முல்லைத்தீவு மனித புதை குழி அகழ்வு: ”சர்வதேச வல்லுநர்களின் பிரசன்னம் தேவை”
Share
நடராசா லோகதயாளன்
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அச்சம் மற்றும் கவலையை அதிகரிக்கும் வகையில், முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மனிதப் புதை குழியின் முதல் நாள் அகழ்வில் மட்டும் 13 மனித எச்சங்கள் கண்டுடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி கொக்குத்தொடுவாய் மத்தியில் கொக்கிளாய் செல்லும் பாதையில் நீர் வழங்கலிற்கான குழாய்கள் பொருத்துவதற்காக நிலம் தோண்டப்பட்ட நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் சரவணராஜாவின் கட்டளைக்கு அமைய, ஜூலை 6ஆம் திகதி வியாழக்கிழமை அந்த அகழ்வு பணி ஆரம்பித்தது.
முன்னதாக இந்த விடயம் கொக்கிளாய் பொலிசார் ஊடாக முல்லைத்தீவு நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, வியாழன் (ஜூலை 6) முல்லைத்தீவு நீதவான் டி பிரதீபன் மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் நிபுணர், சட்டத்தரணிகள், பொலிசார் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் முன்னிலையில் மனித எச்சங்கள் இனம்காணப்பட்ட பகுதியில் ஆரம்பகட்ட அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
இதன்போதே இந்த 13 தனித எச்சங்களும் மீட்கப்பட்டன. ”இவ்வாறு மீடகப்பட்ட மனித எச்சங்களில் அதிகமானவை பெண் போராளிகளினதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது” என்று அகழ்வு பணி இடம்பெறும் போது அங்கிருந்த, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கனடா உதயனிடம் கூறினார்.
இதேநேரம் குறித்த அகழ்வுப் பணிகள் மாலை நிறுத்தப்பட்டு எதிர்வரும் 13ஆம் திகதி இது தொடர்பான சகல திணைக்களங்களுடன் பேசி அதன் பின்னரே அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது எனவும் அவர் கூறுகிறார்.
குறித்த குழியில் மேலும் பல மனித எச்சங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளன என்று அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் தொல்லியல் திணைக்களமும் பங்குபற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொக்குத்தொடுவாயில் குறித்த அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்திற்கு சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், “இந்த அகழ்வு முறையான வகையில் செய்யப்படுவதாக தெரியவில்லை அவ்வப்போது கிடைப்பவை தடயப் பொருளாக எடுத்து வைக்கப்படுகிறது. ஒரு சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் இது செய்யப்படவில்லை. ஆகவே பல சான்றுகள் இல்லாமல் போகின்ற அபாயம் இருக்கிறது” என்று ஊடகங்களிற்கு தெரிவித்தார்.
மேலும் அங்கு மிகவும் முக்கியமான ஒரு சாட்சியம் கிடைக்கின்றது என்ற அவர், ”அது போர்க்காலத்திலே இடம்பெற்ற சம்பவமாக இருக்க வேண்டும். இராணுவ சீருடைப் போன்ற, தமிழீழ விதலைப் புலிகளுடைய சீருடைப் போன்றும் இங்கு தென்படுகின்றன. விசேடமாக பெண் போராளிகளின் உடல்களாகத்தான் இருக்க வேண்டும். தற்போது ஆண் ஒருவரின் உடலும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆகவே ஐந்துக்கு மேற்பட்ட உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருப்பதை தோண்டி பார்க்கின்றபோது அது மிகவும் அவதானமாக அந்த விடயத்திலே நிபுணத்துவம் உள்ளவர்களுடன் இணைந்து செய்யப்பட வேண்டிய ஒரு விடயம். அப்படி செய்யாமல், இதனை அந்தந்த நேரத்திற்கு ஏற்ப செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயமல்ல என்றார்”.
இந்த அகழ்வுப் பணியின்போது மீட்கப்பட்ட சான்றுப் பொருட்கள் அனைத்தும் தடயவியல் நிபணர்களால் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது. அவை அங்கு பிரசன்னமாயிருந்த சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவாவின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது எறு ரவிகரன் கூறுகிறார்.
இதேநேரம் இப்புதைகுழு அகழ்வு ஆரம்பமானது முதல் பல மனித எஞ்சங்கள் காணப்படுவதான தகவலை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் ஆரம்பத்தில் அனுமதிக்ப்படாதபோதும் பின்னர் அனுமதிக்கப்படனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மனித புதை குழியில் கண்டெடுக்கப்பட்ட உடல் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த எச்சங்களாக இருக்கலாம் என்ற தகவரின் அடிப்படையில் காணாமல் போனோரின் உறவுகள் மத்தியிலும் பெரும் பதற்றம் நிலவுகின்றது.
மனித புதை குழிகள் காணப்படும் இடங்களில் அகழ்வுகள் மேற்கொள்ளப்படும் போது பொதுவாக கனரக வாகனங்களும் இயந்திரங்களும் பயன்படுத்த கூடாது என்பது சர்வதேச வரையறையாகும். ஆனால், கொக்குத்தொடுவாய் பகுதியில் காணப்பட்ட மனித புதை குழி அகழ்வின் போது, அந்த நெறிமுறைகளிற்கு மாறாக, கனரக வாகனங்களும், இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டதை கானொளிகள் காட்டின.
கடந்த மாதம் நான்கு மனித உரிமை அமைப்புகள், இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித புதை குழிகள் தொடர்பில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், எதிர்காலத்தில் இடம்பெறும் அகழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் மற்றும் பரிந்துரைகளை வைத்திருந்தது. ஆனால் அவை எவையும் இங்கு பின்பற்றப்படவில்லை என்று உள்ளூர் மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.