இந்திய சரக்குக் கப்பல் மன்னாரில் தரை தட்டியது
Share
எமது செய்தியாளர்
இந்தியாவிற்குச் சொந்தமான மிகப் பெரும் சரக்குக் கப்பல் ஒன்று மன்னார் பேசாலைப் பகுதியில் தரை தட்டியுள்ளது. ’அதுல்ய’ என்ற பெயருடைய அந்த சரக்குக் கப்பல், மாலைத்தீவிலிருந்து இந்தியவிற்கு பயணித்துக்கொண்டிருந்த போதே நடுக்குடா பகுதியில் பலத்த காற்று காரணமாக இலங்கை கடற்பரப்பை நோக்கி தள்ளப்பட்டது.
இந்திய கரையோரத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அலையில் அடித்து வரப்பட்ட நிலையிலேயே அந்த சரக்குக் கப்பல் பேசாலை கடற்பரப்பில் தரை தட்டியுள்ளது.
இம்மாதம் 6ஆம் திகதி, சென்னையிலுள்ள கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையம், ‘அதுல்ய’ சரக்குக் கப்பலை இழுத்துவந்த இழுவைக் கப்பல் ‘அவத்’ தொழில்நுட்ப பிரச்சனைகளில் சிக்கியுள்ளதாகவும், உதவி கோரி தமக்கு அறிவித்ததாகவும் கொழும்பிலுள்ள அந்த மையத்திற்கு அறிவித்ததை அடுத்து, தமது கடற்படை உதவிக்கு சென்றதக இலங்கை கடற்படை அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
கடற்பரப்பிலிருந்து சுமார் 250 மீற்றர் தூரத்தில் அந்த கப்பல் தரைதட்டியுள்ளது. இதில் பணியாற்றிய 9 பணியாளர்களும் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு கரை சேர்த்துள்ளனர்.
இந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 9 பணியாளர்களில் 4 பேர் இந்தியர்கள் எனவும் ஐவர் இந்தோனேசியர்கள் எனவும. கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
அந்த கப்பல் பேசாலை கடற்கரை பகுதியில் தரைதட்டிய சமயம் அதில் சரக்குகள் ஏதும் இருக்கவில்லை என்றும் அது அடுத்த பயணத்திற்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக காலியக இருந்த நிலையில், இழுத்துச் செல்லப்பட்டது என்று இந்திய கப்பல் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயந்திர கோளாறு காரணமாக பழுதடைந்து காற்றின் சீற்றம் காரணமாக கரையொதுங்கிய அந்த படகு இலங்கை உதவியுடன் சீர் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை கடற்படை கூறுகிறது. அந்த நடவடிக்கை சர்வதேச நியமங்களின் அடிப்படையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’அதுல்ய’ சரக்குக் கப்பலிலிருந்து சுற்றுசூழலிற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எந்த பொருட்களும் இலங்கை கடற்பரப்பில் கலக்கவில்லை என்று கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
அந்த கப்பல் உரிமையாளர்களும், இந்திய கப்பல் கழகத்தின் அதிகாரிகளும் இலங்கை பயணமாகின்றனர்.