வெற்றிகரமான 17வது ஆண்டில் ஏழு வெற்றியாளர்களை கௌரவித்து வரலாற்றில் இடம் பிடித்த உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழா
Share
கனடா உதயன் பத்திரிகை நிறுவனத்தால் 2006ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பெற்று. தனது வெற்றிகரமான 17வது ஆண்டில் ஏழு வெற்றியாளர்களை கௌரவித்து வரலாற்றில் இடம் பிடித்த சிறப்பான விழா என்ற பெயரை தட்டிக் கொண்டது உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழா.
கடந்த 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள மெற்றோபொலிட்டன் கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விருதுகள் வழங்கும் விழாவிற்கு தலைமை வகிக்க ஒலிபரப்பாளரும் சமூகசேவையாளருமான குயின்றஸ் துரைசிங்கம் அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தார்.
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய கல்வி சார்ந்த செயற்பாட்டாளர் ருக்சன் பரா அவர்கள் தனது பங்களிப்பை சிறப்பாகச் செய்திருந்தார்.
மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்கள் லோகன் கணபதி மற்றும் அரிஸ் பாபிகியன். பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட். ரொறன்ரோ நகரசபை உறுப்பினர் ஜமால் மையர்ஸ் மற்றும் மார்க்கம் நகரசபை உறுப்பினர் யுனைற்றா நாதன் பாராளுமன்ற உறுப்பினர் சுவான் சான் அவர்களது பிரதிநிதி ஆகியோர் அரசியல் தளத்தின் சார்பாக கலந்து சிறப்பித்தார்கள்.
உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவின் நிறுவனருமாகிய ஆர். என். லோகேந்திரலிங்கம் நிறுவனர் உரையாற்றினார்.
கவிஞர் புகாரி அவர்கள் தனது கவிதை வரிகளாலும் அதனை சமர்ப்பித்த முறையினாலும் சபையோரின் பாராட்டுக்களைப் பெற்றார்.
கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
தொடர்ந்து விருதுகள் வழங்கும் பகுதி பரபரப்பாக ஆரம்பமாகியது.
இவ்வருடத்திற்குரிய உதயன் தலைமைத்துவ விருதினை சட்டத்தரணியும் சமூகசேவையாளருமான பாக்கியலக்சுமி வாசன் அவர்களும். கலை இலக்கிய மேன்மை விருதினை முன்னாள் கோப்பாய் கிறிஸ்த்தவக் கல்லூரி அதிபரும் எழுத்தாளருமான சின்னையா சிவனேசன் அவர்களும் . உதயன் சமூக நல்லுறவு விருதினை ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான றேமன்ட் சோ அவர்களும். வர்த்தக வெற்றியாளர் விருதினை ஸ்காபுறோ ‘பாபு புளோரிஸ்ட்’ நிறுவன உரிமையாளர் பாபு என அழைக்கப்பெறும் மார்க்கண்டு விஜயகுமார் அவர்களும் ‘இளையோர் அடையாள விருது- ஒன்றாரியோ” என்னும் கௌரவத்தை ஆதவன் கனநாதன் அவர்களும் ‘இளையோர் அடையாள விருது- கியுபெக்” என்னும் இளையவர்களுக்கான கௌரவத்தை கௌரீஸ் சுப்பிரமணியம் அவர்களும் உதயன் வாழ்நாள் சாதனையாளர் விருது- தமிழ்நாடு என்னும் விருதை பிரபல சர்வதேச ஊடகவியலாளர் சிவராமகிருஸ்ணன் பரமேஸ்வரன் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள்.
இந்த வெற்றியாளர்களை மேடைக்கு அழைத்து கௌரவிக்கும் வைபவத்திற்கு விருது விழா வெற்றிகரமாக நடைபெற ஆதரவு வழங்கிய வர்த்தகப் பெருமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் அழைக்கப்பெற்றனர். அவர்கள் அனைவரும் விருதுகளாக வெற்றியாளர்களுக்கு உரிய வாழ்த்துப் பத்திரங்களையும் வெற்றிக் கேடயத்தையும் தனித்தனியாக வழங்கிக் கௌரவித்தனர்.
300 க்கும் அதிகமான அழைக்கப்பெற்ற விருந்தினர்கள் வர்த்தகப் பெருமக்கள் மற்றும் கலை இலக்கிய நண்பர்கள் என அனைத்து தரப்பினர் கலந்து கொண்ட ஒரு வெற்றி விழா என்ற பெயரை இவ்வருடத்தின் உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழா தட்டிக்கொண்டனது என்றால் அது மிகையாகாது.
செய்தி:- சத்தியன் படங்கள்: ரகு போட்டோ ரகுமாறன்
https://www.facebook.com/profile.php?id=100090780639631