முல்லைத்தீவு நீதிபதியை அவமதித்த சரத் வீரசேகரவின் கருத்துக்கு சிறீதரன் எம்.பி. கடும் கண்டனம்
Share
எமது யாழ் செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா அவர்கள், கடந்த 2023.07.04 ஆம் திகதி தனது கடமை நிமித்தம் குருந்தூர்மலைக்கு விஜயம் செய்திருந்தபோது தெரிவித்த கருத்துகளை மேற்கோள்காட்டி 2023.07.07 ஆம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றிய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சருமான சரத்வீரசேகர, தமிழ் நீதிபதிகளின் அதிகாரப் பரப்பைக் கேள்விக்குட்படுத்தியுள்ளமை கடும் கண்டனத்திற்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற கட்டளையை மீறி இராணுவ உதவியுடன் பௌத்த பிக்கு ஒருவர், தமிழர்களின் பாரம்பரிய பூமியான குருந்தூர்மலை பகுதியை ஆக்கிரமித்து அங்குள்ள ஆதிசிவன் ஐயநான் கோவிலுக்கு அருகில் பெரிய பௌத்த விகாரை ஒன்றை கட்டியுள்ளார். அந்த கோவிலுக்கு தமிழர்கள் சென்று தமது வழிபடுவதற்கும் பொலிசாரும், இராணுவமும் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களிற்கு முன்னர் கூட அங்கு பொங்கல் வைத்து வழிபடச் சென்ற தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
இப்படியான சூழலில் இவ்வாரம் செவ்வாய்க்கிழமை (18) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உரையில் மேலும் கூறியுள்ளதாவதது.
”தமிழ் நீதிபதிகள் தமது அதிகார வரம்புக்குட்பட்டு நியாயமான தீர்ப்புகளை வழங்கமுடியாதென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவின் கருத்துகள் சரியானவை என்றால், இந்தநாட்டின் நீதித்துறையை முழுமையாக சிங்களமயப்படுத்தப் போகிறீர்களா”? என்று கேள்வி எழுப்பிய சிறீதரன், உரிய அதிகாரங்கள் தடுக்கப்பட்டு, தமிழ் நீதிபதிகளும், நீதிமன்றத் தீர்ப்புகளும் தொடர்ச்சியாக அவமதிக்கப்படுகின்றமை இந்த நாட்டின் அகோரமான இனவாதச் செயலாகவே தென்படுகிறது என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.
நூற்றி இருபது ஆண்டுகளிற்கு முன்னரே குருந்தூர் மலைப் பகுதியில் ஆதிசிவன் கோவில் இருந்ததையும், அங்கு தமிழர்கள் விழிபாட்டில் ஈடுபட்டனர் என்பதையும் அவர் ஆதாரங்களுடன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.
”கடந்த 04ம் திகதி குருந்தூர் மலைக்குச் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தலைமையிலான இனவாதக் குழுவினரும், குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த 14ம் திகதி பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்ட பொதுமக்கள்,குறிப்பாக பெண்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனங்களும் தமிழர்களின் உரிமைகளை மறுப்பதும் அவமதிக்கும் செயலாகும். வழிபாட்டு உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று. 1905ஆம் ஆண்டு குருந்தூர்மலையில் நிகழ்ந்த ஆய்வுகளிலேயே, அம்மலையில் சதுர ஆவுடையாரைக் கொண்ட சிவலிங்கமும், நந்தியும் காணப்பட்டதென மிகத்துல்லியமாக காண்பிக்கும் வரலாறுகளை அடியோடு மறுத்து, அடாத்தாக அவ்விடத்தில் விகாரை அமைத்ததோடு, தமிழர்களின் வழிபாட்டுரிமைகளைப் பறிப்பதும் இன நல்லிணக்கத்தைக் கேள்விக்குட்படுத்தி, இந்த நாட்டின் மிகமோசமான இனவாத முகத்தை தோலுரித்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளது”.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்திற்கு தனது கண்டனத்தையும் அவர் நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார். ”முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா அவர்களின் கருத்துகளை மறுதலித்து, இந்த உயரிய சபையில் சரத்வீரசேகர பதிவுசெய்த இனவாதக் கருத்துகளுக்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்கிறேன் என்றும், தயவுசெய்து இந்த நாட்டின் நீதித்துறையையாவது சுயாதீனமாக இயங்கவிடுங்கள்”
குருந்தூர்மலைக்கு சரத் வீரசேகர விஜயம் செய்த போது, அங்கு ஆய்வில் ஈடுபட்டிருந்த நீதவான் சரவணராஜாவிடம், சில கருத்துக்களை தான் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால், அது ஆய்வுக் கூட்டம் அங்கு அரசியல்வாதிகள் கருத்துக்கூற முடியாது என்று முல்லைத்தீவு நீதவான் மறுத்த நிலையில், அவரிடம் அங்கு கடுமையாக முரண்பட்டார்.
பிறகு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர “இந்த நாடு ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதை அந்த நீதிபதி உணர வேண்டும்” என்று இனவாத ரீதியில் கருத்தை, தமது நாடாளுமன்ற சிற்ப்புரிமையை பயன்படுத்தி தெரிவித்தார். அது கண்டனத்தை தோற்றுவித்தது. சரத வீரசேகர தமது நாடாளுமன்ற சிறப்புரிமையை தவறாகவும் முறையற்ற வகையிலும் பயன்படுத்துகிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.