வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஒன்றிணைத்து எதிர் வரும் 30 ஆம் திகதி மன்னாரில் மாபெரும் போராட்டம்
Share
அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-மனுவல் உதயச்சந்திரா
(மன்னார் நிருபர்)
(23-08-2023)
வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஒன்றிணைத்து எதிர்வரும் 30 ஆம் திகதி மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் புதன்கிழமை (23) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை(30) காலை மன்னாரில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளோம். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மன்னாரில் முன்னெடுக்க உள்ளோம்.
இந்த ஆர்ப்பாட்டமானது மன்னார் ‘சதொச’ மனித புதைகுழியிலிருந்து ஆரம்பித்து பவனியாக மன்னார் நகர சபை பொது விளையாட்டு மைதானத்தை சென்றடையும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி 14 வருடங்களாக நீதிக்காக போராடும் தாய்மார்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ் தேசியத்தில் பணிபுரியும் தமிழ் தேசியத்தை நேசிக்கும் அனைவரும் எங்களுடன் கைகோர்க்க வேண்டும். ஐந்து வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் அனைத்து தரப்பினரும் எங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், காணாமல் போன உறவுகளின் போராட்டத்தை மழுங்கடிக்கும் வகையில் எமது பிள்ளைகளுக்கு மரணச் சான்றிதழ், நஷ்ட ஈடு வழங்க அரசாங்கம் முயல்கிறது.
ஆனால் எமக்கு நீதி வேண்டும். எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கேட்கின்றோம்.
அதனால் தான் இதுவரை இலங்கை அரசை நம்பவில்லை. இனியும் நம்பப் போவதில்லை.
இவ்வாறானதொரு சம்பவம் இலங்கையில் நடை பெறவில்லை என்பதை உலகுக்குக் காட்டவே இந்த அரசாங்கம் உலகத் தரப்பினரின் மனதைக் கவரும் வகையில் சலுகைகளை கொடுக்கிறது.
அதேபோன்று ஓ.எம்.பி மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு களை கொண்டு வந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் தாய்மார்களின் போராட்டத்தை மழுங்கடிக்க செய்ய நினைக்கிறது.
எது எப்படி இருந்தாலும் எங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
எனவே பல்கலைக்கழக மாணவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு எமது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என்று மனுவல் உதயச்சந்திரா மேலும் தெரிவித்தார்.