மகாஜனக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுகூடல்
Share
குரு அரவிந்தன்
மகாஜனக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியும், நிறுவுனர் நினைவு தினமும் சென்ற சனிக்கிழமை 24 – 6 – 2023 ஸ்காபரோ மக்கோவான் வீதியில் உள்ள மிலிக்கன் பூங்காவில் இடம் பெற்றது. கல்லூரியின் பழைய மாணவர்களான பெற்றோரும் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளுமாகக் குடும்பமாக வந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கோவிட் – 19 காரணமாக ஒதுங்கி இருந்தவர்கள் பலரை மீண்டும் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட தம்பையா தர்மலிங்கம் அவர்களைச் சங்கத் தலைவர் திரு. விஜயகுமார் அறிமுகம் செய்து வைத்தார். இப்போது கனடாவில் இருக்கும் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர்களில் மிகவும் மூத்தவரான இவரது 100வது பிறந்த தினத்தையும் கேக் வெட்டி, பாராட்டுக் கவிதைபாடிப் பழைய மாணவர்கள் கொண்டாடினார்கள். 1923 ஆம் ஆண்டு யூன் மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டியில் பிறந்த இவர் ஆரம்ப கல்வியை அளவெட்டி ஞானோதயா பாடசாலையிலும், அதைத் தொடர்ந்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும், உயர்கல்வியை பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார்.
மிகவும் ஞாபகசக்தியோடு அவர் சொன்ன பழைய கதைகளைப் பழைய மாணவர்களும், இளைய தலைமுறையினரும் மிகவும் ஆர்வத்தோடு கேட்டார்கள். பாடசாலையில் தங்கள் காலத்தில் திரு. சின்னப்பா அவர்கள் அதிபராக இருந்ததாகவும், அங்கு அப்போது ஐந்து வகுப்பறைகளும், ஒரு நூலகமும் இருந்ததாகச் சொன்னார். அக்காலத்தில் தாங்கள் வேட்டியும் சால்வைத் துண்டும் அணிந்து மேற்சட்டை இல்லாமல் பாடசாலைக்குச் சென்றதாகவும், மலேசியாவில் இருந்து வந்த ஒரே ஒரு மாணவன் மட்டும் அரைக் காற்சட்டையும், கோட்டும் போட்டுக் கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டார்.
1994 ஆம் ஆண்டு கனடா வந்ததாகவும், தனக்கு உதவிகள் செய்த ஆசிரியர்களான தம்பு மாஸ்டர், சின்னத்துரை மாஸ்டர், காசிப்பிள்ளை மாஸ்டர், சுந்தரம்பிள்ளை மாஸ்டர் ஆகியோரையும் நினைவு கூர்ந்தார்.
பாதுகாப்பு அமைச்சில் பணி புரிந்தபோது டெல்கி ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறுவதற்காகப் புலமைப்பரிசு பெற்று டெல்கி சென்றதாகவும், அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் அழைப்பின் பெயரில் அவருடன் விருந்தில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார். மகாஜனக் கல்லூரியின் வெள்ளிவிழா, பொன்விழா, பவளவிழா, நூற்றாண்டுவிழா எல்லாவற்றிலும் கலந்து கொண்ட பெருமை பிரதம விருந்தினரான இவருக்கு உண்டு.
பிரதம விருந்தினரின் உரையைத் தொடர்ந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. புவனச்சந்திரன் நிறுவுனர் பற்றி உரையாற்றினார். அதைத் தொடர்ந்து போசகர் திரு. கதிர் துரைசிங்கம், மற்றும் சிறப்புவிருந்தினர் குரு அரவிந்தன் ஆகியோரும் உரையாற்றினார்கள். மழை காரணமாக இளையோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்குக் காலை, மதிய உணவுகள் வழங்கப்பட்டன. செயலாளரின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே முடிவுற்றது.