LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ் மக்கள் மீது பௌத்த மேலாதிக்கம் பிரகடனப்படுத்தியுள்ள போர்!

Share

வி.தேவராஜ்

மூத்த ஊடகவியலாளர். 

 

  • மனித துயரத்திலிருந்து அரசியல் இலாபங்களைப் பார்க்கும் அரசியல்வாதிகள்.
  • ‘பௌத்த மேலாதிக்கம்’ மற்றும் ‘காணிக் கொள்ளை போரில்’ இருந்து மக்களையும் மண்ணையும் காப்பாற்றப் போவது யார்?
  • சிங்கள பௌத்தத்திற்குள் கரைந்து போன நிலையிலான மண்ணும் மக்களுமே மிஞ்சுவர்.

 

தமிழர் விவகாரத்துக்கான தீர்வு குறித்த விடயத்தைபேசு பொருளாக்கி‘  வழமை போன்று சிங்களத் தலைவர்களின் பாணியில் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவும் இலங்கை அரசியலில்  ஒரு இனப் பதற்றத்தை சூடாக்கியுள்ளார். சுதந்திர தினத்தின் 75வது வருட கொண்டாட்டத்திற்குள் தீர்வு என்று கூறிய ரணில்விக்ரமசிங்க பொருளாதார நெருக்கடிக்குள் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அவசியமா என்ற பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் கொழும்பில் மாத்திரமல்ல யாழ்ப்பாணத்திலும் தமிழர் விவகாரத்தக்குத் தீர்வின்றியே சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

இறுதியில் தான் மட்டும் தமிழர் விவகாரத்திற்கத் தீர்வு காண முடியாது. சகலரதும் ஒத்துழைப்பும் தேவை என்று தமிழர் விவகாரத் தீர்வுக்கு முத்தாய்ப்பு வைத்தார்.

இந்த அறிவிப்புடன் வெளிநாடு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளி நாட்டுக்களரிக்காகதமிழர் விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார்.சிங்களத் தலைமைகளின் வழமையான பாணியிலேயே ரணில் விக்ரமசிங்க நடந்து கொண்டார்.அதே வேளையில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து பேச்சு வார்த்தைக்கு வர வேண்டுமென்ற கோரிக்கையையும் சிங்களத் தலைமைகளின் பாணியிலேயே முன்வைத்தார். போர் மௌனிக்கப்பட்ட 2009க்குப் பிற்பட்ட காலத்தில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாணியிலேயே ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின் தற்போதைய அணுகுமுறையும் அச்சொட்டாக அமைந்திருந்தது.

இதில் இன்னொரு ஒற்றுமையும் உள்ளது.மகிந்த ராஜபக்ச காலத்தில் தமிழரசுக் கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் கூட்டுக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பேச்சு வார்த்தைக்குச் சென்று பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தி இறுதியில் பேச்சு வார்த்தை ஒரு அங்குலம்தானும் நகரவில்லை என்று தமிழ் மக்களுக்கும் உலகத்திற்கும் கூறினர்.பேச்சு வார்த்தை ஒரு அங்குலம்தானும் நகராத நிலையில் எவ்வாறு பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன என்பது புரியாத புதிராக இன்றுவரை உள்ளது

ஆனால் தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை நடக்காத உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்காகக் காவு கொடுத்த  தமிழரசுக் கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டது. இறுதியில்  பேச்சு வார்த்தை வெற்றி அளிக்கவில்லை என்று பேச்சு வார்த்தையில் இருந்து தமிழரசுக் கட்சி விலகிக் கொண்ட போதும் தற்போது ஜனாதிபதி  சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்..சுமந்திரன் ஜனாதிபதி ஜூலைவரை அவகாசம் கேட்டுள்ளார் அதற்கிணங்க ஜனாதிபதி கேட்டுள்ள கால அவகாசம் வரை பொருத்திருப்பதாக கூறியுள்ளார்.

 

  • தீர்வு இல்லை – புளட்

 

அதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கட்சிகளில் ஒன்றான புளட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தமிழர் விவகாரத்துக்கான தீர்வினை வழங்க சிங்களத் தலைமைகள் முன்வராது என்று அறிவித்துள்ளார்.

புளட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் அவர்களுக்கு இந்த ஞானம் எவ்வாறு உதயமாகியது என்பது தெரியவில்லை. ஆனால் தமிழ் பேசும் சாதாரண மக்களுக்கு இந்த ஞானம் என்றோ உதயமாகிவிட்டது

தமிழ்த் தலைமைகளில் புளட் போன்ற அமைப்புகள் ஆயுதமேந்த ஆரம்ப காலத்தில் இந்த நிலைப்பாடே காரணமாக இருந்தது என்பது பரமரகசியமல்ல. இவர்கள் காலப் போக்கில் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சிங்களத் தலைமைகள் தீர்வினைத் தரும் என்று நம்பி இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் இணைய முயற்சித்ததின் தோல்வியின் எதிரொலியாக இந்த ஞானோதயம் பிறந்திருக்கலாம். அல்லது தமிழர் அரசியலில் தமது எதிர்கால இருப்புக்கான கவசமாக இந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால் சித்தார்த்தன் அவர்கள் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். இந்த உண்மை சிங்களத் தலைமைகளுக்கு ஒன்றும் தெரியாத புரியாத விடயமல்ல.இந்த உண்மைகள் எல்லாம் சிங்களத் தலைமைகளுக்குஎருமை மாட்டில் மழை பெய்வதுபோன்றதுதான்

 

  • அடுத்து என்ன ? – What Next?

 

ஆனால் அடுத்து என்ன என்பதுதான் இன்றைய கேள்வியாகும். தற்போதைய தமிழ்த் தலைமைகள் எவரிடமும் இதற்கான பதிலோ அல்லது அடுத்த கட்ட நகர்வுக்கான திட்டமிடலோ அல்லது  திட்டமோ கை வசம் இல்லை என்பதுதான் உண்மை. 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்த் தலைமைகளின் நிலை இதுதான்.

 

  • மைத்திரி ஏன் யாழ் வந்தார்?

 

யுhழ்ப்பாணத்துக்கு வருகைதந்த சுதந்திரக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிரிசேன அவர்களிடம் 13வது திருத்தம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்குப் பதிலளித் அவர் தாம் தற்போது ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றும் அது குறித்து தற்போது ஆட்சியில் இருப்பவர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13வது திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து நாடாளுமன்றில் அறிவித்தபோது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன ஆளும் தரப்ப இதுபற்றி முடிவு எடுக்க வேண்டுமென கூற முன்வரவில்லை. மாறாக அதிகாரப் பகிர்வுக்கு உள்ளூராட்சி சபை அமைப்பே போதுமானது என குறிப்பிட்டார்.

 

  • சிங்களத் தலைமைகளிடையே தமிழர் விவகாரத்தில் வேறுபாடுகள் இல்லை

 

சிங்களத் தலைமைகள் தமிழர் விவகாரத்துக்கான தீர்வுகுறித்து கொழும்பில் ஒன்றும் தமிழர் பிரதேசங்களில் ஒன்றும் வெளி நாடுகளில் ஒன்றும் கூறுவது வழமையானது. அது ரணில் விக்ரமசிங்கவாகவோ அல்லது மகிந்த ராஜபக்சவோ அல்லது மைத்திரிபால சிரிசேனவாகவோ இருக்கலாம். சிங்களத் தலைமைகளிடையே தமிழர் விவகாரத்தில் வேறுபட்ட நிலைப்பாடகள் இல்லை என்பதைத்தான் இந்தச் சம்பவங்கள் மீண்டும் ஒரு முறை சுட்டிக் காட்டி நிற்கின்றன.

அது மாத்திரமல்ல யாழில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரனுக்கு இறுதி யுத்தத்தின்போது நடந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமக்கு அது பற்றித் தெரியாது என்றவாறு பதில் அளித்துள்ளார். இறுதிக் கட்ட போரின்போது அவ்வேளையில் ஜனாதிபதியாகவும் பாதுகாப்பு அமைச்சருமான மகிந்த ராஜபக்ச வெளிநாடு சென்றிருந்த நிலையில் பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றியவர் மைத்திரிபால சிரிசேன அவர்களாகும்.இறுதிக்கட்ட போர் நிலவரங்களில் மிக முக்கிய விடயங்கள்குறித்து அறியாத நிலையில் பதில் பாதுகாப்பு அமைச்சர் இருந்துள்ளார் என்ற செய்தி மூலம் அவர் கூற முன் வருவது அனைத்தையும் அவ் வேளையில் பாதுகாப்பு செயலாளராகப் பதவி வகித்த கோத்தாபய ராஜபக்ச மேற் கொண்டார் என்பதை சுட்டுவதாக உள்ளது. இதே பாணியில்தான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல்குறித்தும் பதில் அளித்து இறுதியில் நீதிமன்ற தண்டனையை எதிர் நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • சிங்களத் தலைமைகளின் இரட்டை வேடம்.

 

இதில் விசித்திரம் என்னவெனில் இந்த இரட்டை வேடத்தை தமிழர் மண்ணில் கேள்வி கேட்க யாரும் இல்லாது போய்விட்டனரே என்பதுதான்.

அது மாத்திரமல்ல நாட்டின் பொருளாதார நெருக்கடிகளையும் மேவிய நிலையில் தமிழ் மக்கள் மீது மரபுரிமைப் போரினை பௌத்த மேலாதிக்கம்  பிரகடனப்படுத்தியுள்ளது.

 தமிழர் தாயகத்தை பௌத்த விகாரைகளும் சிங்களக் குடியேற்றங்களும் ஆக்கிரமித்து நிற்கின்ற வேளையில் முன்னாள் ஜனாதிபதியின் யாழ் வருகை மூலம் தமிழ் மக்களுக்கு தெற்கில் இருந்து கொண்டுவந்த செய்தி என்ன என்பதுதான் இன்றைய கேள்வியாகும்

ஆதிகாரப் பகிர்வுக்கு மாகாண சபைகள் அல்ல உள்ளூராட்சி சபைகளே போதுமானது என நாடாளுமன்றில் பிரகடனப்படுத்தும் சுதந்திரக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிரிசேன எவ்வித குற்ற உணர்வோ கூச்சமோ இல்லாமல் ஒன்றும் நடக்காதது போல் தமிழ் மக்கள் முன் தலைகாட்டி நிகழ்வுகளிலும் பங்கேற்று மாலை மரியாதைகளுடன் கொழும்பு திரும்பியுள்ளார்.

 

  • ‘தேர்தலுக்கான’ அரசியல் அரங்கம்.

 

இவை அனைத்தும்தேர்தலுக்கானஅரசியல் அரங்கம் என்பதைத் தவிற வேறு ஒன்றும் இல்லைஇவர்களுடன் இணைந்து இணக்க அரசியல் நடத்துபவர்களுக்கும் தென்னிலங்கைக் கட்சிகள் மூக்கனாங் கயிறு கட்டி வழி நடத்திக் கொண்டிருக்கின்றன. இவர்களின் சுதந்திரம் மூக்கனாங் கயிற்றின் நீள சுற்று வட்டத்துடன் மட்டுப்படுத்தப்பட்டது என்பது இணக்க அரசியல் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.

உண்மையில் இணக்க அரசியல் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகளும் சரி மறைமுக இணக்க அரசியலை நடத்தும் தமிழ்த் தலைமைகளும் சரி அவர்களது பேச்சுக்கள் அறிக்கைகள் எல்லாம் தமிழ் மக்களை உசுப்பேற்றி தேர்தல் நோக்கி தமிழ் மக்களை தமிழ் ஊடகங்களுக்கூடாக வழி நடத்தும் உத்தி என்பதைத் தவிற வேறு ஒன்றும் இல்லை

இந்த ஊடகப் போரினால் பேரினவாதச் சக்திகளின் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டதாக 2009க்குப் பிற்பட்ட தமிழர் அரசியலில் பதிவுகள் ஏதும் இல்லை.

தற்போது தமிழ் மக்கள் பேரினவாத பேரலைக்குள் மூழ்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பௌத்த விகாரைகளாகவும் சிங்களக் குடியேற்றங்களாகவும் தமிழர் பிரதேசங்கள் கரைந்து கொண்டு போகின்றன. இதனைத் தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி தமிழ்த் தலைமைகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்த் தலைமைகள் தேர்தல்களை நோக்கி காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

 

  • இளைஞர்கள் அரசியல்வாதிகளாக வேண்டும்!

 

  • தமிழ்த் தலைமைகள் ஈகோவுக்குளளும்; சுயநலத்துக்குள்ளும் மூழ்கிக் கிடக்கின்றன.மாற்றீடாக இளைஞர்கள் அரசியல்வாதிகளாக வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
  • இதற்கும் அப்பால் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான். இவர்களில் யார் உண்மையான தலைவர்கள்? தமிழ் மக்களுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும்; இறுதிவரை போராடுபவர்கள் யார் என்று அடையாளம் காண முடியாதிருக்கின்றது. தமிழர்களிடம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று பின்னர் சுய நல பாதையில்பயணிக்கின்றனர்.இதனால் மக்கள் எவரையும் நம்பத் தயாராக இல்லை. தமிழ் மக்களுக்காக மூச்சுமுட்ட கத்தி மக்களின் பிரதிநிதியாகி சிங்கள அரசாங்கம் குதிரை ஓட குனிந்து நிற்கின்றனர் என தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
  • மிக அப்பட்டமான தரகு அரசியல் மாத்திரமே நடைபெறுகின்றது என்று கூறும் தமிழ் மக்கள் இவர்கள் தமிழ் மக்களை உருப்பட விட மாட்டார்கள் என்றும் கூறுகின்றனர்.
  • இலங்கை அரசியல்வாதிகள் மக்களின் துன்பங்களை ஆயுதமாக்குவதில் திறமையானவர்கள்இ கைதேர்ந்தவர்கள் என தென்னிலங்கை மக்கள் இன்று வெளிப்படையாகக் கூறத் தொடங்கிவிட்டனர். தமிழ் தலைமைகளும் தமிழ் அரசியல்வாதிகளும் இதற்கு விதிவிலக்கில்லை என்பது தமிழ் மக்களுக்கும் தெரிந்த விடயமே.; 
  • மனித துயரத்திலிருந்து ஏதேனும் அரசியல் இலாபங்களைப் பெற முடியுமா? என்பதுகுறித்தே சிந்தித்து தமிழ்த் தலைமைகள் செயலாற்றிக் கொண்டிருக்கின்றன.; 
  • தங்களின் சலுகைகளையும் அரசியல் அந்தஸ்த்தத்தையும் உயர்த்திக் கொள்வது மட்டுமே அவர்களின் கண்களுக்குத் தெரிகின்றன என்றால் அது மிகையாகாது என்றும் தமிழ் மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பம் சரி தமிழர்கள் சார்பாக உள்ள அரசியல் கட்சிகளும் சரி இதுவரைக்கும் எத்தனைமுறை இந்தியாவுக்குச் சென்று இந்தியப் பிரதமருடன் தமிழர் விவகாரம்குறித்து கலந்துரையாடியுள்ளார்கள். தமிழ்த் தலைவர்கள் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதுடன் சரி.அதற்கு மேல் எதுவும் இல்லை செய்யவும் மாட்டார்கள் என்ற தமிழ் மக்களின் கோபக் கனல் வார்த்தைகளுக்கு தமிழ்த் தலைமைகள் கூறப் போகும் பதில் என்ன?
  • இதற்கும் அப்பால் தமிழ் மக்களின் இருப்புக்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ள இவ் வேளையில் வருந்தத்தக்க விடயம் என்னவெனில் தமிழர் விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் கூட்டாகவோ அல்லது பொது வேலைத் திடத்தினை முன் வைத்தோ செயலில் இறங்கத் தயாராக இல்லை என்பதுதான்
  • அப்படியானால் தமிழ்த் தலைமைகள் யாருக்காக அரசியல் நடத்துகின்றனர் என்றகேள்விக்கு தமிழ்த் தலைமைகள் கூறப் போகும் பதில் என்ன?
  • மொத்தத்தில் தமிழ் மக்கள் மீது பேரினவாதச் சக்திகள் பிரகடனப்படுத்தியுள்ள பௌத்த மேலாதிக்கம் மற்றும் காணிக் கொள்ளை போரில் இருந்து மக்களையும் மண்ணையும் காப்பாற்றப் போவது யார்

சிங்கள இராஜதந்திரம் பொருளாதாரத்தில் தோற்றது என்னமோ உண்மைதான். ஆனால் தமிழர் விவகாரத்தில் தோல்வியை நோக்கிச் செல்வதாகத் தெரியவில்லை. நாட்டைக் கொண்டு நடத்த பணம் இல்லையென தென்னிலங்கைத் தலைவர்கள் வெளி நாடுகளிடம் கையேந்தி நிற்கின்றன. ஆனால் மறுபறம் தமிழர் தாயகத்தில் பௌத்த தூபிகள் அமைக்கவும் தமிழர் காணிகளை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவும் நிதி தாராளமாகச் செலவிடப்படுகின்றன

சிங்கள இராஜதந்திரம் மீண்டும் ஒரு வெற்றியை ஈட்ட சிதறிக் கிடக்கும் தமிழ்த் தலைமைகளே வழி சமைப்பவர்களாக இருப்பர் என்பது மட்டும் உண்மையாகும்

தமிழ் மக்களை வெற்றிப் பாதை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பினை தமிழ்த் தலைமைகள் கொண்டுள்ளன என்பதை தமிழ் மக்களின் சார்பில் நினைவூட்ட விரும்புகின்றோம்

தமிழர் நலன் நோக்கி தமிழ்த் தலைமைகள் பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஓரணியில் திரள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை தமிழத் தலைமைகள் உணர்ந்தாக வேண்டும். இல்லையேல் உங்களுக்கிடையிலானகுடும்பி பிடி அரசியல் சண்டைக்குள்நீங்கள் அரசியல் நடத்தவதற்கும் மக்களும் மண்ணும் இருக்காது. சிங்கள பௌத்தத்திற்குள் கரைந்து போன நிலையிலான மண்ணும் மக்களுமே மிஞ்சுவர்.