வவுனியாவில் சீனித் தொழிற்சாலை தொடர்பில் ரெலோவிற்குள் மோதல் முற்றுகிறது?
Share
நடராசா லோகதயாளன்
வவுனியாவில் சீன நிறுவனம் ஒன்றின் ஆதரவின் மூலம் முன்னெடுக்கப்படும் சீனித் தொழிற்சாலைக்கான எதிர்ப்பு வலுத்து வருகிறது. அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள் என பல தரப்பினர் அந்த தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த சீனித் தொழிற்சாலை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் வேண்டுகோளிற்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்.
இதையடுத்து, இந்த விடயத்தில் அவரது கட்சிக்குள்ளேயே மோதல் அதிகரித்துள்ளது.
”தனிநாடு கேட்டு சுயாட்சி கேட்டு தற்போது சீனித் தொழிற்சாலை கேட்கின்றோம்” என அக்கட்சியின் விந்தன் கனகரட்னம் கட்சிக்கு எதிராக போர்க்கொடி. தூக்கியுள்ளார்
தமிழ் மக்களின் இன்றைய தேவை விடுதலையே அன்றி சீனியோ சக்கரையோ என்று அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் தனது கருத்தை வெளியிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:
”வடக்கு கிழக்கில் கொண்டு வந்த தொழிற்சாலைகள் அழிவடைந்து இரும்பு திருட்டு இடம்பெறவும், சிங்களக் குடியேற்றத்திற்கு வித்திட்ட சூழலில் நிரந்தர தீர்வின்றி எந்த வகையில் அபிவிருத்தி முதலீடு சாத்தியமாகும்? இன்று எமக்குத் தேவை சீனியோ அல்லது சக்கரையோ அல்ல விடுதலைதான் முக்கியம்” என்றார்.
மறுபுறத்தே மேர்வின் சில்வா வாளுடன் வாரத் தயாராகின்றார் அவருக்கு பாதுகாப்பு வழங்க பாதுகாப்புப் படை தயாராகின்றது. இந்த நேரத்தில் ரணிலிடம்போய் சீனி கேட்பதல்ல எமது பிரச்சணை. காணாமல் போனவர்களிற்கு, அரசியல் கைதிகள் விடயத்திற்கு தீர்வு இல்லை. நாளாந்தம் சிங்களக் குடியேற்றம் இடம்பெறுகின்றது இவைதான் எமது பிரச்சணை. 3 லட்சம் மக்களையும் 50 ஆயிரம் போராளகளையும் பலிகொடுத்துள்ளோம். இந்த நிலையில் எமக்கு சீனியா முக்கியம்? எனவும் அந்த ஊடக சந்திப்பில் விந்தன் கேள்வி எழுப்பினார்.
”கடந்த இரு மாதமாக எங்கு பார்த்தாலும் இந்த சீனித் தொழிற்சாலை பற்றிய பேச்சாகவே உள்ளது. 39 வருட போராட்ட வாழ்க்கையில் எமது கட்சிக்கு ஏறபட்ட அவமான காலமாகப் பார்க்கின்றேன். ஊடகங்கள் இதுவரை எழுதிய விடயம் எல்லாம் மெய் என நிரூபனமாகிவிட்டது” என தனது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
”தனிநாடு கேட்டோம், சுயாட்சி கேட்டோம் தற்போது சீனித் தொழிற்சாலை கேட்கின்றோம். இந்த விடயம் தொடர்பில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெனா, வினோ உட்பட எவருக்குமே தெரியாது. அதேபோல் ஏனைய பங்காளக் கட்சிகளிற்கும் தெரியாது. ஆனால் செல்வம் அடைக்கலநாதன் கேட்ட சீனித் தொழிற்சாலை திட்டத்தை அங்கீகரித்துள்ளேன் என ஜனாதிபதி மக்கள் முன்னாள் கூறியுள்ளார்”.
இது தொடர்பில் யாரோ கொண்டு வந்த திட்டம் அதை நாம் ஆதரித்தோம் என்றே கூறிய செல்வம் அடைக்கலநாதன் இதற்கு யாரும் குத்தி முறியத் தேவையில்லை என்கிறார் விந்தன் கனகரட்னம்.
இந்த விடத்திலே பல கோடி ரூபா பணம் கையூட்டாக வழங்கபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியத என்று கூறிய அவர் இதேநேரம் இத்திட்டத்திற்கான அதிக தொகைப் பணத்தை தாய்லாந்து செலவு செய்யுமா எனபது சந்தேகம், இது சீனாவின் திட்டம் என்கின்றனர் இதற்கு ஏறபாட்டாளர்களே விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.