LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கை கடல் எல்லையில் இருந்து அதிகமான பகுதி இந்தியாவிற்கு விட்டு கொடுக்கப்பட்டே கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது – எம்.வி.சுப்பிரமணியம்

Share

நாளைய தினம் எமது நாட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்து பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். அங்கே மோடியுடன் கலந்துரையாடி பல தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்திலே எமது மீனவர்களுடைய பிரச்சனையான, இந்திய மீனவர்கள் அத்துமீறி அனுமதியின்றி எமது கடற்பரப்பினுள் உள் நுழைந்து வாழ்வாதாரங்களை அழித்து எமது உடமைகளை சேதமாக்கி செல்கின்ற இந்த பிரச்சினை சம்பந்தமாக இந்திய பிரதமருடன் ஆக்கபூர்வமாக பேசி அதற்கொரு ஆக்கபூர்வமான நிலையான தீர்வை கட்டி தர வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் முன்னைநாள் தலைவரும், அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளருமான எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

1974ஆம் ஆண்டு 1976ஆம் ஆண்டு காலப்பகுதியிலே கொண்டுவரப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலே கச்சதீவானது இரு நாடுகளின் சமரசத்தின் அடிப்படையில் இலங்கைக்கு கிடைத்தது. கச்சதீவு இந்தியாவிற்கு சொந்தமானது என தவறான கருத்தை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பிரித்தானிய அரசாங்கமானது 1947 மற்றும் 1948 ஆகிய காலப்பகுதியில் இரண்டு நாட்டையும் விட்டு வெளியேறியது. அந்த வேளையிலே கச்சத்தீவு எந்த நாட்டிற்கு சொந்தமானது என உறுதியாக சொல்லப்படவில்லை.

அதனால் இடையில் இருந்து அள்ளாடிக் கொண்டிருந்த கட்சதீவை இரண்டு நாடுகளும் உரிமை கொண்டாடின. அந்தச் சந்தர்ப்பத்திலேயே ஒரு பேச்சு வார்த்தை ஏற்பட்டது. அது தனியே ராமேஸ்வரத்திற்கோ அல்லது இந்தியாவிற்க்கோ சொந்தமாக இருந்திருந்தால் அங்கே பேச்சுவார்த்தை வரவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

இவ்வாறு கச்சதீவு யாருக்கு என இரண்டு நாடுகளும் இழுபறி நிலையில் இருந்த வேளை அன்றிருந்த இந்திய பிரதமர் இலங்கை பிரதமருடன் ஒரு பேச்சு வார்த்தையை நடாத்தி, இறுதியாக எமது கடற்பரப்பிலே இருக்கின்ற சர்வதேச எல்லைக்கோட்டிலே கூடுதலான எல்லையை இந்தியா பெற்றுக் கொண்டு கச்சதீவை எமக்கு விட்டுக் கொடுத்தது. இதுதான் அன்று நடந்தது. இதனை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லைக்கோட்டில் இருந்து சரியாக அளந்து பார்த்தால் நடும் தீவுக்கு அண்மையில் தான் கச்சதீவு அமைந்திருக்கின்றது. நெடுந்தீவில் இருந்து இராமேஸ்வரம் வெகு தூரத்தில் உள்ளது.

அந்த ஒப்பந்தத்தை உடைத்து மறுபரிசீலனை செய்து கச்சதீவை கையகப்படுத்த நினைக்கின்றார்கள். அது முற்றிலும் ஒரு தவறான விடயம். கச்சதீவு இன்றைக்கல்ல அது என்றைக்குமே இலங்கையின் சொத்து. இந்தியாவில் உள்ள ஒரு அமைப்பின் ஊடாக உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, கச்சதீவை மீளப் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இது நிறுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.