முல்லைத்தீவில் மேலும் நிலங்களை விடுவிக்க அரசு இணக்கமா அல்லது மக்களை ஏமாற்றும் நாடகமா?
Share
நடராசா லோகதயாளன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காகவும் இருந்த காணிகளையும் பிடித்து வைத்திருந்த வனவள திணைக்களம் அதில் ஒரு தொகுதியை விடுவிக்க இசைந்துள்ளது.
அந்த திணைக்களம் பிடித்து வைத்துள்ளதாக மாவட்டச் செயலகம் கோரிய 20 ஆயிரத்து 543 ஹெக்டேயரில் 9 ஆயிரத்து 311 ஹெக்டேயரை விடுவிக்க திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டத்தில் மக்களிற்கு சொந்தமான தனியார் காணிகளையும் பிரதேச செயலாளரின் ஆளுகையில் இருந்த அரச காணிகளையும் எவரின் அனுமதியோ அல்லது முன்னறிவித்தலோ இன்றி வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டு அபகரித் தொதிருந்தன.
இது தொடர்பில் கடந்த 12 ஆண்டுகளாக எழும் பிரச்சணைக்கு தீர்வுகான அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை தொடர்பில் புதன்கிழமை (16) அன்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர், வனவளத் திணைக்கள அதிகாரிகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் பிரதேச செயலாளர்கள் சகிதம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானத்தை வனவளத் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
இதற்கமைய முல்லைத்தீவில் 9 ஆயிரத்து 311 ஹெக்டேயர் அல்லது 29 ஆயிரம் ஏக்கர் நிலங்களை விடுவிப்பு செய்ய இணக்கம் தெரிவித்த வனவளத் திணைக்களம் மேலம் 17 ஆயிரம் கெக்டேயர் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான தேசிய குழுவிற்கு சமர்ப்பிப்பித்து அவர்களின் அறிவுறுத்தலிற்கு அமைய முடிவை எட்டுவதாக தெரிவித்தனர்.
இதன்போது மாவட்டச் செயலகத்தின் கோரிக்கையை அடுத்து தேசிய குழுவிற்கு பரிந்துரைக்கும் 17 ஆயிரம் ஹெக்டேயரையும் மீண்டும் பார்வையிட்டு அங்கே மக்களின் வாழ்விட அடையாளங்கள் குறித்து பரீட்சிக்க கோரினர்.
இதை இருகிழமைகள் கால அவகாசத்தில் ஆராய்ந்து ஆராய்ந்து அதன் பின்பும் ஓர் கூட்டத்தில் முடிவை அறிவிப்பதாக இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம் முல்லைத்தீவில் 1985ஆம் ஆண்டிற்கு முன்பு 88 ஆயிரத்து 671 ஹெக்டேயர் காடே காணப்பட்டுள்ளது. அது மாவட்டத்தின் மொத்த அளவில் 36.72 வீதமாக உள்ள நிலையில், 2009இற்கு பின்பு 84, ஆயிரத்து 664 கெக்டேயர் நிலம் வனவளத் திணைக்களம் தனது காடாக அறிவித்துள்ளது. இது மாவட்டத்தின் 35.06 வீதமாகும்.
இந்த நிலையில் தற்போது விடுவிக்க இணக்கம் தெரிவிக்கும் 9 ஆயிரத்து 311 கெக்டேயர் நிலம் 3.86 வீதமாகவும் தேசிய குழுவிற்கு சமர்ப்பிக்கும் 11 ஆயிரத்து 232 கெக்டேயரும் 4.65 வீதமான நிலமாகவே காணப்படுகின்றது.
இதனிடையே அந்த மாவட்டத்தில் புதிதாக வர்த்தமானி அறிவித்தல் செய்ய வனவளத் திணைக்களம் பரிந்துரை செய்துள்ள 11 ஆயிரத்து 798.கெக்டேயர் நிலானது 4.89 வீதமாகவுள்ள நிலையில் இது தொடர்பில் அடுத்த கூட்டத்தின் பின்பு ஆராய்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உடனடியாக 20 ஆயிரத்து 543 கெக்டேயர் நிலம் வனவளத் திணைக்களத்தினால் விடுவிக்கப்பட வேண்டும் என மாவட்டச் செயலகம் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.