LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து படையினர் வெளியேற வேண்டும்: செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்து

Share

எமது யாழ் செய்தியாளர்

தமிழர்களது நிலங்களை சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கமைய ஆக்கிரமித்துள்ள கடற்படை அங்கிருந்து முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வேலணைப் பிரதேச செயளாளர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 29 தனி நபர்களுக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கு அதிகமான காணிளின் சுவீகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி புதன்கிழாஇ வெலுசுமண கடற்படை முகாமிற்கு முன்னால் எதிர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன்:

”தமிழ் மக்களுடைய காணிகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து கடற்படை முகாம் அமைப்பதற்காக நிரந்தரமாக கையகப்படுத்துவதற்காக இங்கு அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எம்மைப் பொறுத்தவரை தமிழரது நிலங்களை சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கமைய ஆக்கிரமித்துள்ள கடற்படை முற்றாக வெளியேற்றப்பட வேண்டும். இந்த மக்களுடைய காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்”.

தீவகப் பகுதியை படையினர் ஆக்கிரமித்த போது குறிப்பாக கோட்டபாய பொறுப்பிலிருந்த காலப்பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டும் மிகக் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டும் ஆங்காங்கே புதைக்கப்பட்டுள்ளனர் என்பது உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் சாட்சி என்றும் அவர் கூறினார்.

”படையினர் இங்கிருந்து வெளியேறுகின்ற போதே புதைகுழிகளைத் தோண்டி உடலங்களை எடுத்து காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை விசாரணை மூலம் கண்டறிய முடியும். இங்கு அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்பட்டு மீள் குடியேற்றம் இடம்பெற்று விட்டது என்று அரசாங்கம் உலகத்திற்குச் சொல்லிக் கொண்டு மறுபுறத்திலே காணி அபகரிப்பு நடவடிக்கைளை தொடர்ந்தும் மேற்கொள்கின்றனர்”.

இலங்கை அரசாங்கத்திடமிருந்து நீதி கிடைக்குமென நம்பிக்கை துளியளவேனும் இல்லாமல் கடந்த 14 ஆண்டுகளாக மக்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி.வருகின்றனர். அதை நிரூபிக்கின்ற வகையிலே தேசிய பாதுகாபாபிற்குரிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ’பச்சை இனவாதி சரத் வீரசேகராவின்’ கருத்தும உள்நாட்டுக்குள் ஒருபொழுதும் நீதி கிடைக்காது என்பதை புலப்படுத்துகின்றது என்றும் செல்வராசா கஜேந்திரன் கூறினார்.

”இன்று மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது இங்கு வந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றால் அரசு தமிழர்களுடைய கருத்துக்களை கணக்கெடுக்கவில்லை என்பதே அர்த்தமாகும். தமிழர்களோடு பேசி சர்வதேசத்தை ஏமாற்றி உதவிகளைப் பெற்று தென்னிலங்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையையே அரசாங்கம் மேற்கொள்கின்றது”.

ஆகவே, வட கிழக்கிலே தமிழர் விவகாரத்திலே நீதித்துறை சுயாதீனமற்றதென மீள மீள நிரூபித்த வண்ணமுள்ளது. இந்த போராட்டங்களூடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடிவதுடன் இம் மண்ணிலே இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். எனவே மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.