யாழ்-சென்னை விமான சேவை மேலும் வாய்ப்பை வழங்குமா?
Share
நடராசா லோகதயாளன்
யாழ்ப்பாணம்-சென்னை இடையேயான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு 100ஆவது விமான சேவையை நினைவுகூரும் முகமாக இந்த வாரம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் கேக் வெட்டி மகிழ்ச்சி வெளியிடப்பட்டது.
இந்த விமான சேவை இலங்கையின் வடக்கு மக்களிற்கு தனிப்பட்ட பயனம் மற்றும் வர்த்தகரீதியான நோக்கத்திற்கு கிடைத்த சேவை நல்லதொரு சேவை என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. இருப்பினும் அந்தச் சேவையின் முழுமையான பலனையும் வடக்கு மக்கள் அடைய இந்தியா மேலும் முயற்சியும் பங்களிப்பும் செய்ய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவை ஆரம்பித்த தினத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான 100வது அலையன்ஸ் எயார் விமான சேவை வரையில் 10,500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர் எனவும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான இந்த விமான சேவை இருதரப்பு மக்களிடையே உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என இருநாட்டு அதிகாரிகளும் கூறுகின்றனர். மேலும், இச்சேவையின் மூலம் வர்த்தகத் தொடர்புகள் மேம்பட்டு, முதலீட்ட்டை ஊக்குவித்து, சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் அதிகரித்து இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்த விமான சேவை உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வட மாகாணத்தின் பொருளாதாரம் உயர இந்த விமான சேவை பயன்படும் என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது.
யாழ்ப்பாணம் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்கப்பட்டாலும், அதற்கான முழு இலக்கணங்களுடன் அது இல்லை என்ற விமர்சனம் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. அது பெயரளவில் சர்வதேச விமான நிலையமாக இல்லாமல், செயற்பாட்டின் அடிப்படையில் அப்படி இருக்க வேண்டும் என்று இந்த சேவையை பயன்படுத்தியவர்கள் கனடா உதயனிடம் தெரிவித்தனர்.
உண்மையில் யாழ்ப்பாணம் சென்னை இடையே தற்போது இடம்பெறும் விமான சேவையானது வாரத்தில் 4 தினங்கள் மட்டுமே இடம்பெறும் நிலையில் இதனை 7 தினங்களும. மேற்கொள்ள நடவடிக்கையும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அது மட்டுமில்லாமல் தற்போது சேவையில் ஈடுபடும் ஏ.ரி.ஆர் 72 ரக விமானத்திற்குப் பதிலாக எயார்பஸ் ஏ320 ரக விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏ.ரி.ஆர் 72 ரக விமானத்தில் தற்போது 60 பயணிகள் மட்டுமே .பயணிக்க முடியும். மாறாக, எயார்பஸ் ஏ320 ரக விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டால் 150 முதல் 180 பயணிகள் வரை பயணிக்க முடியும். பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு அப்பாற்பட்டு தற்போது ஒரு பயணிக்கு அனுமதிக்கப்படும் 20 கிலோ பொதி 40 கிலோவாகவும் அதிகரிக்க முடியும். அப்படிச் செய்தால் மட்டுமே இந்த விமான சேவை எதிர்பார்க்கப்படும் வரவேற்ப்பை பெற்று உரிய பலனை அளிக்கும் என்று மக்கள் கூறுகின்றனர். பயணப் பொதியின் அளவிற்காகவே தற்போது பலர் கொழும்பு சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் வருவதையும் காண முடிகிறது.
இதேநேரம் இந்த சேவையை தரமுயர்த்துவதில் சில அடிப்படை கட்டமைப்பு பிரச்சனைகளும் உள்ளன. தற்போது சேவையில் ஈடுபடும் ஏ.ரி.ஆர் 72 ரக விமானம் ஒன்று தரை இறங்குவதற்கு 1500 மீற்றர் ஓடுபாதை தேவையானபோதும் எயார்பஸ் ஏ320 ரக விமானங்கள் தரை இறங்குவதானால் 1800 முதல் 1900 மீற்றர் நீளமான ஓடுபாதை கண்டிப்பாக வேண்டும்.
அவ்வாறு 1900 மீற்றர் ஓடுபாதை வேண்டும் என்றால். அதற்கு கூடுதல் நிலம் தேவைப்படும் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பிரச்சனையை சமாளிக்க முடியும் என்று துறைசார் வல்லுநர்கள் கூறுகிறார்கள். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள பலாலியில் உள்ள விமான நிலைய ஓடு பாதையை விஸ்தரிக்க அமைக்க மேலும் நிலம் வேண்டும் எனவும் எண்ணத் தேவை கிடையாது. ஏனெனில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது 2000 மீற்றர் ஓடுபாதை கை வசம் உள்ளபோதும் 400 மீற்றர் ஓடுபாதையானது கல் மட்டும் போடப்பட்டு சீர் செய்யப்பட்டபோதும் ஓடுபாதையாக சீரமைக்கப்படவில்லை. அதனை சீர் அமைப்பதற்கு இன்றுள்ள நிலையில் வெறும் 4 மாதங்களே போதுமானது. ஆகவே ஓடுபாதை நீளத்தை அதிகரிப்பதில் சிரமங்கள் இருக்க முடியாது என்று அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இருந்தபோதும் அந்த பாதையை சீரமைப்பதற்கான செலவீனத்தை பொறுப்பேற்க அல்லது வழங்கி உதவ முன்வந்த இந்தியா ஏன் அப்பணியை நிறைவேற்றவில்லை மற்றும் ஏ.ரி.ஆர் 72 ரக விமானத்திற்குப் பதிலாக எயார்பஸ் ஏ320 ரக விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட இந்தியா ஆக்க பூர்வமான நடவடிக்கையை ஏன் முன்னெடுக்கவில்லை, அதற்கு என்ன தடை என ஆராய்ந்தபோது மேலும் ஒரு உண்மை புலப்பட்டது.
யாழ்ப்பாணம் சென்னைக்கான விமான சேவையில் ஈடுபடும் விமானத்தின் அளவை அதிகரித்து 150 பயணிகள் பயணிப்பதற்கு ஓடுபாதை புனரமைப்பு பணியில் உள்ள இடையூறு அல்லது கால தாமதத்தினை விடவும் பயணிகளிற்கான தரிப்பிட வசதிகளை அமைப்பதில் நெருக்கடி காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அதாவது தற்போது 55 பேர் பயணிப்பதனால் ஒரே நேரத்தில் விமான நிலையத்தில் 110 வரையானோர் தங்கி நிற்கின்றனர். இதற்குப் போதுமான இடவசதிகளே காணப்படும் நிலையில் 150 பேர் பயணிப்பதானால் ஒரே தடவையில் 350 பேர் தங்கி நிற்கும் வசதிகொண்ட அலுவலக, தரிப்பிட வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த விஸ்டரிப்பிற்கு பெரும் தடையாக உள்ளது. அதற்கான பொருளாதர வளங்கள் இலங்கை அரசிடம் இல்லை என்பதை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், யாழ்ப்பாண விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிதி உதவிகளை வழங்க தாம் சித்தமாக இருப்பதாகவும், அங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளிக்கு நிதி வழங்குவதில் நெருக்கடிகள் ஏதுமில்லை என்று இந்திய வெளிப்படையாக தெரிவித்துள்ளது. இருந்தும், ஏன் விரிவாக்கப் பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது என்பதற்கான பதில் இலங்கை தரப்பில் இல்லை.
பலாலி விமான நிலையத்தில், 350 பேர் தங்கி நிற்கும் இடவசதிக்கான கட்டிட அமைப்பிற்கான நிதியினையும் வழங்க இந்தியா தயாரானபோதும் இலங்கை தரப்பில் அதற்கு இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை என அறியப்படுகின்றது. இதனை இலங்கை அதிகாரிகளும் வடக்கு அரசியல்வாதிகளும் சீர் செய்து வழங்க வேண்டும் என்பதும் தற்போதைய எதிர்பார்ப்பாகவுள்ளது.
ஏனெனில், தற்போது வடக்கு மாகாணம் அல்ல யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை பயணிப்பவர்கள்கூட விமான கட்டணம் மற்றும் அத்துடன் இணைந்த பொதிகளின் எடை ஆகியவற்றை மனதிற்கொண்டே விமான சிட்டைகளை வேண்டுகின்றனர் என்று விமான சிட்டை முகவர்கள் கூறுகிறார்கள். யாழ்பாணம்-சென்னை மற்றும் கொழும்பு-சென்னை விமான கட்டணங்கள் கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளது, ஆனால் கொழும்பிற்கான பொதி அளவு கூடுதால உள்ளது என்பது அனைவராலும் சுட்டிக்காட்டப்படுகிறது. தேவையான அளவிற்கு சென்னையிலிருந்து பொருட்களை கொழும்பு கொண்டுவந்து, அவற்றை பேருந்துகள் மூலம் யாழ்ப்பாணம் எடுத்து வருவது சுலபமானது, பொருளாதார ரீதியாக பயனுள்ளது என்று நான் பேசிய பலர் கூறினர்.
வடக்கு மக்களின் தலைநகரையும், தமிழகத்தின் தலைநகரையும் இணைக்கும் இந்த விமான சேவை மேலும் வலுப்பெற்று பயணிகள் போக்குவரத்து அதிகரித்து, வர்த்தக மேம்பாடுகள் அதிகரிக்க வேண்டுமென்ற என்ற வட மாகாண மக்களின் கனவு நினவாக வேண்டுமென்றால், இலங்கை-இந்தியா இரு நாடுகளும் கூட்டாக ஒரு செயற்திட்டத்தை விரைவாக முன்னெடுக்க வேண்டும். அதுவும் விரைவாக நடைபெற வேண்டும்.
இலங்கையில் அனைத்து துறைகளிலும் கால்பதித்து ஆக்கிரமிப்பு செய்துவரும் சீனாவும் நீண்ட காலமாக பலாலி விமான நிலையத்தை குறிவைத்துள்ளது. இந்தியா உரிய நடவடிக்கைகளை உடனடியாகச் செய்யவில்லை என்றால், சீன அதை செய்ய முன்வரக் கூடும். அதுமட்டுமின்றி, குறைந்த விலையில் போக்குவரத்து சேவைகளை நடத்தும் சீன விமான நிறுவனங்கள், தமது நாட்டின் தெற்கு நகரங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வர்த்த நோக்கத்தை மையமாகக் கொண்டு விமான சேவைகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளது என்று சீன தரப்பு தகவல்கள் கூறுகின்றனர். அபிவிருத்தி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சீனாவிற்கு கொழும்பைவிட யாழ்ப்பாணத்திற்கு அட்களையும், பொருட்களையும் கொண்டுவந்து இறக்குவது ஒப்பீட்டளவில் சுலபமாக இருக்கும். மேலும் மியான்மார், தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து பௌத்தமத சுற்றுலா வருபவர்களும் யாழ் விமான நிலையத்தை எதிர்காலத்தில் பயன்படுத்தக் கூடும். அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் போது சீனா விமான சேவையில் ஈடுபடும் வாய்ப்பு அதிகமுள்ளது என்று விமான் போக்குவரத்து அனுபவஸ்தர்கள் கூறுகிறார்கள்.
எனவே, 100ஆவது சேவையை கொண்டாடி கேக் வெட்டி மகிழ்வதோடு மட்டுமே இந்தியா நின்றுவிடாமல் எதிர்காலத்தில் இரு நாடுகளிற்கும் இடையே கேந்திர ரீதியில் வர்த்தகம் மட்டுமின்றி பாதுகாப்பு தொடர்பான பயணங்களிற்கும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஒரு முக்கிய கேந்திரமாக இருக்கும் என்பதை இந்தியா உணர்ந்து அதற்கேற்ற வகையில் உடனடியாக செயற்பட வேண்டும். அதுவே வட மாகாண மக்கள் மற்றும் இந்தியாவிற்கும் நன்மையைப் பயக்கும் என்பதே யதார்த்தம்.