“அதிகாரங்களைப் பகிர்வதற்கு ரணிலிற்கு அழுத்தம் கொடுங்கள்” மோடியிடம் இலங்கை தமிழரசுக் கட்சி கோரிக்கை
Share
நடராசா லோகதயாளன்.
சமஷ்டிக்கான தமது அர்ப்பணிப்புத் தொடர்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சி, வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடன் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான தனது அர்ப்பணிப்பை முழுமைப்படுத்தும்படி இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தையொட்டி வடக்கு கிழக்கில் இருந்து இந்தியப் பிரதமருக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக தமிழரசுக் கட்சியும் தனது கடித்தத்தை இந்தியத் தூதகரகத்தில் ஒப்படைத்தது. அந்தக் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்களாவன:
”வடக்கு-கிழக்குக்கு பகுதியில் வாழும் தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வு ஒன்றுக்கு உழைக்கும்படி தமிழ் மக்கள் எமக்குத் தொடர்ந்து ஆணை வழங்கியுள்ளார்கள். அது மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தாலும் ”வரலாற்றுத் தாயகம்” என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 40 வருடங்களாக இந்திய அரசு இந்த விடயத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. கௌரவத்துடனும்,சுயமரியாதையுடனும் அமைதியுடனும்,பாதுகாப்புடனும் வாழ்வதற்காக தமிழ் மக்களின் வேணவாவான அரசியல் தீர்வு ஒன்றை அடைவதற்கான இந்திய அரசின் அர்ப்பணிப்புக்கு நாம் நன்றி உடையவர்களாக இருக்கின்றோம்.
தமிழ் மக்களைப் பொரும்பான்மையாகக் கொண்ட வடக்கு-கிழக்கில் எமது அபிலாஷைகளை அங்கீகரிக்கக்கூடிய சமஷ்டிக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட சமஷ்டித் தீர்வுக்கான எமது அர்ப்பணிப்புத் தொடர்கின்றது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின்னர், இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் என்று கருதப்பட்டது. ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட இந்தத் திருத்தம் அதிகாரப் பகிர்வுக்குப் பதில் அதிகாரப் பரவலாக்கத்தையே மேற்கொண்டது. எனது தலைவர்கள் அமர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரத்துடன் நானும் இதுதொடர்பில் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுதியுள்ளோம்.
உத்தேச 13ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்த தவறுகளை நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். அவை சரிசெய்யப்படும் என்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெவர்த்தனவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து உறுதிமொழிகளைப் பெற்றது. ஆனால், அதன் பின்னர், சமஷ்டிக்கான பாதைக்கென உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தம் ஒடுக்கப்படுவதை நோக்கிய நகர்வுகளே இடம்பெற்றன.
மங்களமுனசிங்க அறிக்கை, இந்தியப் பாணியிலான அதிகாரப் பகிர்வு முறையைப் பரிந்துரைத்தது. 13ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்ட ஒருங்குநிரல் அதிகாரங்களை இல்லாது செய்து அவற்றை மத்திக்கும் மாநிலத்துக்கமாகப் பிரிப்பது, பெரும்பாலானவற்றை மாகாணத்துடன் சேர்ப்பது என்று அதில் தெரிவிக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான உச்ச சபை ஒன்றையும் அது பரிந்துரைத்தது. 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்வது அத்தகைய நல்லிணக்கத்தை உருவாக்குவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்தும்.
2012 ஜனவரியில் கொழும்புக்கு வருகை தந்த இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடனான சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதனை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார். அமைச்சர் கிருஷ்ணாவும் அவரது இலங்கை சகாவான ஜி.எல்பீரிஸூம் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில், இலங்கையிள் அரசமைப்பில் உள்ள 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதில் இந்தியாவுக்கு உள்ள அர்ப்பணிப்புத் தொடர்பில் பல சமயங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கு பேச்சுக்கள் ஊடாக அர்த்தமுள்ள அணுகுமுறையை எதிர்பார்க்கின்றோம் என்று இந்திய அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் 2015இல் தாங்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவிப்பது எனது முன்னுரிமை, நான் கூட்டுறவு சமஷ்டியை உறுதியாக நம்புகின்றேன், அதனூடாக மாகாணங்களுக்கு மேலும் அதிகாரங்களையும் வளங்களையும் பகிர முடியும், தேசிய தீர்மானங்களை எடுக்கும் செயற்பாட்டில் அவற்றையும் பங்காளிகளாக்க முடியும் என்று நீங்கள் தெரிவித்தீர்கள்.
இருந்தாலும் இலங்கை அரசு இது தொடர்பான தனது தொடர்ச்சியான உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதுடன் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க மறுப்பதன் மூலமாக 13ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கவும் முயற்சிக்கிறது.
இந்த விடயம், இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு இலங்கை மதிப்பளிக்கின்றதா என்கிற சிக்கலை உருவாக்கியுள்ளது.
தமிழ் மக்களின் பாதுகாப்பு, அடையாளம், ஒரு தேசமாக அவர்களின் இருப்பு என்பன இந்தியாவில் இருந்து குறிப்பாகத் தென்னிந்தியாவில் இருந்து பிரிக்க முடியாதவை என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தமிழ் மக்களின் பாதுகாப்பு ஆகிய இரட்டை நோக்கங்களுக்கான உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் 35 வருடங்களின் பின்னரும் கானல் நீராகவே இருப்பது ஒரு துன்பியலகவுள்ளது.
இந்த பின்னணியில், ஜூலை 21 இந்தியா வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், இனியும் தாமதிக்காமல் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடன் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான தனது அர்ப்பணிப்பை முழுமைப்படுத்தும்படி இந்தியப் பிரதமரான தாங்கள் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்” என்று கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமது நிலைப்பாடு மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்தி இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தை அக்கட்சி பொதுவெளியில் வெளியிட்டும் உள்ளது. 13ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் நிலையான தீர்வு கிட்டாது என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலர் செல்வராசா கஜேந்திரன் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மக்களால் ‘பாண்டவர் அல்லது ஐவர் கூட்டணி’ என்று விமர்சிக்கப்படும் குழுவினரும் இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி அதை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத்துணை தூதரிடம் கையளித்தாலும், அந்த கடிதத்தில் என்ன விடயங்கள் கூறப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை. அது பொதுவெளியில் வெளியிடப்படவும் இல்லை.
அதேநேரம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், “இந்தியாவின் அதன் பிரதமரும் மலையக மக்கள் தொடர்பான விடயங்கள், பிரச்சனைகள், தேவைகள், அபிலாஷைகள் ஆகியவை தொடர்பில் முழுமையாக அறிந்துள்ளதால், மீண்டும் அவருக்கு ஒரு கடிதம் எழுத வேண்டிய தேவை ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படும் தமிழ் கட்சிகள் இந்தியா இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாலும், ரணில் விக்ரமசிங்கவின் புது டில்லி பயணத்தின் போது, பொருளாதார மற்றும் இதர கூட்டுறவு விடயங்களே பிரதானமாக விவாதிக்கப்படவுள்ளதான இலங்கை அரச தரப்பு செய்திகள் கூறுகின்றன. இலங்கையில் இந்தியாவின் முதலீடு, கடும் நெருக்கடியில் உள்ள நாட்டிற்கு மேலும் பொருளாதார உதவிகள், தெற்காசிய பிராந்தியத்தில் பாதுகாப்பு பிரச்சனைகள், சீனாவின் ஆதிக்கம் போன்ற விடயங்களே பேச்சுவார்த்தையில் பிரதானமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் வடபகுதி மீனவர்கள் இந்திய மீனவர்கள் தமது கடல் பிராந்தியத்தில் எல்லைமீறி நுழைந்து மீன்படிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள், போர்க்குற்ற விசாரணைகள், ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தில் பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு ஆகியவை குறித்து எந்த தமிழ் கட்சிகளும் தாங்கள் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.