ஜனாதிபதி ரணிலும் தேர்தல்களும்
Share
வீரகத்தி தனபாலசிங்கம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் எவருமே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று தேர்தல்கள் பற்றி விசித்திரமான கருத்துக்களை வெளியிட்டதாகவோ அல்லது தேர்தல் ஒன்றை நடத்தவிடாமல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையறாது இடையூறுகளைச் செய்ததாகவோ நாம் அறியவில்லை.
ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதியின் ஐக்கிய தேசிய கட்சியும் படுமோசமான தோல்வியைச் சந்திக்கவேண்டிவரும் என்பதைத் தவிர உள்ளூராட்சி தேர்தல்களை அரசாங்கம் விரும்பாததற்கு உண்மையில் முக்கியமான வேறு காரணம் எதுவும் இருந்திருக்க முடியாது. நிதி நெருக்கடியை காரணம் காட்டி இடையூறுகளைச் செய்து அந்த தேர்தல்களை ஆணைக்குழு காலவரையறையின்றி ஒத்திவைக்க நிர்ப்பந்தித்த அரசாங்கம் தற்போது பொருளாதார நிலைவரத்தில் குறிப்பிடத்தக்க மேம்பாடு ஏற்பட்டுவருவதாக பெருமை பேசுகின்ற தருணத்திலாவது தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்க முன்வருமா என்றால் அதற்கான அறிகுறிகளும் இல்லை.
அந்த தேர்தல்களை நடத்துவதற்கு நிதியை தருமாறு மீண்டும் அரசாங்கத்திடம் கேட்பதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது.
ஆனால், ஜனாதிபதி தேர்தலை தவிர, வேறு எந்த தேர்தலைப் பற்றியும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்க அரசியல்வாதிகளோ பேசுவதாக இல்லை. குறிப்பாக, ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள் அடிக்கடி அடுத்த வருட முற்பகுதியில் அந்த தேர்தலை நடத்துவதற்கான வலுலான சாத்தியம் குறித்து கருத்துக்களை வெளியிடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. எந்த தேர்தலையும் எந்த நேரத்திலும் எதிர்கொள்ளத் தயாராயிருப்பதாக கூறும் ராஜபக்சாக்களும் அவர்களது கட்சியின் அரசியல்வாதிகளும் உள்ளூராட்சி தேர்தல்களுக்கு எதிரான இடையூறுகளுக்கு தங்கள் ஒத்துழைப்பை முழுமையாக வழங்கினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பொறுத்தவரை, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக வேறு எந்த தேர்தலையும் நடத்த முன்வரப்போவதில்லை என்பதை புரிந்துகொள்வதற்கு எவரும் அரசியல் நிபுணராக இருக்கவேண்டியதில்லை. உள்ளூராட்சி தேர்தல்களையோ, மாகாணசபை தேர்தல்களையோ அல்லது பாராளுமன்ற தேர்தலையோ நடத்தி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தங்களது பலவீனம் அம்பலமாவதற்கு வாய்ப்பைக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் விக்கிரமசிங்க மிகவும் உறுதியாக இருக்கிறார். எதிர்பாராத விதமாக அரசியல் விபரீதம் எதுவும் ஏற்பட்டுவிடாத பட்சத்தில் இந்த நிலைமையே தொடரும்.
இத்தகைய பின்புலத்திலேயே அண்மையில் நுவரேலியாவில் நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய சட்ட மகாநாட்டில் உரையாற்றிய விக்கிரமசிங்க தேர்தல்களில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக தெரிவித்த கருத்தை நோக்கவேண்டும்.
இளைஞர்கள் உட்பட அதிகப்பெரும்பான்மையான மக்கள் தேர்தல்களில் மாத்திரமல்ல, அரசியல் கட்சி முறைமையிலும் கூட நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றும் அடுத்து வரக்கூடிய தேர்தல் ஒன்றில் சகல கட்சிகளும் சேர்ந்து பெறக்கூடிய வாககுகள் மொத்த வாக்குகளில் ஐம்பது சதவீதத்தை தாண்டப்போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.
உள்ளூராட்சி தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்யும் உயர்நீதிமன்றத்தினதும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினதும் நீதியரசர்களும் அந்த சபையில் விக்கிரமசிங்கவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தவிடாமல் தடுத்து மக்களின் வாக்குரிமையை ஆபத்துக்குள்ளாக்கியிருக்கும் ஒரு ஜனாதிபதி தேர்தல்களில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக எவ்வாறுதான் கண்டுபிடித்தாரோ தெரியவில்லை. ஜனாதிபதி தேர்தலில் மாத்திரம் அக்கறை காட்டுகின்ற வி்கிரமசிங்க மக்களுக்கு அந்த தேர்தலை தவிர மற்றைய தேர்தல்களில்தான் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்று என்று நினைக்கிறாரோ?
விக்கிரமசிங்கவை பொறுத்தவரை, தன்னால் வெற்றிபெறமுடியாது என்று நம்பிய எந்த தேர்தலையும் தவிர்த்த ஒரு வரலாற்றைக் கொண்டவர். இரு ஜனாதிபதி தேர்தல்களில் முதலில் சந்திரிகா குமாரதுங்கவிடமும் அடுத்து மகிந்த ராஜபக்சவிடமும் தோல்வி கண்ட அவர் அதற்குப் பிறகு ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடவே இல்லை.
இரு ஜனாதிபதி தேர்தல்களில் மகிந்தவுக்கு எதிரான எதிரணியின் பொதுவேட்பாளர்களை ஆதரித்த விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை எதிர்த்து சஜித் பிரேமதாசவே களமிறங்கினார்.
ஐந்து தடவைகள் பிரதமராக பதவி வகித்த விக்கிரமசிங்க ஒரு தடவையேனும் முழுமையாக பதவிக்காலத்தை நிறைவு செய்ததில்லை. இலங்கையில் நீண்டகாலம் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தவர் என்ற ‘பெருமைக்கு ‘ உரியவரான அவரைப் போன்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னைய எந்தவொரு தலைவரும் நீண்டகாலம் தலைமைப் பொறுப்பில் இருந்ததில்லை ; அது மாத்திரமல்ல உட்கட்சி கிளர்ச்சிகளை எதிர்நோக்கியதுமில்லை
சுமார் மூன்று தசாப்த காலமாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்துவரும் அவர் இறுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூட வென்றெடு்க்க முடியாத ஒரு கட்சியாக அதை வரலாற்றுத் தோல்விக்கு வழிநடத்தினார். அதிர்ஷ்டவசமாக கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை பயன்படுத்தி அதுவும் பத்து மாதங்கள் கழித்து அவர் பாராளுமன்றத்துக்கு வந்ததற்கு பின்னரான நிகழ்வுகள் அண்மைக்கால வரலாறு.
இத்தகைய கடந்த காலத்தைக் கொண்ட அவர் தன்னிடமிருந்து மூன்று தசாப்தங்களாக நழுவிக்கொண்டிருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ராஜபக்சாக்களின் உதவியுடன் பாராளுமன்றத்தின் மூலமாக வசப்படுத்திக்கொண்ட பிறகு மீண்டும் மக்களின் ஆணையைப் பெற்று ஜனாதிபதியாக வரும் எதிர்பார்ப்புடன் தனது அரசியல் வியூகங்களை வகுத்துவரும் நிலையில் தேர்தல்களில் மக்களுக்கு நம்பிக்கையில்லை என்று கூறி தன்னை ஒரு பொருந்தாத்தன்மைக்கு ஆளாக்கியிருக்கிறார்.
இலங்கை வரலாறு காணாத கடந்த வருடத்தைய அறகலய கிளர்ச்சிக்கு பிறகு நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கக்கூடிய சிந்தனை மாற்றத்தையும் அந்த கிளர்ச்சிக்கு பின்னரான அரசியல் நிலைவரங்கள் குறித்த மக்களின் மனநிலையையும் அறிந்துகொள்வதற்கான ஜனநாயக மார்க்கம் தேர்தல் ஒன்றேயாகும். அதை செய்து காட்டுவதற்கு தனக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பமான உள்ளூராட்சி தேர்தல்களையே தடுத்த அரசாங்கத்தின் தலைவர் மக்கள் தேர்தல்களில் நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறுவது அறவே பொருத்தமற்றது.
மக்கள் அரசியல் கட்சி முறைமையின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என்ற அவரின் கூற்றை மக்கள் பாரம்பரிய அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவே உண்மையில் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.
இலங்கையின் முக்கியமான ஒரு அரசறிவியல் நிபுணரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட அண்மையில் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியதைப் போன்று பழைய பாரம்பரிய கட்சிகளில் நம்பிக்கை இழந்த மக்கள் புதிய அரசியல் சக்திகளை அடையாளம் கண்டு அதிகாரநிலைகளுக்கு கொண்டுவருவதற்கு இருக்கக்கூடிய ஒரே ஜனநாயக வழி தேர்தல்களேயாகும். பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி அவற்றுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதை விடுத்து நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் மக்களின் ஜனநாயக அபிலாசைகளை மதிக்கவேண்டிய பொறுப்பை உணர்ந்தவராக விக்கிரமசிங்க நடந்துகொள்ளவேண்டும்.