LOADING

Type to search

இலங்கை அரசியல்

வவுனியா இரட்டைக் கொலை: சிறையில் தொலைபேசி பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

Share

ந.லோகதயாளன்

வவுனியாவையே உலுக்கிய இரட்டைக் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேநபர் சிறைச்சாலையிலும் சர்வ சாதாரணமாக தொலைபேசி பாவித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சிறையில் இருந்த சந்தேகநபர் தினமும் ஓர் பெண்ணுடன் 90 நிமிடங்கள் வரையில் உரையாடியுள்ளதோடு மேலும் பலருடன் 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் தற்போது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்து அவ்வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வீசி தாக்கியதுடன், வீட்டிற்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்தனர்.

சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர்களான கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மரணமடைந்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சம்பவத்தின், பிரதான சந்தேக நபர்கள் உட்பட 5 பேர் வவுனியா சிறைச்சாலையிலும், ஒருவர் அநுராதபுரம் சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருக்கும் பிரதான சந்தேக நபரே இவ்வாறு தொலைபேசி பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

தற்போது சந்தேக நபர் பயன்படுத்திய கைத்தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இந்த விடயத்தை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து நேற்று வியாழக்கிழமை (24) அதிகாலை மேற்கொண்ட திடீர் சோதனையில் பிரதான சந்தேக நபரிடம் இருந்து கைத்தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது.

அந்த தொலைபேசி ஊடாக 3,292 வெளிச் செல்லும் அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் 3 அழைப்புக்கள் குறித்த நபரின் மனைவிக்கும், பிறிதொரு பெண்ணுக்கும் ஒன்றரை மணித்தியாலப்படி 35 தடவைகள் கதைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று குற்றப் புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இலங்கை சிறைச்சாலைகளில் கைதிகள் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக நிலவினாலும், அது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் ஏதுமில்லை என்ற விமர்சனங்கள் தொடருகின்றன.