அருங்காட்சியகத்தில் 23 தமிழ் மன்னர்களுக்கு சிலை வைத்து வரலாற்றை பொறித்த வேளை விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டேன்
Share
– ஆறு. திருமுருகன் பகிரங்கம்
வரலாற்று அடையாளங்களை சரியாகப் பேணாவிட்டால் அதை புனைவதற்கு ஒரு அணி தயாராகவுள்ளது என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.
16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழாவில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலங்கள் பற்றி எமக்கிருக்கின்ற சான்றாதாரங்களாக இலக்கியங்களும் தோரண வாயில் போன்ற சான்றுகளும் இன்றும் எம் கண்முன்னே இருக்கின்றன.
யாழ்ப்பாண வைபவ மாலையில் ஆண்ட மன்னர்கள் கோயில்களை எவ்வாறு கட்டினார்கள் என்பதை ஆராய்வதற்கு உதவியாக உள்ளது.
கடைசி மன்னனான சங்கிலி மன்னன் வீழ்ந்த காலத்திலிருந்து நாம் இடப்பெயர்வுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றோம். தமிழ் மன்னன் என்று வீழ்ந்தானோ அன்று முதல் எங்கள் இனம் சுதந்திரமின்றி விடிவின்றி ஓடிக்கொண்டிருக்கின்றது.
மொழிக்காக இனத்திற்காக பண்பாட்டிற்காக பலர் தமது உயிரையும் வாழ்வையும் அர்ப்பணித்தனர். எனவே அடையாளச் சின்னங்களை நாம் காப்பாற்றவில்லையெனின் அது துர்ப்பாக்கிய நிலைக்குரியது.
எம் மத்தியில் பல வரலாற்று அடையாளச் சின்னங்கள் காணப்பட்டாலும் அதை அறியாமல் பலருள்ளனர். யமுனா ஏரிக்கு அண்மையிலே நல்லூர் ஆலய அத்திவாரம் காணப்பட்டது. ஆனாலும் இன்று அங்கு தேவாலயம் எழுந்து நிற்கின்றது.
35 ஆண்டுகளாக சேர்த்த தொன்மைப் பொருட்களை பாதுகாக்க அருங்காட்சியகங்களை அமைக்க அரசியல் தலைவர்கள் உட்பட பலரிடம் உதவி கோரிய போதும் யாரும் முன்வரவில்லை. இறுதியில் பாரிய முயற்சியில் நாவற்குழியில் அரும்பொருட்காட்சியகம் அமைக்கப்பட்டது.
அங்கு 23 தமிழ் மன்னர்களுக்கு சிலை வைத்து வரலாறுகளைப் பொறித்தோம். அதற்காக பல முறை யார் அந்த மன்னர்கள் எனவும் எங்கிருந்து நிதி பெறப்பட்டதென விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்.
மரபுரிமைச் சொத்து அரசியலுக்கானதல்ல இனத்திற்கானது. வரலாற்று அடையாளங்களை சரியாகப் பேணாவிட்டால் அதை புனைவதற்கு ஒரு அணி தயாராகவுள்ளது. எனவே வரலாற்று தொன்மைகளைப் பாதுகாக்க அனைத்து கல்விமான்களும் முன்வர வேண்டும் – என்றார்.