பேராறுகள் பாயாத வடக்கிற்கு சீனித் தொழிற்சாலை பேராபத்து.
Share
நடராசா லோகதயாளன்
நிலத்தை சீனாவிற்கு வழங்குவார்களா அல்லது சீயன்னாவிற்கு வழங்குவார்களோ என்பதற்கு அப்பால் வவுனியாவில் கரும்புச் செய்கை மேற்கொள்ளும் அளவிற்கு போதிய நீர்வளம் கிடையாது என்பதே தற்போது அங்கே உளள முக்கிய பிரச்சணையாகவுள்ளது.
சீனாவிற்கான கரும்புச் செய்கைக்காக வவுனியா மாவட்டத்தில் மொத்தம் 30 ஆயிரம் கெக்டேயர் நிலம் வழங்குவதற்கான அனுமதியை சில நாட்களிற்கு முன்னர் அமைச்சரவை வழங்கியுள்ளது.
இந்த அமைச்சரவைப் பத்திரத்தினை தேசிய முதலீட்டுச் சபையின் ஊடாக நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அமைச்சரவைக்கு நேரடியாகச் சமர்ப்பித்தார்.
இதிலே தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட சீனவின் முதலீட்டாளர்களின் ஓர் சீனி உற்பத்தி தொழிற்சாலையான சூடெக் தொழிற்சாலையை வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் நயினாமடுவில் 492 ஏக்கர் அல்லது 200 கெக்டேயர் நிலப்பரப்பில் அமைக்கவும் அதற்கான சீனி உற்பத்திற்கு தேவையான கரும்புச் செய்கைக்கு 30 ஆயிரம் கெக்டேயர் நிலம் வழங்கவுமே அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேநேரம் இந்த தொழிற்சாலையின் கரும்புச் செய்கைக்கு வவுனியா மாவட்டத்தின் சகல பிரதேசங்களில் இருந்தும் நிலம் வழங்கப்படுவதோடு அயல் மாவட்டங்களிலும் உள்ளூர் உற்பத்தியாளர்களிற்கு என்னும் பெயரில் மேலும் நிலம் வழங்கவும் அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கமைய வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலும் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிலுமே அதிக நிலங்கள் வழஙகப்படவுள்ளதோடு அயல் மாவட்டமான முல்லைத்தீவிலும் குறிப்பிட்டளவு நிலம் இதற்குள் உள்வாங்கப்படவுள்ளதாக வெளிவரும் செய்தி தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்:
”சீனித் தொழிற்சாலைக்கான நில விநியோகம் தொடர்பிலே ஜனாதிபதியை சில தமிழ் தரப்புக்கள் தனியாகச் சந்தித்ததாகவும் இந்த சீனி உற்பத்தி தொழிற்சாலைப் பிரதிநிதிகள், தேசிய முதலீட்டுச் சபையின் பிரதிநிதிகள் மற்றும் வவுனியா மாவட்ட அரச அதிபர் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே மாதம் 18ஆம் திகதி மேற்கொண்ட இரகசிய கலந்துரையாடலில் ஓர் கட்சியின் பேச்சளார் கலந்துகொண்டமை தொடர்பிலும் பத்திரிகைகளில் செய்தியாக வெளியாகியது. இருந்தபோதும் உள்ளூரில் தலைவர்கள் வாய் திறக்கவில்லை.
இந்த தொழிற்சாலைக்கு நிலம் வழங்கும் தீர்மானம் மேற்கொண்ட அதே அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்த தமிழ் அமைச்சர் தனது முயற்சியால் வனப்பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை இடம்பெறுவது தனது சாதனையாக முகநூலில் பதிவேற்றிய போதிலும் அது தொடர்பில் நீண்ட காலமாகவே குரல் எழுப்பி பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் எமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இ.சாள்ஸ் நிர்மலநாதன் போன்றோர் ஜனாதிபதி வரை மேற்கொண்ட முயற்சிகளை இருட்டடிப்புச் செய்ய முயன்றபோதும் இந்த சீனித் தொழிற்சாலைக்கான நிலங்கள் தொடர்பில் வாய் திறக்கவில்லை. அவ்வாறானால் சீனித் தொழிற்சாலைக்கு நிலம் வழங்கும் விடயத்திற்கு அமைச்சரும் அவரது கட்சியும் ஆதரவளிக்கின்றதாகவே கருதவேண்டியுள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் இந்த விடயத்தைப் பொறுத்தமட்டில் தமிழ் அரசுக் கட்சி இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது என்பதோடு இதற்கான கண்டணத்தை நாம் பகிரங்கமாகவே தெரிவிக்கின்றோம். ஏனெனில் 30 ஆயிரம் கெக்டேயர் அல்லது 72 ஆயிரம் ஏக்கர் நிலம் என்பது ஓர் சாதாரண விடயம் அல்ல. கரும்பு அதிக நீரை உறுஞ்சும் ஓர் பயிர். இதனால் அந்த மாவட்டமே பாலைவனமாக மாறும் அபாயமும் உள்ளது.
இவை அனைத்திற்கும் மேலாக இந்த நிலத்தை வழங்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நேரடியாக செயலபடும் நிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை பல தடவை சந்தித்தபோதும் இது தொடர்பில் இன்றுவரை எந்த தகவலும் தெரிவிக்காதமை எமக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
இவற்றின் அடிப்படையில் அந்த மாவட்ட மக்களுடன் அப் பிரதேச மக்களின் ஒப்புதல் அல்லது பூரண சம்மதம் இன்றி எந்த திட்டத்தை தினிக்க முயன்றாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்”.
இதேநேரம் இது தொடர்பில் நெடுங்கேணி விவசாயிகள் சங்கத் தலைவரான பூபாலசிங்கம் கருத்து தெரிவிக்கையில் ”தற்போது நெற் செய்கைக்கும் தென்னஞ்செய்கைக்குமே போதிய நீர் கிடையாது என்பதோடு இவற்றை யானைகளிடம் இருந்து பாதுகாப்பதே பெரும்பாடாக உள்ளது. இதற்கு மத்தியில் இங்கே பல ஆயிரம் ஏக்கர் கரும்புச் செய்கை என்பது யானைகளை வலிந்து அழைக்கும் நடவடிக்கையாக அமையும் அதாவது வேலியில் போகும் ஓணாணை மடியில் விட்ட கதையாகவே அமையும். யானைகள் கரும்பை விரும்பி உண்ணும் என்பதனால் எந்த வகையிலும் கட்டுப்படுத்தவே முடியாது. இதனால் கரும்பு விளைந்து அறுவடை நெருங்கும்போது விவசாயிகள் அல்லது இதற்காக முதலீடு செய்தவர்கள் தற்கொலை செய்யும் நிலைதான் ஏற்படும்” என்றார்.
இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரான பொ.ஐங்கரநேசன் கருத்து கூறுகையில், “பேராறுகள் பாயாத வடக்கிற்கு இந்த சீனித் தொழிற்சாலை பேராபத்தையே தரும்” என்றார்.
மேலும்,இன்று உலகில் சகல அபிவிருத்தியும் நீர்ச்சுவடை வைத்தே திட்டமிடப்படுகின்றது. இங்கே ஒரு கிலோகிராம் கரும்பை உற்பத்தி செய்ய 210 லீற்றர் நீரும் ஒரு கிலோ சீனியை உற்பத்தி செய்ய ஆயிரத்து 780 லீற்றர் நீரும் தேவை என கணக்கிடப்படுகின்றது, இதுவே கரும்புச் செய்கைக்கான நீர்ச் சுவடையின் குறிகாட்டியாகும் எனவும் ஐங்கரநேசன் விவரித்தார்.
”இன்று வளர்முக நாடுகள் தமது மண்ணை பாதுகாக்கும் நோக்கில் பிற நாட்டில் வேலை வாய்ப்பு என்னும் போர்வையில் இந்த வகையான தொழிற்சாலைகளை அமைக்கின்றனர்.
உணவுத் தாணிய உற்பத்தியை பாதிக்கும் என்பதனை அவர்கள் உணர்ந்துள்ளமை மட்டுமன்றி அனுபவத்திலும் கண்டுள்ளனர். வடக்கில் தற்போது இங்குள்ள சிறு குளங்களை நம்பியே விவசாயம் உள்ளது. சீனியின் பயன்பாட்டை குறையுங்கள் என விளம்பரம் செய்துகொண்டு பாரிய சீனித் தொழிற்சாலையை வடக்கில் அமைக்க முனைகின்றனர். எமது மண்ணில் எத்தனையோ நல்ல திட்டங்களை முன்னெடுக்க முடியும் அதில் குறிப்பாக பனைசார் உற்பத்தி தொழிற்சாலைகளை ஏற்படுத்த முடியும். இத்தொழிற்சாலையை ஆரம்பித்துவிட்டு நீர் இல்லை என மகாவலியை திருப்பி நிலத்தையும் பறிகொடுக்க எமது சில அரசியல்வாதிகளே துணைபோகின்றமை தமது தாயையும் தாரத்தையும் விற்றுப் பிழைப்பதற்கு ஒப்பானது. எனவே மண்ணையும் மக்களையும் நேசிக்கும் எவரும் இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளவே கூடாது” என்று ஆணித்தரமாக வாதிடுகிறார்.
இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் வெறுமனே அபிவிருத்தியை எதிர்ப்பவர்கள் அல்ல. மாறாக தமது வயிற்றுப் பிழைப்பிற்காக எமது மக்களையும் மண்ணையும் விற்றுப் பிழைக்க முனையும் போலி தேசியவாதிகளை இனம் காட்டவும் வேண்டும் என்றார் பொன். ஐங்கரநேசன்.
இது தொடர்பில் செட்டிகுளத்தை சேர்ந்த நயினார் செல்லக்கண்டு தனது கருத்தை பகிர்ந்து கொண்டார்.
”இந்த விடயத்தில் கட்சி அரசியலிற்கு அப்பால் அப்பகுதியின் இருப்பும் அங்கே வாழும் மக்களின் இயற்கை வாழ்வுமே மிக முக்கியமானது. இந்த நிலையில் அந்த மக்களின் வாக்கை அதிகமாக கோருகின்ற ஓர் அரசியல் கட்ணியின் தலைவரும் பிரமுகருமே இதன் பின்னணியில் இருப்பதாக பல தடவை ஊடகங்களில் செய்தி வெளிவந்தபோதும் அவர்கள் வாய்மூடிகளாக இருக்கின்றனர் என்பதனால் சந்தேகம் மேலும் வலுக்கின்றது. வேறு சில அரசியல் கட்சிகளின் தலைவர்களோ சீனாவிற்கு வழங்கி விடுவார்களோ என அஞ்சி எதிர்க்கின்றனர். கரும்புச் செய்கைக்காக சீனாவிற்கு வழங்கினாலும் சரி அது சீயன்னாவிற்கு வழங்கினாலும் சரி அப்பிரதேசத்தின் இயற்கைச் சமநிலை கண்டிப்பாக பாதிப்படைந்தே தீரும். இது தற்காலிகமாக மூன்று ஆண்டு அல்லது ஐந்து ஆண்டு திட்டமாக அமைய மாட்டாது. ஏனெனில் உற்பத்தி தொரிற்சாலைக்கே 200 கெக்டேயர் ஒதுக்கி பல ஆயிரம் மில்லியன் முதலிடப்படவுள்ளதன் மூலம் அங்கே உள்ள அழிவின் ஆரம்ப்ப்புள்ளி தெரிகின்றது.
வன்னியிலே உள்ள பல தொழிற்சாலைகள் ஆண்டுக் கணக்காக மூடப்பட்டுள்ளபோதும் அவற்றை இயக்க நடவடிக்கை எடுக்கவோ அல்லது அதற்கு முதலிட தயார் இல்லாத அரசு எமது பிரதேசத்தின் இயற்கை வளத்தை ஏலமிட முடிவு செய்து விட்டதா என்ற ஐயம் எழுகின்றது. இங்கே நான் இயற்கை வளம் எனக் குறிப்பிடும்போது சிலர் கருதக்கூடும் கரும்பில் என்ன இயற்கை அழிவு என்பர். ஆனால் கரும்புச் செய்கைக்கு மிக அதிக நீர் தேவைப்படும் அதனால் அயலில் உள்ள நீர்களைக்கூட உறிஞ்சும் தன்மை கானப்படும். தற்போது இப்பகுதிகள் மான், மரை, மயில் மட்டுமன்றி முயல், உக்குளான் போன்ற எழில்மிகு விலங்குகளின் வாழ்விடமாகவோ அல்லது நடமாட்டப்பகுதியாகவோ காணப்படுவதனால் கரும்பு ஓர் சுனைத் தன்மை கொண்ட பயிர்ப் பிரதேசத்தை அவைகள் தவிர்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு ஒரு சிறிய பகுதிகளிற்குள் முடக்கப்படும்போது இலகுவில் வேட்டைக்காரரின் கரங்களிற்குள் அகப்படும் ஆபத்தும் ஏற்படும். மாறாக கொடிய விலங்குகளாக கருதப்படும் கரடி, பாம்புகளிற்கு அதிக வாழ்விடங்களாக மாறும் தன்மையும் உண்டு.அப்போது வன விலங்குகளின் சமநிலை கண்டிப்பாக பாதிப்படையும் என்றார்”.