மொன்றியலில் வீணைமைந்தனின் மூன்று நூல்கள் வெளியீடு – குரும்பையூர் மூர்த்தி
Share
தன்னுடைய 20 வயது சம்பவங்களை 75 வயதில் நிறைந்த அனுபவத்தோடு எழுத்தாளர், வீணைமைந்தன் பண்டைய தமிழ் இலக்கியங்களோடு தொடர்புபடுத்தி எழுதியுள்ளார் – விமர்சகர் பாலசிங்கம் கருணாநந்தன்
கனடா வாழ் எழுத்தாளரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தை நிறுவிய சிலரில் ஒருவருமாகிய வீணைமைந்தனின் மூன்று நூல்கள் கடந்த 30-07-2023 ஞாயிற்றுக்கிழமையன்று மொன்றியால் மாநகரில் வெளியிடப்பட்டன.
இந்த விழா பாரதி தமிழ்ச் சங்க ஆதரவில் மீட்பின் அன்னை மறைத்தள மண்டபத்தில் நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவில் பல எழுத்தாள நண்பர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் ஆகியோர் உரையாற்றினர். திருமதி உமா வேலு தொகுத்து வழங்கிய இந்த நிகழ்வில், மொன்றியல் அருள்திரு முருகன் ஆலய பிரதம குரு வெங்கடேஸ்வர சர்மா தலைமை ஏற்று ஆசி உரையும் தலைமை உரையையும் வழங்கினார். பாரதி தமிழ்ச்சங்க நிறுவுனர், ஆசிரியர் செல்லையா மூர்த்தியின் வரவேற்புரை வழங்க நூல் அறிமுகங்கள் இனிதே நடந்தேறின.
கனடா உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியர் ஆர் என் லோகேந்திரலிங்கம் அவர்களும் யுகம் வானொலி அதிபர், நாடகக் கலைஞர் கணபதி இரவீந்திரன் அவர்களும் ரொரொன்ரோவில் இருந்து வருகை தந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
’தமிழ் சினிமாவில் பாரதியார் பாடல்கள்’ என்ற நூலை வியாபார நிறுவுனர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் திருமதி இளவரசி இளங்கோவன் அறிமுகம் செய்து வைத்தார். ‘மண்ணும் மனசும்’ என்ற நூலை ஆசிரியர். முன்னைநாள் சைவ மகாசபைத் தலைவர் திரு பாலசிங்கம் கருணாநந்தன் அறிமுகம் செய்ய ’மறக்கத்தெரியாத மனசு’ என்ற மூன்றாவது நூலை திரு செல்லையா மூர்த்தி அவர்கள் சுவை பட அறிமுகம் செய்து வைத்தார். நூலாசிரியர் வீணைமைந்தன் கே ரீ சண்முகராஜா அவர்களின் ஏற்புரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
இந்த விழாவில் ‘மண்ணும் மனசும்’ என்ற நூலை திரு பாலசிங்கம் கருணாநந்தன் அறிமுகம் செய்தபோது பின்வருமாறு உரையாற்றினார்
“சண்முகராஜா அவர்கள் கனடாவில் சுமார் 35 வருடங்களுக்கு முன் எனக்கு அறிமுகமானவர். அண்மைக் காலங்களில் இல்லாவிட்டாலும் முன்னய காலங்களில் நீண்ட நேரம் அவருடன் சம்பாசிப்பதில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். அவரை உங்களுக்கு நான் அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், ஒரு வார்த்தை, மற்றவர்களுடைய திறமையை அறிந்து அவர்களை தேவைக் கேற்ப உற்சாகப்படுத்துவது அவரிடம் காணக் கூடிய ஒரு நல்ல குணம் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இது இவருடைய தொலைந்து போன வசந்த காலங்கள் என்ற நூலின் நீடிப்பு அதாவது EXTENTION என்று கூறியிருந்தார். இது இவர் பிறந்து வளர்ந்த காங்கேசந்துறை பிரதேசத்தைப் பற்றியது. நானும் 1956 ஆம் ஆண்டு எனது மாமனார் அமரர் குருநாதபிள்ளை காங்கேசந்துறையில் விதானையாராகக் கடமை புரிந்த போது ஒரு வருடம் நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி பயின்றதால் இந்த நூலில் குறிப்பிடப்பட்ட இடங்கள் எனக்கும் பரிச்சயமானதாக இருப்பதாகத் தோன்றியது. இருந்தாலும் 100 பக்கங்களுக்குக் குறைவாக உள்ள இந்த நூலை விரைவாக வாசித்து முடிக்குமளவிற்கு அது இலகுவானதாக இருக்கவில்லை.
இதில் எதுவும் கற்பனையற்ற உண்மைச் சம்பவங்கள், அசல் மனிதர்கள், நிஜ உணர்வுகள் பற்றியது என அறிகிறேன். தன் மனதுக்குள் காக்கப்படும் இளமைக் கால ஞாபகங்களைத் தொகுத்து தனிப்பட்ட பதினெட்டு சிறு தலைப்புக்களுடன் வழங்கியிருக்கிறார். தன்னுடைய 20 வயதுகளில் நிகழ்ந்த சம்பவங்களை 75 வயது நிறைந்த ஒரு அனுபவ எழுத்தாளர், கவிஞர், விமர்சகருடைய பார்வையில் ஒவ்வொரு சம்பவத்தையும் திருக்குறள், பாரதி பாடல்கள், சிலப்பதிகார வரிகள், திருமங்கையாள்வார் பாடல், பகவத்கீதை, சினிமா பாடல்கள் என்ற வற்றில் ஒன்றுடன் தொடர்பு படுத்தி எழுதியிருக்கிறார்.
எனது அபிப்பிராயத்தில், ஒரு மனிதனின் உள்ளுணர்வு உண்மையானது அதற்கு சாதி வேற்றுமை கிடையாது. சாதிக் கட்டுப்பாடு என்பது போலியானது அதற்கு உண்மை முகம் கிடையாது. உதாரணமாக பகிரங்கமாக மது அருந்துபவன் குடிகாரன். குடிகாரன் என்றால் கௌரவக் குறைவு. களவாக மது அருந்துபவன் வெளியில் போலிக் கௌரவம் என்றாலும் உண்மையில் அவனும் குடிகாரனே. சாதி வேற்றுமை / சாதிக் கட்டுப்பாடும் அதுபோல் ஒரு போலித் தன்மையே அன்றி உணர்வுகளுக்கு முன் அவை அர்த்தம் அற்றவை. மற்றவன் என்னை குறைவாக நினைப்பான் என்ற எண்ணத்தில்தான் பலர் சாதிக் கட்டுப்பாட்டை கடைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என நான் நம்புகிறேன்.
யாழ்ப்பாணத்தில் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த சாதி ஆசிரியர் வெறியை ‘வெள்ளையம்மா’, ‘அவள் பெயர் ஆலயமணீ’, ‘கற்பென்னும் திண்மை’, ‘நீரில் விழுந்த நிலா’ என்ற தலைப்புக்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். யாவும் நிஜமே அன்றி கற்பனை அல்ல என்று ஆரம்பத்தில் கூறியதை திரும்பவும் நினைவு படுத்துகிறேன்.
‘பாப்பா பாப்பா கதை கேளு’ என்ற அத்தியாயத்தில் எமது சிறு வயதில் பாட்டிமார் கதை சொல்லிக் கேட்பது ஒரு முக்கியமான அம்சமாக இருந்தது. நல்லொழுக்கத்திற்கான கருத்துக்கள் அக் கதைகளில் புதைந்து கிடந்தன. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எமது தமிழ் சமூகக் குழந்தைகள் அப்படியான அறம் கற்பிக்கும் இதிகாசக் கதைகளை அறியாமல் வளர்ந்து விட்டனர். தற்போதைய பாட்டன் பாட்டி மார்களே, அம்மா அப்பாக்களே உங்கள் குழந்தைகளுக்கு நலல அறம் கூறும் கதைகள் சொல்லிக் கேட்க வையுங்கள். கர்பிணிப் பெண்களே கருவில் வளர்ந்து வரும் சிசுவிற்குக் கேட்பது போல் நல்ல கதைகளை உரத்து வாசியுங்கள்.
மஹாபாரதத்தில் வீரஅபிமன்யு கருவறையிலேயே தாயிடம் கதை கேட்டுச் சிசுவானான். இந்தக் குறைகளை, அறிவுரைகளை தனது குடும்பத்தினருக்கும் சேர்த்துத்தான் ஆசிரியர் கூறியிருக்கிறார்.
‘தாலாடுப் பாடவா’ என்ற தலைப்பில் குழந்தைகளைத் தாலாட்டுப் பாடி தூங்க வைக்கும் பழக்கம் இளம் தாய் மார்களிடம் அற்றுப் போவதை சுட்டிக் காட்டி அதன் முக்கியத்தை உதாரணங்களோடு விளக்கியுள்ளார். புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதை பாலமுரளி கிருஷ்ணா தனது தாயின் வயிற்றில் தான் கருவாக இருந்த போது தாயார் பாடிய பாடல்கள் அவருள் ஜீவிதமாகியது என்று குறிப்பிடுகிறார். இதை விட சினிமாவில் வந்த பிரபலமான, மனோ அவர்கள் பாடிய ‘தூளியிலே ஆட வந்த மாடத்து விண் விளக்கே’;’ போன்ற பல பாடல்களை குறிப்பிட்டு அத்தியாயத்திற்கு மெருகு ஊட்டியிருக்கிறார்”.என்று தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் திரு பாலசிங்கம் கருணாநந்தன் அவர்கள்
ரொரொன்ரோவிலும் வெகு விரைவில் அறிமுக விழா நடக்க இருக்கின்றது. இந்த நூல்களை பெற்று வாசிக்க விரும்புவோர் 438 779 9697 என்ற இலக்கத்தில் எழுத்தாளர் வீணைமைந்தனை தொடர்பு கொள்ளலாம்.