மேலும் ஒரு விகாரை – விசனத்தில் தமிழ் மக்கள்
Share
இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைப்பு என்கிற பெயரிலும், தொல்லியல் பூமி என்று அரசால் கூறப்படும் வரையறைகளின் கீழ் நிலங்கள் அபகரிக்கபடுவது அண்மை காலத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறதை காணக் கூடியதாக உள்ளது.
பன்னெடுங்காலமாக குருந்தூர்மலையிலுள்ள ஆதிசிவன் ஐயனார் கோவிலை அண்மித்த பகுதிகளை பௌத்த தொல்லியல் பிரதேசம் என்று கூறி நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த விகாரை ஒன்று அரசு மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் கட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து யாழ்ப்பாணம் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கு எதிராக தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தாலும், பௌத்த பிக்குகள் தமது எண்ணங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
அவ்வகையில் வவுனியா வடக்கு நெடுங்கேகேணி வெடிவைத்தகல்ப் பகுதியில் கச்சல்சமளங்குளம் தமிழர் பகுதியில் சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை ஒன்று கட்டி முடிக்கப்பட்ட விகாரை சில நாட்களிற்கு முன்னர் திறக்கப்பட்டது.
1980ஆம் ஆண்டு வரை தமிழர்கள் வாழ்ந்து வந்த அந்த பகுதி போரின் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்த சூழலில், சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டு வலிந்த குடியேற்றம் இடம்பெயற்றது. இதையே காரணமாக வைத்து அந்த கிராமத்தை சிங்களமயமாக்கி தொல்லியல் அடையாளம் எனக் கூறப்பட்டு தமிழர்கள் அங்கு மீண்டும் செல்வதற்கு தடுக்கப்பட்டு வந்தனர். அவ்வாறான பகுதியிலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டு நிறைவுபெற்று திறப்புவிழா இடம்பெற்றுள்ளதோடு அநுராதபுரத்தில் இருந்தும் மெருமளவு பௌத்த துறவிகள் பாத யாத்திரையாக அங்கு வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டம் குறுந்தூர்மலையில் உள்ள தொல்லியல் இடத்தில் நீதிமன்ற உத்தரவினையும் மீறி இராணுவத்தினரின் துணையுடன் விகாரை அமைத்த கல்கமுவ சந்தபோதி தேரரே தற்போது வெடிவைச்சகல்ப் பகுதியில் புதிய விகாரையினையும் அமைத்துள்ளார்.
இந்த விகாரை அமைக்கப்பட்ட பகுதி அருகே இருந்த இரு குளங்களை பாரிய அளவில் புனரமைத்து அப்பகுதியில் இரகசிய சிங்கள மயமாக்கலை மேற்கொண்ட சமயம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் தமிழ் அரசுக் கட்சியின் பதில் செயலாளருமான ப.சத்தியலிங்கம் அப்பகுதிக்குச் சென்று விடயத்தை வெளிக்கொணர்ந்த போது அநுராதபுரம் மாவட்ட உத்தியோகத்தர்கள் இரகசியமாக அந்த பகுதியில் பணியாற்றியமையும் கண்டுகொள்ளப்பட்டது. இவ்வாறு சர்ச்சைக்குரிய இடத்திலேயே தற்போது 462 சிங்கள குடும்பங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அந்த சிங்கள குடும்பத்திலுள்ளவர்கள் வழிபாடு செய்வதற்காகவே இந்த விகாரை நிறுவப்பட்டுள்ளது என்றும் விளக்கமளிக்கப்படுகிறது.