LOADING

Type to search

இலங்கை அரசியல்

மனோ சாட்சி | பொங்கு தமிழ்

Share

மனம் திறக்கிறார் மனோ கணேசன்

(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- அத்தியாயம் 15)

பொங்கு தமிழ்

  • புலிகளின் மாவீரர் விழாவிற்கு சென்று, “ஆயுதம் தூக்குங்கள்” என நான் அறைக்கூவல் விடுத்து பேசியதாக ரூபவாஹினி செய்தி ஒளிபரப்பியது. 
  • “ஈழ நாட்டு தமிழ் மக்களே…! ஆயுதம் தூக்குங்கள்!” என்று சொன்னேனாம். 
  • மேடையை விட்டு நான் இறங்கும் போது, படிக்கட்டருகே என்னை பார்த்து சிரித்தபடி அரசியல் துறை நண்பர் புலித்தேவனும், எம்பி நண்பர் கஜேந்திர குமாரும் நின்றனர். 
  • அச்சந்தர்ப்பத்தில் விடுதலை புலிகள், அரசியல், ராணுவ பலத்தில் அதி உச்சத்தில் இருந்தார்கள். அங்கு நடந்தது தமிழ் ஈழத்தை நோக்கிய அவர்களது பயணத்தின் ஒரு அரசியல் நிகழ்வாகும்.
  • “செய்யும் தப்பையும் தப்பில்லாமல் செய்ய தெரியாத அறிவுகெட்ட முட்டாள் நீ” என சமன் குமாரவை தொலைபேசியில் அழைத்து சொன்னேன்.
2009 இறுதி யுத்தம் முடிந்து மகிந்த ராஜபக்ச 2010 ஜனாதிபதி தேர்தலுக்கு தயார் ஆகிய காலம். யுத்தத்தில் பெற்ற வெற்றியை மூலதனமாக வைத்து நாட்டில் பேரினவாத பேரிகை முழக்கிய காலம். 2004 போர் நிறுத்த காலத்தில் கிளிநொச்சி சென்று, நான் புலிகளின் அரசியல் பிரிவு நடத்திய பொங்குதமிழ் நிகழ்வில் கலந்துக்கொண்டு, ஆற்றிய ஒரு உரை காணொளியை, சமன்குமார ராமவிக்ரம என்ற ரூபவாஹினி யுத்த செய்தி ஊடகர், பிழை பிழையாக சிங்களத்தில் மொழிபெயர்க்க, விமல் வீரவன்ச நாடெங்கும் கூட்டங்களில் இன்னமும் திரித்து பேச, சிங்கள மக்களிடம் என்னை “தமிழ் பயங்கரவாதி” என சொல்லி, சொல்லி இவர்கள் பேரினவாத அரசியல் செய்த, காலம்

நான் புலிகளின் மாவீரர் விழாவிற்கு சென்று, “ஆயுதம் தூக்குங்கள்” என்று அறைக்கூவல் விடுத்து பேசியதாகவும், “ஈழ நாட்டின் தமிழ் மக்களே!” என்று விளித்து “இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதத்தை கையில் ஏந்தி, எழுந்து வாருங்கள்.” என்று கூறியதாகவும், அரசாங்கத்தின் சுயாதீன மற்றும் ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசைகளில் செய்தி, அன்றைய ராஜபக்ச ஆட்சி காலத்தில், திரும்ப, திரும்ப ஒளிபரப்பப்பட்டது.

அதை செய்தவர் யுத்தம் நடந்தபொழுது யுத்த அறிக்கைகளை சிங்கள மக்களுக்கு சுட சுட வழங்கி பிரபல்யமான சமன் குமார ராமவிக்ரம என்ற ஊடகவியலாளர் ஆகும்.

உண்மையில் நடந்தது என்ன? நான் பேசியது என்ன? 

நான் போனது பொங்கு தமிழ் விழாவுக்கு ஆகும். பொங்கு தமிழ் என்பது மாவீரர் நிகழ்வு அல்ல. தென்னிலங்கையில் வேண்டுமென்றே இந்த இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்கிறார்கள். 

பொங்கு தமிழ், புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவால் நடத்தப்படும் அரசியல் நிகழ்வாகும்.

போர் நிறுத்த காலத்தில் சட்ட விரோதமற்ற அந்த விழாவிற்கு தென்னிலங்கையில் இருந்து பல அரசியல்வாதிகள் சென்று வந்தனர். ராஜபக்ச அரசாங்கத்தில் அப்போதும், அதற்கு பின்னரும் இருந்த அரசியல்வாதிகள் கூட புலிகளின் அரசியல் பிரிவுடன் தொடர்புகொண்டவர்கள்தான்.

எனவே கிளிநொச்சியில் நடைபெற்ற அந்த ஒரு பொங்கு தமிழ் விழாவில் நானும் கலந்துகொண்டேன். அதற்கு பிறகு ஒருமுறை கிழக்கு மாகாணத்தில் பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்ற பொங்குதமிழ் விழாவிலும் கலந்துகொள்ளுமாறு என்னை அழைத்திருந்தார்கள்.

சர்ச்சைக்குள்ளாகியது கிளிநொச்சி விழாவில் நான் ஆற்றிய உரையை சமன் குமார திரித்து சிங்களத்தில் தப்பு தப்பாக சொன்னதாகும்.

“ஈழ நாட்டு தமிழ் மக்களே…! ஆயுதம் தூக்குங்கள்! புலிகளை ஆதரியுங்கள். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தூக்குங்கள்!” என்று நான் புலிகளின் மேடையில் ஏறி மாவீரர் நிகழ்வில் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆட்டி (கைகளை உயர்த்தி ஆட்டி பேசுவது எப்போதும் எனது பாணி. அதையும் ஒரு காரணமாக தென்னிலங்கை சிங்கள அரசியல் வாதிகள் பேசினார்கள்.!) பேசியதாக, சமன் குமார எனது தமிழ் பேச்சை திரையில் காட்டி பின்னணியில் சிங்களத்தில் கூறும் பொழுது சிங்கள மக்கள் மத்தியிலே சர்ச்சை ஏற்படுவது சகஜம் தான். 

ஆனால் இந்த “தப்பு” என்பதை தப்பில்லாமல் செய்வதற்கு இந்த சமன் குமாரவிற்கு “துப்பு” இருக்கவில்லை. ஏனெனில் எனது தமிழ் பேச்சை, மௌனித்து (Mute) முடக்காமல், நான் பேசும் என் காணொளியை ஓட விட்டு, பின்னணியில் அவர் சிங்களத்தில் (Voice Over) குரல் கொடுக்கிறார்.  

உண்மையில் புலிகளின் பொங்கு தமிழ் மேடையில் ஏறி நான் என்ன பேசினேன்?

“இன்னமும் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ தயராக இருக்கின்றோம்.  இந்நாட்டிலே சிங்கள தேசியமும், தமிழ் தேசியமும் இணைந்து ஒரே வட்டத்திற்குள்ளே வாழ்வதற்கு இன்னமும் இடம் இருக்கின்றது. ஆனால் ஒரே நிபந்தனையாக இரண்டுக்கும் இடையில் சமத்துவம் நிலவ வேண்டும். எம்மை அரவணைத்துக்கொண்டு, சமத்துவமாக வாழ சிங்கள தேசம் தயாராக இல்லாவிட்டால் நாம் தனித்து, பிரிந்து செல்வோம், அதைத்தவிர வேறு வழியில்லை என்ற செய்தியைத்தான் இந்த நிகழ்வு உலகிற்கு சொல்கிறது என நான் நினைக்கிறேன். ” 

இதுவே எனது பேச்சின் சாராம்சமாக இருந்தது. இதை இப்போதுகூட நான் பேசுவேனே.! 

எனக்கு ஞாபகம் இருக்கின்றது. இதை பேசிவிட்டு மேடையை விட்டு நான் இறங்கும் போது, மேடை படிக்கட்டின் அண்மையில் என்னை பார்த்து சிரித்தபடி புலித்தேவன் நின்றுகொண்டிருந்தார். அவர் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவின் முக்கியஸ்தர். 

அவருடன் கூடவே அங்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், இன்றைய எம்பி நண்பர் கஜேந்திர குமார் பொன்னம்பலமும் நின்றார்.  இருவரும் உரையாடிக்கொண்டு இருந்தனர்.

இதற்கு முன்னரும் இரண்டு முறை புலித்தேவனை நான் சந்தித்திருக்கிறேன். அவர் எப்பொழுதும் என்னுடன் ஆங்கிலத்தில்தான் உரையாடுவார். 

“Why Annan, we are going on a Tamil National Journey, and you are talking about a United Journey with the Sinhalese” (“ஏன் அண்ணா, நாங்கள் தமிழ் தேசிய பயணத்தில் செல்கிறோம். நீங்கள் சிங்களவர்களுடன் இணைந்த பயணத்தை பற்றி பேசுகின்றீர்கள்?) என்று என்னை பார்த்து சிரித்தபடி கேட்டார்.

நானும் சிரித்தபடி அவர் பக்கத்தில் போனேன். “நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை கூறுகின்றீர்கள், நான் எனது நிலைப்பாட்டை கூறினேன். ஆனால் ஒன்றாக இருப்பதானால் சமத்துவம் இருக்க வேண்டும் என்று கூறினேன் அல்லவா?” என்று கூறிவிட்டு அவரது தோளை தட்டிவிட்டு, கஜேந்திர குமாருக்கும் கையை காட்டிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றேன். 

கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஒன்றும் பேசவில்லை. மெளனமாக இருந்தார்.

உண்மையில் அச்சந்தர்ப்பத்தில் விடுதலை புலிகள், அரசியல், ராணுவ பலத்தில் அதி உச்சத்தில் இருந்தார்கள். அன்று அங்கு நடந்தது அவர்களது தமிழ் ஈழத்தை நோக்கிய பயணத்தின் ஒரு அரசியல் நிகழ்வாகும். கிளிநொச்சி அவர்களது தலைநகரம். 

அன்று, அங்கே, அந்த, அவர்களது மேடையில் ஏறி ஈழத்தை பற்றி பேசாமல் ஐக்கிய இலங்கையை பற்றி நான் மறைமுகமாக பேசி இருக்கின்றேன். அதுவும் தமிழில் பேசியிருக்கிறேன். 

என் பேச்சை புரிந்துகொள்ளக்கூடிய சிங்கள அரசியல்வாதிகள் இருப்பார்களேயானால், உண்மையிலேயே அவர்கள் எனக்கு தேச அபிமானி பட்டம் வழங்கி, இராமநாதனை வண்டியில் ஏற்றி இழுத்து சென்றதை போல, கௌரவப்படுத்தியிருக்க வேண்டும். 

இருப்பினும் இங்குள்ள இனவாத முட்டாள்கள் என்ன செய்கிறார்கள்? எனது பேச்சை திருவுபடுத்தி எனக்கு இனவாத சேறு பூசினார்கள்! 

ஆனால், என் நிலைப்பாட்டையும், நான் அங்கு மேடையில் எதை பேச முடியும் என்பதையும் புரிந்துக்கொண்டு புலிகள் நாகரீகமாகவும், கெளரமாகவும் நடந்துக்கொண்டார்கள். 

ஒரு வேளை நான் தனி தமிழ் ஈழத்தை விரும்பாததை போல், அதற்கு பதிலாக இரு இனங்களுக்கிடையில் அரசியல் சமத்துவத்தை வலியுறுத்தாமலும் இருந்து, முழுமையாக சரணடைந்திருந்தால் என்னை பேரினவாதிகள் போற்றி புகழ்ந்திருக்கக்கூடும். 

ஆனால் என்னால் அப்படி நிபந்தனை இல்லாமல் சரணடைய முடியாது. அப்படியான நிலைப்பாடு எனக்கு இருந்திருந்தால் புலிகளும் அவர்கள் பொங்கு தமிழ் நிகழ்வுக்கு என்னை அழைத்திருக்க மாட்டார்களே?

உண்மையில் மேலே சொன்னதை போல, தப்பை தப்பில்லாமல் செய்வதற்கு அந்த சமன் குமார ராமவிக்ரம என்ற ஊடகவியலாளருக்கு முடியாமல் போனது. 

நான் தமிழ் மொழியில் பேசியதன் ஒலியை மௌனித்து முடக்காமல் (mute) எனது பேச்சையும் காணொளியை பார்ப்பவர்கள் கேட்கும் படியாக ஓடவிட்டு அதன் பின்னணியில்தான் சமன் குமார எனது பேச்சை சிங்களத்தில் மொழிப்பெயர்ப்பதாக கூறி அபாண்டமாக மொழி பெயர்த்திருந்தார். 

உண்மையில் அங்கு ரூபவாஹிணியில் பணி செய்த யாரோ ஒரு செந்தமிழர் (இவரை யாரென தெரிந்தால் சொல்லுங்களேன்..) எனது தமிழ் பேச்சை சிங்களத்தில், சிங்களம் விரும்பும் வண்ணம் மொழி பெயர்த்து கொடுத்திருக்க வேண்டும்.!)

தாம் எதை சொன்னாலும் சிங்களம் நம்பி விடும் என்ற  அளவுக்கு பொது அறிவற்ற, இறுமாப்பு, அகங்கார, ஆணவ, பேரினவாத சிந்தனை. Insult to Intelligence. அறிவுக்கு அவமானம். அவ்வளவுதான்.   

ஆகவே தான் செய்யும் தப்பையும் தப்பில்லாமல் செய்ய தெரியாத அறிவுகெட்ட முட்டாள் சமன் குமார என்று சொன்னேன். பின்னாளில் அவரை தொலைபேசியில் அழைத்து அவரிடம் சிங்களத்தில் இப்படியே சொன்னேன். அதற்கும் அந்த முட்டாள் இனவாதி அசடுவழிய சிரித்தது, தொலைபேசியில் எனக்கு “தெரிந்தது.” 

எனது பேச்சை சமன்குமார பிழை பிழையாக மொழிபெயர்த்தார். ஆனால், அதைவிட விமல் வீரவன்ச நாடெங்கும் பல கூட்டங்களில் இதுபற்றி திரித்து, திரித்து  பேசி, என்னை சிங்கள மக்கள் முன்னிலையில் காட்டி இனவாத அரசியல் செய்தார்.  

இன்றும், எவருக்கும் மேலும் விளக்கம் வேண்டுமென்றால், அவர்கள் யூடியூப் (YouTube) அலைக்கு போய் எனது அந்த சர்ச்சைக்குரிய பொங்கு தமிழ் உரையை காணொளியாகவே பார்க்கலாம். https://www.youtube.com/watch?v=0PPXHBZUs0U

பின்னுரை:

மேலே சொன்ன இறுமாப்பு, அகங்கார, ஆணவ, பேரினவாத சிந்தனை ஓட்டத்துக்கு  முழு அரசியல் தலைமை தந்தது மஹிந்த ராஜபக்ச.! அராஜக தலைமை தந்தது கோதாபய ராஜபக்ச.! கட்சி தலைமை தந்தது பெசில் ராஜபக்ச.! இவர்களுக்கு மேடை ஒலிபெருக்கி விமல் வீரவன்ச.!  

இன்று:

நான் இருக்கும் அதே பாராளுமன்றத்தில், மஹிந்த ராஜபக்ச மெளனித்து போய், “அன்று எப்படி இருந்த நான், இன்று இப்படி இருக்கிறேனே.!” என்று ஏங்கி அறிவிக்கும் சோகம் நிரம்பிய கண்களுடன் அமர்ந்திருக்கிறார்.

உலகிலேயே மிக சிறந்த போர்த்துறை பாதுகாப்பு செயலாளர் என்ற புகழப்பட்டு, 69 இலட்சம் வாக்குகளால் பதவியில் அமர்த்தப்பட்ட கோதாபய ராஜபக்ச, சென்று ஒதுங்க இடமில்லாமல், சொந்த நாட்டிலேயே அகதி வாழ்க்கை வாழ்கிறார். 

பெசில் ராஜபக்ச, பாராளுமன்ற ஆசனத்தையே துறந்து, வெளியேறும் நிலைமைக்கு தள்ளி விடப்பட்டுள்ளார்.        

எதிரணி முன்வரிசையில் அமர்ந்து இருக்கும் எனக்கு பின்னால், இரண்டு வரிசை பின் தள்ளி, எதிரணியில், அரசில் இருந்து விலகி,  ராஜபக்சர்களுடன் முரண்பட்டு, விமல் வீரவன்ச அமர்ந்திருக்கிறார்.          

“டே எப்போதும் இதில் வேகம் வேண்டாம்டா, வேகம் உன்னையும் கெடுக்கும், உன்னைச் சார்ந்தவர்களையும் கெடுக்கும்” என்ற மு. வ. வின் “அகல் விளக்கு” நாவல் வரிகள்தான் ஞாபகம் வருகின்றன..!