LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடக்கில் மூடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள்

Share

(22-06-2023)

வடக்கில் சுமார் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் (21.06.2023)பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

வெற்றிடம் என்ற விடயம் கனகராயன்குளம் மகா வித்தியாலயத்திற்கு மட்டும் உள்ள பிரச்சினை இல்லை. வடக்கு, கிழக்கில் பல இடங்களிலும் காணப்படுகின்ற ஒரு பிரச்சினையாகும்.

வடக்கை பொறுத்த வரை சுமார் 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையினால் மூடப்பட்டிருக்கின்றது.

இதற்கு காரணம் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கியிருக்கின்றமையும், பிறப்பு வீதம் குறைந்து செல்வதுமே ஆகும்.

இதே நிலை மட்டக்களப்பில் 07 வருடங்கள் அரச அதிபராக கடமையாற்றும் போதும் ஏற்பட்டது.

இதற்கு காரணமாக பிறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றமை மற்றும் 01ம் வகுப்பிலே மாணவர்களை அனுமதிப்பதில் சில பாடசாலைகளில் பூச்சிய மட்டத்தில் காணப்படுகின்றதாகவும் பிரதேச செயலாளர்களால் அப்போது தெரிவித்தனர்.

எனவே இந்த விடயங்கள் புலம்பெயர்ந்த சமூகத்தினாலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினாலும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும்.

நாங்கள் வாழ வைக்க வேண்டும் என எண்ணுகின்ற எங்களது சமூகம், இந்த பிரதேசம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதுடன் இச்சமூகத்தை வாழவைக்கும் வழிவகைகளை செய்கின்றவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.

இதேவேளை, சில விடயங்களின் புள்ளிவிபரங்கள் இச்சமூகத்திலே அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இந்த சமூகத்திலே விவாகரத்து அதிகரித்தல், குழந்தை பேறு குறைவடைந்தமை, வயது சென்ற திருமணங்கள் அதிகரித்து காணப்படுதல் மற்றும் குடிபோதை, போதைவஸ்து, தற்கொலை போன்ற பல்வேறு சமூக பிரச்சினைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

எனவே இவற்றை எல்லாம் கடந்து இந்த சமூகம் வாழ வேண்டும் என்றால் புலம்பெயர்ந்த சமூகம் ஆற்ற வேண்டிய பணி நிறைய இருக்கின்றது.

அதேபோன்று சிறிய பணிகளோடு மட்டும் நின்று விடாது இந்த சமூகத்திலே புரையோடிப்போயிருக்கின்ற பல்வேறு உளநல பிரச்சினைகளிற்கும் தீர்வு தேட வேண்டிய காலம் தற்போது நிலவுகிறது.

வெறுமனே உரிமை பிரச்சனையோ, அரசியல் பிரச்சனையோ அல்லாமல் எங்களது பிரச்சினைகள் எது என உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இளைய சமூகத்திடமும், மாணவர்களிடையேயும், சிறுவர்களிடையேயும், குடும்பங்களிடையேயும் புரையோடிப்போயிருக்கின்ற சமூக உளநல பிரச்சினைகளிற்கு தீர்வு காண வேண்டிய தேவையும் அவசரமும் இன்று எங்களிடம் காணப்படுகின்றது.

அதை இங்கே கூடியிருக்கின்ற புலம்பெயர் சமூகங்களும், உள்ளூர் சமூகங்களும் இணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.