனது நண்பர் அனுப்பி உதவிய வாகனம் தயாராக இருக்க புறநகரிலிருந்து தலைநகர் கொழும்பு நோக்கிய பயணம் தொடங்கியது.

எனது இலங்கை பயணம் தொடர்பில் பின்னால் பார்ப்போம். ஆனால் கொழும்பு நோக்கி பயணிக்கின்ற அந்த சுமார் ஒரு மணி நேரமும் எனது எண்ணவோட்டம் அந்த குடிவரவு அதிகாரியுடனான உரையாடல் தொடர்பிலேயே இருந்தது. இதன் காரணமாக அந்த விசாலமான  சாலை, அதன் இருபுறமும் நீரேரி-வாவியுடன் கூடிய அழகு, கட்டுநாயக்க ஏற்றுமதி வர்த்தக வலைய தொழிற்சாலைகள், இந்திய சிமெண்ட் கம்பெனியின் உற்பத்தி, சீராக செல்லும் வாகனங்கள், இந்தியா, இங்கிலாந்தைவிட சிறந்த சலைகள், தெளிவான அறிவிப்பு பலகைகள், சாலையின் இடையில் பூத்துக்குலுங்கும் மலர்ச்செடிகள் என்பவை எனது பார்வையில் பட்டாலும், சிந்தனை என்னவோ அந்த குடிவரவு அதிகாரி கேட்ட கேள்வியிலேயே தங்கியிருந்தது.

மிகவும் நேர்த்தியாக இருந்த அந்த சாலைக்கு பெயர் ‘கனேடியன் பிரெண்ட்ஷிப் ரோட்’ -கனேடிய நட்புறவு சாலை என்பதையும் என்னால் கவனிக்க முடிந்தது. இந்த இரு நாடுகளுக்கும் இருந்த நெருக்கத்தின் அடையாளமாக அந்த சாலை உள்ளது. ஆனால் தற்போது இலங்கை அரசிற்கு கனடா என்றால் சற்று ஒவ்வாமையாக உள்ளது. பயணம் தொடர்ந்தது……

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்கள், “என்னைப் பார்த்து ஏண்டா இந்த கேள்வி கேட்டே” என்று கேட்ட அந்த கேள்வி தான் நினைவிற்கு வந்தது.

ஆனால், மறுபுறம் அவர் தனது கடமையைத்தானே செய்கிறார் என்றும் எண்ணத் தோன்றியது. எது எப்படியோ நகருக்கு வந்து சேர்ந்தாயிற்று.

உடனே ஓரிரு தொலைபேசி அழைப்புகள்.

“சார் பயணம் எப்படி? ஏர்போர்ட்டில் பிரச்சனைகள் ஏதுமில்லையே?

”எந்தப் பிரச்சனையும் இல்லை”

அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கியதால் அந்த ஒரு நிமிடத்திற்கும் குறைவான உரையாடல் மறந்தே போயிற்று.

ஆனால் ஒரு செய்தியாளர் என்ற வகையில் , அன்றாட நிகழ்வுகளை பல்துறை ஊடகங்கள் மூலம் அறிந்துகொள்ளும் உந்துதலில் இலங்கையில் தங்கியிருந்த போதும், அச்சு, மொழி புரியாவிட்டாலும் காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள், இணையம் மூலம் வானொலி ஆகியவற்றை கண்டும் கேட்கவும் தேவை ஏற்பட்டது. அப்படியான சூழலில் தான்  இரண்டு விடயங்கள் எனது மனதிற்கு நறுக்கென்று பட்டது. எனது சொந்த பணத்தை செலவழித்து, தனிப்பட்ட முறையில் இறைவனையும், நண்பர்களையும் காண வந்த என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் எனக்குள் தாமதமாக எரிச்சலை ஏற்படுத்தியது. காரணம்?……

சட்டத்திற்கு புறம்பான வகையில் தங்கக்கட்டிகளைக் கடந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிகவும் சர்வசாதாரணமாக விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, நாடாளுமன்ற கூட்டத்தில் பங்குபற்றி, பின்னர் அதே விமான நிலையத்திலிருந்து வெளியேற முடிகிறது.

மற்றொரு சம்பவத்தில், போலிக் கடவுச்சீட்டில் நாட்டிற்குள் நுழைந்ததன் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்ட மூவரை அமைச்சர் ஒருவர் கடிதம் கொடுத்து விடுவிக்கிறார். இந்த இரண்டு சம்பவங்களும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

அடிப்படையில் இவை இரண்டும் அயோக்கியத்தனமானவை என்பதே பொதுவான புரிதல் மற்றும் நிலைப்பாடு.இந்த விஷயத்தில் கட்சி, மதம், இனம் என்ற வித்தியாசம் எல்லம் இல்லை. எல்லம் ஒரே இனம். அவ்வளவே.

இதில் ஒருவர் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம். பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினரின் பெயருக்கு முன்னால் சம்பிராதய ரீதியாக ‘கௌரவ’ என்று போடும் மரபு இலங்கையில் உள்ளது. ஆனால் அந்த மரியாதைக்கு அவர் பொறுத்தமானவரா என்பதில் கேள்விகள் இருந்தபடியால், அவர் பெயரை மட்டுமே சொல்லி கட்டுரையை தொடர்கிறேன். நாட்டை மேம்படுத்தி, திறமாக நிர்வகிக்க சட்டங்களை இயற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அலி சப்ரி ரஹீம் கடந்த மே மாதம் 23ஆம் திகதி துபாயிலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தில் வந்திறங்கிய போது அவரிடமிருந்து 80 மில்லியன் ரூபாய் பெறுமதியாக தங்கம் மற்றும் மொபைல் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.

மிகவும் புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்ட அவர், தனது பயணப் பொதியை தான் கட்டவில்லை, அது தனது நண்பர்களால் கட்டப்பட்டது, எனவே தனக்கு அது குறித்து ஒன்றும் தெரியாது என்று சிறிதும் வெட்கமின்றி விமான நிலைய அதிகாரிகளிடம் கூறினார். பொதுவாக அனைத்து விமான நிலையங்களிலும் கேட்க்கப்படும் கேள்வியானது, “உங்கள் பொதிகளை நீங்களே கட்டினீர்களா?” அதற்கான நோக்கம் என்பது ஒவ்வொரு பயணிக்கும் தான் எடுத்துச் செல்லும் பொதியில் என்ன இருக்கிறது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அது அந்த விமானத்தின் பாதுகாப்புடன் தொடர்புடையதும் கூட.

ஆனால், அலி சப்ரி ரஹீமால் வாய் கூசாமல் பொய் சொல்ல முடிந்தது மட்டுமல்லாமல், அவரால் வெளியே வந்து அடுத்த நாள் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்திலும் பங்குபெற முடிந்துள்ளது. அதிலும் பெருமையாக, பொது சேவைகள் ஆனைக்குழுவின் தலைவரை பதவி நீக்குவது தொடர்பிலான தீர்மனத்திற்கு எதிராக தான்வாக்களித்ததாகவும் கூறியுள்ளார். எதிர்கட்சி தரப்பிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் ஆளும் கட்சி தரப்பில் ஐக்கியமாகி, விமான நிலையத்தில் சிக்குபட்ட நிலையில், ஆளும் தரப்பு தனக்கு ஆதரவாகச் செயல்படவில்லை என்று கூறி, அரசிற்கு எதிராக வாக்களித்ததாக தம்பட்டம் அடித்துக்கொண்டார்.

என்ன அவலமான நிலை. மக்களிற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடத்தல் வேலையில் ஈடுபட்டு மாட்டிக்கொண்ட பிறகு, தனக்கு அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ‘முழு பூசனிக்காயை சோற்றில் மறைத்து’ இல்லாத தில்லாலங்கடி வேலைகளைச் செய்த பிறகு தான் உச்சகட்ட மோசடி இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு முடிந்த நிலையில், மீண்டும் அவரால் துபாய்க்கு திரும்ப முடிந்துள்ளது. இதைக்காட்டிலும் ஒரு ஜனநாயக கேலிக்கூத்து இருக்க முடியுமா?

இரண்டே நாட்களில் மீண்டும் துபாய் திரும்பியுள்ளது, அவர் மீதான சந்தேகங்களை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

அவர் செய்த செயலிற்காக நாடாளுமன்றத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் ஒரு முன்மொழிவை செய்துள்ளார். அதற்கு பரந்துபட்ட ஆதரவும் கிடைத்துள்ளது. ஆனால், இந்த கட்டுரை எழுதப்படும் வரை, நான் அறிந்தவகையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அந்த பிரேரணையில் கையெழுதிட்டதாக தெரியவில்லை. ஊழலுக்கு இனவாதம் துணை போகிறதா? யாமரியோம் பராபரமே! அலி சப்ரி ரஹீம் தொடர்பான இந்த சம்பவம் இலங்கையில் எப்படியான கலாச்சாரம் நிலவுகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

எனினும், அவரை மட்டுமே இந்த மோசமான கலாச்சார சீரழிவிற்கு காரணமாக கூற முடியாது. சுமார் 45 ஆண்டுகளிற்கு முன்பு அதாவது 1978ஆம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் துணை அமைச்சராகவும் இருந்த அநுர டானியேல் விமான நிலையத்தில் தங்கக்கட்டிகளுடன் பிடிபட்டார். இதில் மற்றொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டுமென்று சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மூத்த செய்தியாளர்களும் கூறுகின்றனர். அவர்கள் கூறுவதன் முக்கியச் செய்தி என்பது, பிடிபட்டவர்கள் சிலர் ஆனால் பிடிபடாமல் பிழைத்துக்கொண்டவர்கள் ஏராளம் என்பதே.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் விரும்பத்தகாத நடவடிக்கைகள் மற்றும் நேர்மையின்மை காரணமாகவே நாட்டில் மோசமான கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன, அது நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்கிறது என்பது உண்மை. எனினும் ஒரே வித்தியாசம், இப்படியான மோசமான செயல்களைச் செய்பவர்கள் ஒரு இனம் அல்லது ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல. அதேவேளை பல உறுப்பினர்கள் நேர்மையாகவும், மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்த கடத்தல் விவகாரம் தொடர்பில், அலி சப்ரி ரஹீம் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதில் நான் உடன்படுகிறேன். அப்படியான கடும் நடவடிக்கை இனியும் அவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் தடுக்கக் கூடும்.

அதே கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற மற்றொரு சமப்வமும் அரசியல்வாதிகளின் பித்தலாட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. மேற்கு ஆப்ரிக்க நாடான கினி நாட்டுப் பிரஜை எனக் காட்டும் போலிக் கடவுச்சீட்டில் சீனர் ஒருவரும், அவருடன் அதே போன்று வேறு நாட்டின் பெயரில் போலிக் கடவுச்சீட்டுகளுடன் வந்தவர்களும் பிடிப்பட்டனர். விஷயம் வெளியே கசிந்தவுடன், ராஜாங்க அமைச்சர் அருந்திக ஃபெர்ணாண்டோ களத்தில் இறங்கி சட்டத்திற்கு புறம்பாக அவர்களை விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கிறார்.

அதற்கு அவர் கூறும் காரணம், அவர்களின் போலிக் கடவுச்சீட்டைவிட மோசமான பித்தலாட்டமாக உள்ளது.  அப்படி வந்தவர்கள் இலங்கையில் முதலீடு செய்யவே வந்தார்கள், எனவே அவர்களை பாதுகாக்க வேண்டியது தனது கடமை என்கிற வகையில் வியாக்கியானம் அளித்துள்ளார். இதில் அமைச்சர் அருந்திக ஃபெர்ணாண்டோ தலையிடுவதற்கான முகாந்திரம் ஏதுமில்லை. ஆனால் ஏன் தலையிட்டார்? கடவுச்சீட்டே போலியென்றால் அவர்களது முதலீடு எப்படி இருக்கும்? அதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

சரி, தொடங்கிய இடத்திற்கே வருகிறேன். இலங்கையில் சுற்றுலா அல்லது வர்த்தம் ஆகிய நோக்கத்திற்காக சொந்த பணத்தில் நேர்மையான வழியில் வருபவர்களிடம் ஓராயிரம் கேள்விகள் கேட்கபடுகின்றன. நீங்கள் எதற்காக வந்துள்ளீர்கள். கோவில் என்றால் எந்த கோவில், எந்த பூசாரி, என்ன பூசை, என்ன வேண்டுதல் போன்று பல கேள்விகள்.

இதே சிந்தனையுடன் நான் எனது பயணத்தை முடித்துக்கொண்டு குடியகல்வு அதிகாரி முன்னர் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை முடிக்கச்சென்ற போது, அவரும் பழைய அதே பழைய பல்லவி. நீங்கள் எதற்காக இலங்கைக்கு வந்தீர்கள். மீண்டும் கோவில் கதையை கூற வேண்டியதாயிற்று.

ஒரு வழியாக குடியகல்வு நடைமுறைகள் விரைவாக முடிந்து எனது உண்மையான கடவுச்சீட்டில் உரிய முத்திரை குத்தப்பட்டு விமானம் ஏறி நாடு திரும்ப முடிந்தது.